“வேள்பாரி” படிக்கத் திகட்டாத சரித்திர புனைகதை புத்தகம் | சு.வெங்கடேசன்

ஒரு புதிய தமிழ் வாசிப்பாளர் “பொன்னியின் செல்வன்” புத்தகத்தைத்தான் முதலில் வாசிக்கத்துவங்குவார். அதற்குக் காரணம், அதுதான் அதிகப்படியான பேர் பேசிக்கொள்ளும் புத்தகமாக இருக்கும். அதுபோன்றதொரு இடத்தை சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள வேள்பாரி புத்தகமும் பிடித்துள்ளது என்பதே எதார்த்தமான உண்மை. புத்தக விற்பனையங்களிலும் கண்காட்சிகளிலும் வேள்பாரி புத்தகத்தை சுற்றி ஒரு கூட்டம் குழுமியிருப்பது அதன் வாசகர் வட்டம் விரிவடைவதற்கு ஓர் சான்று.


வேள்பாரி கதை சுருக்கம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக இருப்பது வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. காடுகள் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்பதனை பாரி உணர்த்திருந்தபடியால் அன்பால் அவன் கீழ் அனைவரும் செல்லும் விதத்தில் அன்பால் ஆட்சி செய்கிறான். இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மூவேந்தர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான். 

அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. இதனால், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன். பாரியை மலையைவிட்டு கீழே வரச்செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்துவைக்கிறான். பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் நடத்தும் இந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இறுதி அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது.


வேள்பாரி விமர்சனம்

வேள்பாரி புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஓர் காரணம் இருக்கும் அந்தப் புத்தகத்தை விரும்புவதற்கு. பின்வரும் புத்தக விமர்சனத்தை மித்ரா வெங்கட் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதையே உங்களுக்கு தருகிறேன் . 

 

முருகன் வள்ளியிலிருந்து தொடங்குவதா; இல்லை, ஆசான் கபிலர்; இல்லை, கதையின் நாயகன் பாரி,  இல்லை என்னை பெரிதும் கவர்ந்த நீலன் இருந்து தொடங்குவதா என்று பெரும் குழப்பம் அடைந்தேன்.

வேள்பாரியில் என்னைக் மிகவும் ஈர்த்தது ஒவ்வொரு  பெண்களையும் அதன் ஆசிரியர்  சு. வெங்கடேசன்  அறிவுக்கூர்மை மிகுந்தவர்களாகவும், முடிவு எடுக்கும் திறன் வாய்ந்தவர்கள் ஆகவும் சுதந்திரமானவர்கள் ஆகவும் ஆண்களின் சம பங்கு வகிப்பவர்கள் ஆகவும், மிகச்சிறந்த இணையர்களாகவும் காண்பித்திருக்கிறார்.

 

வேள்பாரியில் பெண்கள் அறம் சார்ந்து, ஆளுமையோடு , கற்றதும் பெற்றதுமாய்  

சேகாரம் ஆன அறிவினைக் கொண்டு சுதந்திரமாய்  தங்களின் செயல்பாடுகளால்  தங்கள் குலம் செழிக்க துணை நிற்கிறார்கள். வேள்பாரி நாவலில் கூறப்பட்ட பெண்களின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் இந்த புதினம் முழுவதும் சுதந்திரமாகவே உலாவுகின்றனர்.

 

கொற்றவையே முதன்மை தெய்வமாக வணங்கப்படுகிறது, பறம்புக்குடிகள் தாய் வழிச் சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் பெண்மையைப் போற்றுபவர்களாகவும்  இருக்கிறார்கள். போர் சார்ந்த முடிவுகள் தவிர பறம்பின் மற்ற எந்த முடிவுகளும் பறம்பு பெண்களின் தலையீடு இல்லாமல் எடுக்கப்படுவதில்லை . அவர்களுக்கு பறம்பில் சம உரிமை அளிக்கப்படுகிறது. குலநாகினிகளே அதற்கு பெரிய சாட்சிகளாய் உள்ளார்கள்.

 

இணையைத் தேர்வு செய்வதில் அவர்களுக்கு தரப்படும் சுதந்திரம் வேறெங்கும் காணமுடியாதது.

கல்வி கற்றலிலும் அவர்களுக்கான இடம் தரப்பட்டிருக்கிறது. கொடிக்குலத்தின் குல மகளான வள்ளி அழகில் சிறந்த ஆண்மகன் முருகன் தன்னை கண்டு காதல் கொண்டு திரிகிறான் என்பது அறிந்தும் மன உறுதி நிலைப்பாடால் தன் வேலை எதுவோ அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாள்.

 

ஆதினி தன் அறிவினால் பறம்பின் தலைவன் பாரிக்கே புத்தி கூறுகிறாள். பல்வேறு சூழ்நிலையிலும் அவனுக்கு உறுதுணையாக துணை நிற்கிறாள். அங்கவையோ  போர்ச்சூழலில் தன் சமயோசித புத்தியால் உதிரனைக் காத்து பறம்பின் பெரு அழிவைத் தடுக்க பாரிக்கு தகவல் தருகிறாள்.


மயிலா தன் காதலன் நீலன் மீது கொண்ட காதலால் அவன் மீளும் நாள் வரை மன உறுதி கொண்டிருக்கிறாள்‌. பறம்பின் பெண்ணொருத்தி தனக்கிருக்கும் காடு பற்றிய பேரறிவு கொண்டு மதம் கொண்ட யானையை சிறிய செடி கொண்டு அமைதி படுத்துகிறாள். பொற்சுவையோ தன் அறிவுத்திறன் கொண்டு வேள்பாரியின் உயிரைக் காக்க தன் உயிரையே தியாகம் செய்கிறாள்.

செம்பா  தன் குலம் அழித்தவனை கொல்லும் துணிவை பெற்றிருக்கிறாள். இப்படி வேள்பாரியில் இடம்பெற்ற பெண்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், சமயோசித புத்தி உடையவர்களாகவும், ஆளுமைத்திறன் கொண்டவர்களாகவும், காடு பற்றிய பேரறிவு உடையவர்களாகவும், வலிமையானவர்களாகவும் இருக்கிறார்கள்.


இனி கதையைப் பற்றி

பாரி என்ற மலைமனிதன் முல்லைக்கு தேர்கொடுத்தான் என்ற கதையின் வழியாகவே பெரும்பாலும் தமிழ் நிலப்பரப்பெங்கும் அறியப்பட்டிருந்தான். அவன் கொடைத்திறனைப்பற்றித்தான் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவன் வீரம் பற்றியோ, காதல் பற்றியோ,

நட்பு பற்றியோ, அறிவுத்திறன் பற்றியோ, ஆளுமை பற்றியோ அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் வீரயுகநாயகன் வேள்பாரி அவன் இத்தமிழ் நிலப்பரப்பின் பேரதிசயம் என அவன் புகழை கொடையை வீரத்தை அன்பை ஆளுமையை விவரிக்கிறது.

 

பாரி என்ற மலைமனிதன் வேளீர்குலத்தை சார்ந்தவன். அவன், அவன் சார்ந்த மலைமக்களையும் நிலப்பரப்பையும் ஆள்கிறான் என்பதனை தாண்டி நேசிக்கிறான் என்பதே உண்மை. காடு எல்லோருக்குமான வாழ்விடம் அதை யாராலும் ஆள முடியாது. அதிகாரம் இல்லாத ஒரு  அரசாங்கமே பறம்பை பாதுகாக்கிறது. அன்பினாலேயே அங்கு ஆட்சி நடத்துகிறான் பாரி.

 

ஆசையும் கோபமும் சோகமும் அவன்பால் கொண்ட அன்பினாலேயே மக்கள் அவனை பின்தொடர்கிறார்கள். அரசனின் ஆசையை தீர்க்க அரச பணியாட்கள் வேலை செய்வார்கள்

ஆனால் பறம்பில் பாரியின் மீது கொண்ட அன்பால் கபிலருக்கு விருந்தாக்க அறுபதாம் கோழிக்கு ஆசைப்பட்டு அது கிடைக்காத நாட்களில் அதன்மீது கோபப்பட்டு பாரியின் அன்பிலேயே ஆட்கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கான சுதந்திரத்தையும் பறம்பினருக்கு அவன் கொடுத்துள்ளான் ஆதலால் தான் கோளூர்சாத்தானின் கையை வெட்டியபோதும் அவன் கொண்ட நம்பிக்கை முடியனை கேள்வி கேட்கவில்லை.

 

தன்னை தஞ்சமென வந்தவர்களையும் தாயென காக்கிறான் அதான் காரணத்தினால் பதினாறு குலங்களின் எஞ்சிய அத்தனை பேரும் மகிழ்ச்சி பொங்க வாழ்கிறார்கள் பறம்பினில். மதங்கர்களுக்கு கொல்லிக்காட்டு விதை தந்ததும், மழவன்குடியினருக்கு சோமபானம் தந்ததும், முல்லைக்கு தேரை தந்ததும் என எல்லாக்கொடைகளுமே  உயிர்கள் மீது கொண்ட அன்பால் தான். தமிழை உயிர்போல் எண்ணுகிறவன் பாரி ஒரு தலைவனாக இருந்து கொண்டும் ஒரு புலவரை தலைமேல் தூக்கிக் கொண்டாடும் பேரன்பை கொண்டுள்ளான் அவர்மீது அன்பு பாராட்டி அறுபதாம் கோழிக்கு அலைந்து திரிந்ததும் ஒளிவாள் முன் நிறுத்தியதும் பின் நண்பனாகி குளிர் தாங்காதவருக்கு பேரெலி மயிர் போர்வை செய்யச்சொன்னதும் வண்டுகடி மரப்பட்டை பூச்சை பூசச்செய்ததும் எல்லாம் அன்பாலேயே சாத்தியம்.

 

அதே பாரி தான் தேவாங்கு திருடப்பட்டதை அறிந்து சினம் கொண்டு அதற்கேற்ப செயலாற்றிய வீரம் இருபெரும் காட்டெருமைகள் சண்டை இடுவது போல் காலம்பனுடன் போர்புரிய வைத்து அருகில் இருந்தவர்களையே பயமுறுத்தியது. பின் அவன் தன் வேளீர்குலம் என அறிந்து அவர்களுக்காக கதறி அழும் சோகமும் ஒரு தலைவன் என்பதை தாண்டி மாமனிதன் என மக்களுக்கு உணர்த்துகிறது.

 

ஆதினியுடன் காதல் கொண்டு திருமணம் நடந்த தருணத்தில் யாரும் கண்டிராத அதிசயத்தை(வெண்சாரை) தன் காதலிக்கு காட்டி அவளுக்கு வேறேதும் தீங்கு ஏற்படாது குழந்தையாய் தாங்க காதலின்பால் கொண்ட அன்புதானே காரணம். மகளிடன் கேள்வி கேட்டு அதற்கான பதிலை கேட்டபின் ஆதினியிடம் இவ்வாறு சொல்வான் பாரி “குழந்தைகளுடன் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும் போதும் தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்” என்பான். இது என்ன சொல்லியும் ஈடுசெய்ய முடியாத பாசம் அல்லவா‌.

“இயற்கையை கொடுக்கிறது நாம் வாழ்கிறோம். அத்தகைய இயற்கையை கெடுக்க நினைப்பவர் யாராக இருந்தாலும் பறம்பின் ஈட்டி அவர்களுக்கு எதிராக பாயும்”என்ற பாரியின் வார்த்தைகள் போலவே

தேவாங்கு விலங்கிற்காக இம்மாபெரும் போரில்  பங்கேற்று ஏராளமான மாவீரர்களை இழந்து யாரும் பார்த்திராத வீரத்தினையும் அறிவையும் வெளிக் காட்டி போரிட்டு வென்று இயற்கையின் சமநிலையை நிலைநாட்டுவதெல்லாம் இயற்கை மீது கொண்ட அன்பாலும் இயற்கையை பற்றிய பேரறிவினாலுமே சாத்தியம்.

 

அரிமான்களையும், காடர்களையும் போரில் பங்கேற்க அனுமதிக்காத காரணமும் இயற்கையை காக்கும் எண்ணத்தில் தானே அத்தகைய சமயோசித புத்தி கூர்மை எல்லோருக்கும் வாய்த்திராது அது பாரிக்கு மட்டுமே சாத்தியம். தன்னை தஞ்சம் அடைந்த இனத்தின் குலத்தவனை(நீலனை) காக்க தன்னை இழக்கவும் முற்படும் பண்பு எல்லோருக்கும் வாய்க்காது. துரோகியையும்(ஈங்கையன்) ஏற்று மன்னிக்கும் துணிவு பாரிக்கு மட்டுமே கைகூடும் பழக்கம். தன் நாட்டிற்காய் உயிரிழந்த ஈகையாளிகளை(இரவாதன்,தேக்கன்,திசைவேழர் மற்றும் பொற்சுவை) மதித்து அவர்களை தெய்வமாகக்கும் குணம் என எதற்கும் ஒப்பில்லாதவன் வேள்பாரி.

 

இதை அவன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் “அறம் காக்கும் தெய்வங்கள் எம்மை ஆளட்டும்,

எம் நிலத்தை ஆளட்டும்” என்றவன். அத்தகைய தலைவனை கொண்டாடிக் தீர்ப்பது நம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் வரம் அல்லவா. “மொழியாலும் உணர்வாலும் மதம்பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு காவியத்தை உருவாக்க முடியும்”-வெய்யில் . நிதர்சனமான உண்மை! 

வேள்பாரி ஒரு பேரனுபவம்!

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *