“கடவுள் கற்ற பாடம்” புத்தகம் வாசிக்க வேண்டிய கதைகளின் தொகுப்பு | சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர்

10 முன்னனி பிரெஞ்சு படைப்பாளிகளின் 11 கதைகள் இந்த “கடவுள் கற்ற பாடம்” என்ற புத்தகத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இதனை தமிழாக்கம் செய்தவர் சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர். அதிலே ஒரு கதைதான் பெர்நார் வெர்பெர் எழுதிய கடவுள் கற்ற பாடம் என்ற கதை. அதுவே புத்தகத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.



கடவுள் கற்ற பாடம் என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு மஞ்சுநாத் என்ற புத்தக வாசிப்பு ஆர்வளர் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள கருத்துக்கள் தான் இங்கே தரப்பட்டுள்ளன. 

எங்கள் சிறந்த வாடிக்கையாளுருக்கு – ஆன்றி த்ரேயா

மரணமடைந்தவர்களுக்கு சாமந்தி மலர் மாலைகள் கடைகளில் வாங்கும் போது கடைக்காரரும் சரி, வாங்குபவோரும் சரி பெரியளவில் பேரங்கள் பேசுவதில்லை. இழப்புக்கு மாலை வாங்குபவரிடம் இருக்கும் கசப்பை விட விற்பவருக்கும் மிகுதியாக கசப்பு இருக்கும். இதுவொரு உளவியல் சிக்கல். ஒருவரின் மரணத்தால் தனது பிழைப்பை நகர்த்த வேண்டிய சூழல். உலகம் முழுவதும் மரணம் போல் இதுவும் தவிர்க்க முடியாத பொது உணர்வு. பாரீசில் மலர்வளையங்கள் விற்பனைக்கடை நடத்தும் தம்பதிகளை நாடி ஒரு வாடிக்கையாளர் ஒரே சமயத்தில் தாத்தா, தந்தை, பெரியப்பா, சித்தப்பா, மாமா, மருமகன், பேரன்… என 12 உறவுகளின் பெயரில் குறிப்பாக ஆண் உறவினர்கள் பெயர் வில்லைகள் பொறித்த இறுதி சடங்கிற்கான மலர் வளையங்களை வாங்கி செல்கிறார். ஆனால் இப்படி ஒரே சமயத்தில் மரணம் நிகழ்ந்ததற்கான செய்திகள் வரவில்லை… விந்தையான அந்த  வாடிக்கையாளரை கதை பின் தொடர்கிறது. துவக்கம்  போல் முடிவு திகைப்பும் நெகிழ்வும் கலந்து வியக்க வைக்கிறது.

ஆன்றி த்ரேயா எழுதிய “கைகள்” என்ற கதையும் இத்தொகுப்பில் உள்ளது. அழகு நிலையத்தில் ஆண்களின் நகங்களை சீராக்கி அழகுபடுத்தும் இளம்பெண் தன் எதிர்கால கனவுகளை அதே சமயம் தனது தொழில் மீதான காதலுடன் எதிர்கொள்கிறாள் என்கிற வித்தியாசமான வகையில் கதை நகர்த்தப்படுகிறது.

தோளின் மீது ஒரு கை – மிஷேல் லுயி

 

நடைபாதையில் தனது சொந்தக் கால்கள் மூலம் நடந்து செல்பர்கள் அதற்காக எதிர்காலத்தில் உரிமம் பெற வேண்டும் என்கிற பீதியை கிளப்புகிறது.

கடவுள் கற்ற பாடம் – பெர்நார் வெர்பெர்

 

பல உலக கடவுள்கள் இதில் அறிமுகமாகிறார்கள். அடிப்படை நிலையிலுள்ள ஒரு இளம் கடவுள் தனது பணியில் உள்ள சவால்களை பற்றி எதார்த்தமாய் பேசுகிறார். அரசியல் மற்றும் நீதி சிந்தாந்தங்களை நீக்கி விட்டால் இதுவொரு புதிய சிந்தனையில் உருவான மாறுபட்ட கதையாக இருந்திருக்கும். இறுதியில்  மூத்த கடவுளான விஷ்ணு இளம் கடவுளிடம் கூறுவதாக ஆசிரியர் எழுதியுள்ளார்.”சுவாரசியமான இந்த கடவுள் தொழிலில் நாம் மக்களுடன் விளையாடுகிறோம். ஆனால் நம்மைக் காட்டிலும் பெரிய கடவுள் ஒருவர் நமக்கு மேல் இருந்து கொண்டு நம்மை இயக்குவதைப் பற்றி எப்போதாவது நினைத்து பார்த்ததுண்டா?”

ழுயில் சித்தப்பா – கி தெ மொப்பசான் (1850-1893)

 

கதைக்கு வலுவான மையப்புள்ளி தேவையில்லை அது விவரிக்கப்படும் விதத்தில் அது வாசகனை வசீகரித்துக்கொள்ளும் என்பதற்கு உதாரணமான கதை. ஒரு பிச்சைக்காரனுக்கு மிதமிஞ்சி அளிக்கும் அன்பளிப்பின் கரிசனத்திற்கு பின்னால் உள்ள காரணம் கதையாக நீள்கிறது. மொப்பசானின் காலம் கடந்து நிற்கும் கதைகளில் இதையும் சேர்க்கலாம்.

சிலை – மாஸேல் எம்மே (1902 – 1967)

இவர் எழுதிய புகழ்பெற்ற

“சுவரை ஊடுருவச் செல்பவன்”

(Le Passe-Muraille) சிறுகதையில் வரும் கதாநாயகன் ‘துய்தேய்’ க்கு பாரீஸ் நகரத்தில் சிலை வைக்கப்பட்டு அவ்விடம் மர்ஸேல் எம்மே சதுக்கம் என்று அழைக்கப்படுகிறதாம். என்னவொரு வியப்பான தகவல். ஒரு எழுத்தாளுருக்கு அவர் எழுதிய சிறுகதையின் மூலம் இப்படியொரு பெருமையா…!?

இந்த எழுத்தாளர் இந்த தொகுப்பிலுள்ள சிலை என்ற சிறுகதையில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாளனுக்கு வைக்கப்படும் சிலையை மையமாக வைத்து எழுதுகிறார். துரதிஷ்டவசமாக அந்த கண்டுபிடிப்பாளன் உயிரோடு பிச்சைக்காரனாக திரிந்து கொண்டிருக்கிறான். சிலைகள் சாலையில் முளைத்த தேவையில்லாத ஆனிகள் மட்டுமல்ல… சிலையாக இருப்பவர் உயிரோடு வந்தாலும் அந்த சிலையால் அவருக்கு பத்து பைசா கூட பிரயோசனமில்லை.

சமூக அக்கறை+நகைச்சுவை = சிறந்த கதை.

 

சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் (1963) புதுச்சேரியை பூர்வமாக கொண்டவர். பிரஞ்சுப் பேராசிரியர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். தீவிரமான வாசகர். சுவாரசியமான கதைச்சொல்லி. பேசுவதற்கு இனிமையான மனிதர். இவரது மொழியாக்கம் எளிமையான வாசிப்புத் தன்மையை உருவாக்குபவை. சமீபத்தில் உல்லாசத் திருமணம் நாவலுக்காக பிரஞ்சு அரசின் மொழிப்பெயர்ப்பிற்கான உயரிய இலக்கிய விருத்தினை பெற்றிருக்கிறார்.

கடவுள் கற்ற பாடம்

முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2015

நற்றிணை பதிப்பகம்

பக்கங்கள்: 112, விலை: 90

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *