இமையம் எழுதிய பெத்தவன் நாவல் | சாதிய படுகொலையில் பெற்றவர்களின் பரிதாபநிலை

மாற்று சாதியை சேர்ந்த ஆண் பெண் இடையே காதல் மலர்ந்தால் அங்கே சாதிய படுகொலைகள் நிகழ வாய்ப்பு உண்டு. அப்படி நடக்கும் சாதிய கவுரவ படுகொலைகளில் பல சமயங்களில் பெற்றோர்களின் பங்களிப்பு உள்ளதாக காட்டப்படுகிறது. தாங்கள் நேசித்து வளர்த்த பிள்ளையை கொல்ல உண்மையாலுமே பெற்றோர்களின் மனம் ஒப்புக்கொள்ளுமா? பெற்றோர்களை இந்த சாதிய சமூகம் எப்படி கட்டுப்படுத்துகிறது? மாற்று சாதி பையனை காதலிக்கும் பெண்ணை அடுத்த நாள் ஊரே சேர்ந்து கொல்ல முடிவெடுத்த பின்பு வீட்டிற்கு செல்லும் அந்தப்பெண்ணின் அப்பா எடுக்கும் அதிரடி முடிவு….பெற்றவர்களின் உண்மையான பிரதிபலிப்பாய் நமக்குத் தெரிகிறது. வாசிக்கும் கண்களை குளமாக்கி மனதை பிசைந்து எடுக்கும் உண்மையான சம்பவங்களின் பிரதிபலிப்பு இந்த நாவல். கண்டிப்பாக நீங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. 

இமயம் அவர்கள் எழுதிய கோவேறு கழுதைகள் என்ற நாவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனைப்போலவே சமூகத்தில் நடக்கும் அவலங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க தன் பேனா முனையை பயன்படுத்தி தொடர்ச்சியாக நாவல் எழுதி வருகிறார். அதிலே முக்கியமான ஒன்று தான் “பெத்தவன்” என்கிற இந்த நாவல். இந்த நாவலின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள இந்த புத்தகத்தில் தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதியிருக்கும் முன்னுரையை உங்களுக்கு தருகிறேன்.

இமையம் எழுதிய பெத்தவன் நாவல் PDF Download

கோவேறு கழுதைகள் நாவலின் மூலம் தமிழ் நவீன இலக்கியப்பரப்பில் அழுத்தமான தடம் பதித்த எழுத்தாளர் இமயம் அவர்களின் நெடுங்கதையான பெத்தவன் மிக முக்கியமான ஒரு காலத்தில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான கதையாகும். வட மாவட்டங்களில் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கும் சாதிய கட்ட பஞ்சாயத்து முறை தன் சாதித் தூய்மையைப் பாதுகாக்க எடுக்கின்ற பல மனித உரிமை மீறல் கொடுமைகளை இக்கதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. 

 

காதலுக்கு எதிராக ஆதிக்க சாதிகளை சேர்ந்த சில தலைவர்கள் இன்று கூட்டணி அமைத்து தமிழகமெங்கும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டும் பேசியும் வருகின்ற இன்றைய சூழலில் இக்கதை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் பல காதல் ஜோடிகள் சாதிய சக்திகளால் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கண்ணகி, முருகேசன் இருவரும் பெற்றவர்களாலும் மற்றவர்களாலும் காதுகளில் விஷம் ஊற்றி கொல்லப்பட்ட சம்பவம் நாடறிந்த கதையாகும். 

 

சமீபத்தில் தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி, கொண்டம்பட்டி மற்றும் அண்ணாநகர் தலித் கிராமங்கள் கொள்ளையடிக்கப்பட்டு அணைத்து வீடுகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதை அதிர்ச்சியுடன் தமிழகம் பார்த்துக்கொண்டிருந்தது. தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்னும் இளைஞனை திவ்யா என்கிற வன்னிய சாதிப்பெண் விரும்பிக் காதலித்து காவல்துறை முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.  அதையடுத்து பெண்ணின் தகப்பனார் நாகராஜன் தற்கொலை செய்துகொண்டார். அதனால் ஆவேசமடைந்து 2000 பேர் திரண்டு வந்து மூன்று தலித் கிராமங்களை கொள்ளையடித்து தீக்கரையாக்கி சென்றனர். திருமணம் நடந்து 41 வது நாளில் நாகராஜன் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? நடந்தது நடந்து போச்சு என்று தன் இயல்பு வாழ்கைக்குத் திரும்பியிருந்த நாகராஜன் திடீரென்று 41வது நாளில் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்கிற கேள்விக்கு பெத்தவன் கதை விடை சொல்கிறது. 

 

பிரச்சாரமாக இல்லாமல் அதிநுட்பமான மனப்போராட்டங்களுக்கூடாக ஆகச்சிறந்த அழகியலோடு இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது. உயிர்மை இலக்கிய இதழில் வெளிவந்த இக்கதையை படித்துவிட்டு வண்ணதாசன் உள்ளிட்ட பல மூத்த படைப்பாளிகள் மிக முக்கியமான கதையை இமையம் எழுதிவிட்டார் என்று கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர். 

 

இக்கதை அச்சாகி ஓரிரு மாதங்களுக்குப் பின் தர்மபுரியில் நடந்த அழித்தொழிப்பு இக்கதையில் எழுதப்பட்டது போலவே நடந்தது. என் மனம் அதிர்ச்சியில் உறைந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கலைஞன் தன் அகக்கண் கொண்டு நடப்பதையும் நடக்கப்போவதையும்கூட துல்லியமாகத் தன் படைப்பில் கொண்டுவர முடியும் என்பதற்கான ரத்தசாட்சியாக பெத்தவன் கதை நம் முன்னே பிரசன்னமாகி கம்பீரமாக நிற்கிறது. 

 

அக்டோபர் மாதத்தில் ஒருநாள் இக்கதையை மட்டும் ஒரு சிறுநூலாக வெளியிட்ட நிகழ்வில் நானும் விருத்தாசலத்தில் கலந்துகொண்டேன். நவம்பர் மாதத்தில் அளிக்கப்பட்ட நத்தம் காலனியில் நான் தோழர்களோடு நின்று கொண்டிருந்தேன். 

 

சமூக நிலகழ்வுகளை படைப்பாக்கும் வித்தை குறித்தெல்லாம் பல பட்டறைகள் நடத்தி இளம் படைப்பாளிகளுக்குக் கற்றுக்கொடுக்க போராடிக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக நடப்பும் புனைவும் கலந்த அற்புதமான படைப்பாக பெத்தவன் கதை வந்துள்ளது. 

 

ஒரு கலைஞன் தான் வாழும் சமூகத்துக்கும் காலத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமை குறித்து நாளெல்லாம் நாம் பேசியும் எழுதியும் வருகிறோம். இமையம் பிரச்னைக்குரிய அதே நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டும் துணிச்சலாகவும் துல்லியமாகவும் தன் காலத்தின் வாழ்க்கையை அதன் குரூரத்தை நம் மனமெல்லாம் கரையும் விதத்தில் இப்படைப்பை வெளியிட்டுள்ளார். கண்களில் நீர் திரையிடல் இக்கதையை வாசித்து முடிக்க முடியாது. 

இக்கதை பரவலாக பட்டி தொட்டியெல்லாம் சென்று சேர வேண்டிய ஒன்று என்பதால் பாரதி புத்தகாலயத்தின் மூலமாக இது வெளியிடப்பட்டால் மட்டுமே அது சாத்தியம் என்கிற நம்பிக்கையோடு அவர் இக்கதையை எமக்கு அளித்தார். அவருக்கு அவருடைய சமூக அக்கரைக்கு வாழ்த்துக்கள். தமிழகமெங்கும் இக்கதையை இப்போதே கொண்டு செல்வோம். அன்புடன் தமிழ்ச்செல்வன். 

“செல்லாத பணம்” எளிய நடையில் எழுதப்பட்ட சிறந்த நாவல் | PDF DOWNLOAD

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *