சாவர்க்கர் – காந்தி – முதல் சந்திப்பில் நடந்தது என்ன? | Savarkar Gandhi First Meet
சாவர்க்கர் – காந்தி – முதல் சந்திப்பில் நடந்தது என்ன?
அகிம்சையை தலையாய விசயமாக கருதி மக்களின் உயிரை இழக்காமல் சுதந்திரத்தை பெற விரும்பிய மஹாத்மா, போர் செய்து உயிரை கொடுத்தேனும் சுதந்திரத்தை பெற விரும்பிய சாவர்க்கர். இவர்களுடைய உரையாடலை இங்கே காண்போம்.
சாவர்க்கர் என்ற பெயர் அண்மையில் அடிக்கடி புழக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவரைப்பற்றி பேச்சு எழும்போது காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டவர் என்பதைத் தாண்டி பெரிய அளவில் தகவல்கள் பொதுமக்களிடத்தில் கிடைக்கவில்லை. காரணம் அவரைப்பற்றி தமிழ் மொழியில் சில புத்தகங்களே எழுதப்பட்டு இருக்கின்றன.
இப்படி பெரும் ஜனங்களால் எதிர்க்கவும் கொண்டாடவும் படுகின்ற வீர் சாவர்க்கர் இளமையில் எப்படி இருந்திருப்பார்? எந்த சூழலில் அவருடைய மனநிலை மாறி இருக்கும்? அவர் முஸ்லீம் மக்களுக்கு எதிரியா? காந்தியின் கொலையில் அவருக்கு பங்களிப்பு உண்டா? என்பது போன்ற தகவல்களை ஆராய முற்பட்டபோது கிடைத்தது தான் இலந்தை சு. ராமசாமி அவர்கள் எழுதியிருக்கும் “வீர் சாவர்க்கர் – வீரம் வீரம் மேலும் கொஞ்சம் வாழ்க்கை” என்ற புத்தகம். நான் அந்த புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் நமது வாசகர்களுடன் அதுகுறித்து பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு அதன் சில பகுதிகளை உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன்.
இங்கிலாந்தில் ஏற்கனவே சாவர்க்கர் அவரது ஆதரவாளர்களுடன் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கும் போது மஹாத்மா காந்தி அங்கே வருகிறார். அப்போது சாவர்க்கரின் நண்பர்கள் ஏற்பாட்டின் பேரில் காந்திஜியை சந்திக்கிறார் சாவர்க்கர். இவர்களுடைய முதல் சந்திப்பில் இருவேறு கருத்து கொண்டவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டுக்கொள்வது அப்பட்டமாக தெரியும். அப்போது அது கருத்து மோதல் மட்டுமே.
‘தென்னாப்பிரிக்காவிலிருந்து மிஸ்டர் காந்தி வந்திருக்கிறார். அங்குள்ள மக்களின் நிலையை பிரிட்டிஷ் அரசுக்கு எடுத்துச்சொல்வதற்காக வந்திருக்கிறார். அவரை நான் சந்தித்தேன்’ என்றார் ஐயர் [சாவர்க்கருக்கு நெருக்கமானவர்] ‘நம் இயக்கத்தைப் பற்றிச் சொன்னீர்களா?’ என்று கேட்டார் ராஜன் [சாவர்க்கருக்கு நெருக்கமானவர்] ‘சொன்னேன் அவர் ஒரு அகிம்சாவாதி. நான் எவ்வளவுதான் சொன்னாலும் அவரது கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார்.அவர் நம் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதபோதும் அவரிடம் சத்தியம் இருக்கிறது. அவருடைய முகத்தில் உண்மையின் ஒளி தெரிகிறது. வெறும் பசப்பு வார்த்தைகள் பேசுவதில்லை. தெளிவாக பேசுகிறார்’ ‘அவரை எங்கே பார்த்தீர்கள்?’ ‘பல இடங்களில் விசாரித்தேன். தென்னாபிரிக்காவில் அவர் செய்த துணிச்சலான செய்கைகளை கேள்விப்பட்டதில் இருந்து அவரைக் காணவேண்டும் என்று துடித்தேன். லண்டன் வந்திருக்கிறார் என்று அறிந்து பலரிடமும் விசாரித்தேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பல தலைவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டேல்களிலெல்லாம் விசாரித்தேன். இரண்டு மணி நேரம் அலைந்து திரிந்த பிறகு ஒரு சிறிய சந்தில் சிற்றுண்டி சாலை ஒன்றை நடத்திவரும் இந்தியர் ஒருவர் வீட்டில் அவரைச் சந்தித்தேன்’ ‘அவரை நமக்கு ஆதரவாக மாற்ற முடியுமா?’ ‘தெரியவில்லை’ ‘சாவர்க்கரை அவரிடம் அழைத்துச்செல்ல வேண்டியதுதானே. அவர் பேச்சைக்கேட்டு அவர் நம்மை ஆதரிக்கலாமல்லவா?’ ‘நீ சொல்வது சரிதான். நாளை அவரை அழைத்துச்செல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு உறங்கச்சென்றார் ஐயர். மறுநாள் ஐயர் சாவர்க்கரை அழைத்துக்கொண்டு மிஸ்டர் காந்தியை காணச்சென்றார். சாவர்க்கர் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். காந்தி எல்லாவற்றையும் பொறுமையாகக்கேட்டார். ஆனால், தனது அகிம்சாவாதக் கொள்கையில் உறுதியாக இருந்தார். மூன்று நாள்கள் அவர்களுடைய விவாதம் தொடர்ந்தது. காந்திஜி அவர்களுடைய தேசபக்தியை மதித்தார். ஆனால், அதை வெளிப்படுத்தும் முறை சரியில்லை என்றார். காந்திஜி அவர்களின் உரையாடலின் அடிப்படையில் ‘ஹிந்து ஸ்வராஜ்’ என்றொரு புத்தகம் எழுதினார். அதில் அவ்வுரையாடல்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
காந்திஜி : உங்கள் கொள்கையை ஏற்றால் எல்லோரும் ஆயுதம் தாங்க வேண்டியதுதான் சாவர்க்கர் : எல்லாரும் ஆயுத பாணிகள் ஆக வேண்டிய அவசியமில்லை. முதலில் ஒரு சில ஆங்கிலேயரைப் படுகொலை செய்து திகிலடையச் செய்வோம். பின்னர் ஆயுதபாணிகளான சிலர் பகிரங்கமாகப் போராடுவார்கள். ஏறக்குறைய இரண்டரை லட்சம் பேரை நாம் இழக்க நேரிடலாம். ஆனால், நாட்டை திரும்ப அடைந்து விடுவோம். கொரில்லா போர்முறையைப் பயன்படுத்தி ஆங்கிலேயரை முறியடிப்போம். காந்திஜி : ஆன்மீக நாடான பாரதத்தை தெய்வத்தன்மையற்ற நாடாக மாற்ற விரும்புகிறீர்கள். அப்படித்தானே! கொலைசெய்துதான் நமது நாட்டை மீட்க வேண்டுமா? நாம் நம் உயிரைக் கொடுக்கலாம். ஆனால் மாற்றான் உயிரை எடுக்கக்கூடாது. இதுதான் தியாகம். மாற்றான் உயிரை எடுப்பதற்காக நம் உயிரை கொடுப்பது இரட்டைக்கொலை. மற்றவர்களை கொல்ல நினைப்பது கோழைத்தனம். ஆங்கிலேயனைக் கொன்றுவிட்டு நமது மக்களை பலிகொடுத்துவிட்டு நீங்கள் யாரை விடுவிக்கப்போகிறீர்கள்? இந்திய மக்கள் இத்தகைய செயல்களை விரும்பவில்லை. நவநாகரிகப் போதையில் இருப்பவர்களே இத்தகைய செயல்களை சிந்திக்கிறார்கள். கொலைமூலம் நாட்டைகைப்பற்றி அதிகாரத்துக்கு வருபவன் நாட்டை வளமாக வைத்திருக்க முடியாது.
இது எனது சொந்தக்கருத்து :சாவர்க்கரின் வரலாற்றை படிக்கும் போது அவருக்கு தேசத்தின் மீது இருந்த அப்பற்ற அன்பை உணர முடிகிறது. அவர் எப்படியேனும் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்தே தீரவேண்டும் என விரும்பியிருக்கிறார். அவர் அகிம்சா வழியை தவிர்த்து ஆயுதமேந்த தீர்மானித்தது அவர் வீர சிவாஜி உள்ளிட்டவர்களின் வீர வரலாற்றை இளமையிலேயே விரும்பியதால் கூட இருக்கலாம். பின்னாட்களில் அவருடைய செயல்பாடுகள் கேள்விக்குரியதே. அது பற்றி பின்னால் பார்க்கலாம்.
காந்தி மிகவும் அற்புதமான மனிதர். அவர் இந்த தேசத்தை அகிம்சையால் ஒருங்கிணைத்துச்சென்றார். அவர் பின்னால் இந்த தேசம் அணிவகுத்து நின்றது ஆச்சர்யமான விசயம். ஆயுதமேந்திய போராட்டம், அகிம்சை வழி போராட்டம் இரண்டும் கலந்ததே இந்திய சுதந்திர போராட்டம். இறுதியில் வென்றது அகிம்சை வழி போராட்டம் தான் என்பதனை நாம் நினைவில் வைத்துக்கொள்வோம்.
இதுபோன்ற கட்டுரைகளை படிப்பதற்கு எங்களுடைய பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள் அல்லது வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!