பாரதியார் – பாரத தேசம் கவிதை : எப்படியெல்லாம் கனவு கண்டிருக்கிறார் பாரதி
ஒருவன் வீட்டில் ஆயிரம் கிலோ தங்கம் கொட்டிக்கிடந்தாலும் அதன் பெருமை மற்றும் மதிப்பு அறியாதவரை அவன் ஏழையாகவே இருப்பான். அதுபோலவே தான் நாட்டின் பெருமை அறியாத ஒருவன் அடிமையாகவே இருப்பான்.
காலத்தால் அழியாத கவிதைகளை படைத்தவர் நம் முன்னோடிக்கவிஞர் பாரதி. அவர் வாழ்ந்த போது [ 1882 – 1921] பாரத தேசம் அடிமை தேசமாகவே இருந்தது. ஆனால் பாரதியார் பாரத தேசத்தை ஒரு அடிமை தேசமாக நினைத்ததே இல்லை. அவர் நினைத்த அந்த உயரிய பாரத தேசத்தின் உயர்வான விசயங்கள் குறித்து தனது புலமையால் சாதாரண மக்களுக்கு புரியும் விதத்தில் கவிதையாக்கினார். அவருடைய பெரும்பான்மையான கவிதைகள் சாதாரண மக்களின் மனதில் கேள்விகளை எழுப்பி அவர்களுக்கு எழுச்சியையும் நம்பிக்கையையும் தரும் விதமாகவே அமைந்திருந்தது.
பாரத நாடு தலைப்பில் பாரதியார் எழுதிய கவிதைகள்
அதற்கு காரணம், மக்களிடம் தன் தேசம் குறித்த பெருமிதம் வந்தால் தான் விடுதலை வேட்கை அவர்களது நெஞ்சத்தில் குடியேறும் என அவர் நினைத்திருக்கலாம். அப்படிப்பட்ட மாபெரும் கவிஞர் “பாரத தேசம்” எனும் தலைப்பில் ஒரு சிறந்த கவிதையை படைத்திருக்கிறார்.
பெரும்பாலானவர்கள் இந்தக்கவிதையை படித்திருக்கலாம், பாடலாகவே கூட கேட்டிருக்கலாம். ஆனால் திரும்பத்திரும்ப படித்தாலும் கேட்டாலும் சலிக்காத ஒரு கவிதை தான் இது.
மேலும் பல பாரதியார் கவிதைகள் இங்கே வாசிக்கலாம்
பாரத தேசம்
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.
2. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.
3. வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.
4. முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே.
5. சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.
6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.
7. காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.
8. பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.
9. ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.
10. குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.
12. காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.
13. சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்.
நான் கண்ட வியப்பு
இந்தப்பாடலை படிப்போருக்கு பல்வேறு இடங்களில் வியப்புகள் வரலாம். ஆனால் ஒரு பொறியியல் பயின்ற மாணவராக நான் வியந்த பகுதி 7 வது பாடலில் வரும் இந்த வரிகள் தான் “காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்”. அதாவது காசியில் புலவர்கள் பேசுவதை காஞ்சியில் உள்ளவர்கள் கேட்பதற்கு ஒரு கருவி செய்வோம் என பாடியிருக்கிறார் பாரதி. நிச்சயமாக பாரதி தொலைபேசி சாதனத்தை தான் குறிப்பிடுகிறார் என தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. தொலைபேசியை கண்டுபிடித்ததற்காக அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அமெரிக்காவின் காப்புரிமையை பெற்ற ஆண்டு 1876. அதற்கு 6 ஆண்டுகள் கழித்து 1882 ஆம் ஆண்டு தான் பாரதியார் பிறந்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் பெரிதாக யாரும் தொலைபேசியை பயன்படுத்தாத காலம்.
பாரதியார் இந்தப்பாடலை பாடியபோது இந்திய மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கோரப்பிடியில் மாட்டிக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பசியை போக்குவதே பெரும் திண்டாட்டமாக இருந்தது.இதற்கிடையில் கல்வி கற்பதோ, கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவதோ என்பது சாதாரண காரியம் இல்லை.கனவிலும் கூட அது சாத்தியப்படாத ஒன்று என்றே பெரும்பாலானோர் நினைத்திருந்தனர். இந்த சூழலில் தான் பாரதியார் இந்தியர் ஒருவர் தொலைபேசி போன்றதொரு கருவியை உருவாக்கிட முயல வேண்டும் என பாடி இருக்கிறார். அப்போது இதை மற்றவர்கள் ஏளனம் கூட செய்திருக்கலாம்.
ஆனால் ஒரு கவிஞனாக பாரதி எவ்வளவு அற்புதமான விசயத்தை பாடியிருக்கிறார். அவருடைய கனவு என்பது புலமை எனும் விமானத்தில் கட்டுங்கடங்காத தூரம் வரை சென்றிருக்கிறது என்பதை இந்த வரிகள் உணர்த்துவதாகவே நான் பார்க்கிறேன்.அந்த விமானத்தில் இந்தியர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தியர்களின் உயரம் இப்படிப்பட்டதுதான் என்பது அவர்களுக்கு தெரிவித்தார். இந்த வரிகளை படிப்பவர்களுக்கு தற்போது நாம் ஒரு அடிமை என்ற உணர்வே மறந்து போயிருக்கும். அப்போதைய காலகட்டத்தில் இந்த வரிகள் ஒரு அனிமேஷன் திரைப்படம் செய்த மாயத்தை மக்கள் மனதில் உருவாக்கி இருக்கும் என்றே நாம் நம்புகிறேன்.
இறுதிப்பாடலில் பாரதியார் உண்மையான பிரச்சனையை பேசி இருக்கிறார். “சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்” அவருக்கு அப்போதே தெரிந்திருக்கிறது சாதி எனும் கொடும் தீ தான் நம் மக்களை பிரிவினை எனும் சூழ்ச்சிக்குள் அடைக்கபோகிறது என்று. ஆகையால் தான் பெரும்பான்மையான கவிதைகளில் சாதிப்பிரிவினையை கடுமையாக எதிர்த்திருக்கிறார் பாரதியார்.
இந்தக்கவிதைகளை படிக்கும் போது உங்களுக்கு ஆச்சர்யமூட்டிய வரிகள் எவை? ஏன்? கமெண்டில் பதிவிடுங்கள்.
Super
மேலும் பல பாரதியார் கவிதைகள் இங்கே வாசிக்கலாம் https://pamarankaruthu.com/bharathiyar-kavithaigal-tamil/