மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் | Tamil Book Download
நமது கலாச்சாரத்திலும் பழக்கத்திலும் பெரும்பாலானவை தான் வடமொழி இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை நாம் இன்று வடமொழியில் இருக்கிறது என்பதற்க்காக மறுக்கிறோம். கீர்த்தனையை தெலுங்கர்களுடையது என தவிர்க்கிறோம், கோவிலா அது மூட நம்பிக்கைக்கு உரியது என தவிர்க்கிறோம்.
உலகின் மூத்த இனம் தமிழ் இனம் என்ற பெருமையை பெற்றவர்கள் நாம். அப்படிப்பட்ட நமக்கு நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ள பேரார்வம் இருக்கும் அல்லவா. அப்படி நினைப்போருக்கு பல தகவல்களை ஆதாரப்பூர்வமாக மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் எனும் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தமிழர்கள் எப்படி தங்களது கலாச்சாரங்களை, வாழ்வியல் முறைகளை சப்பை காரணங்களுக்காக தவிர்த்து வருகிறோம் என்பது குறித்தும் தனது ஆதங்கத்தை ஆதாரபூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.
இந்த புத்தகம் பின்வரும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
மறைந்துபோன தமிழர் பண்பாடுகள்
கடவுள்
இலக்கியம்
சமுதாயம்
மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் எனும் தலைப்பிற்கு கீழாக நமது முன்னோர்கள் வன்முறையாக எவற்றை குறிப்பிடுகிறார்கள், திருட்டு போன்ற தண்டனைகளுக்கு எப்படி தண்டனை கொடுத்தார்கள், நிலங்களை எப்படி நிர்ணயித்தார்கள், பிரித்தார்கள் துவங்கி சில நமது பழக்கவழக்கங்கள், மூலிகைகள் என பலவற்றையும் தொட்டிருக்கிறார்.
இரண்டாவதாக கடவுள் எனும் தலைப்பில் சிவன் துவங்கி வணங்கும் முறை, கடவுள் பூசை, மரபு வழிபாட்டின் எச்சம் போன்ற பல தலைப்புகளை ஆராய்ந்திருக்கிறார்.
மூன்றாவதாக இலக்கியம் எனும் பிரிவில் நாசிகா மூலம் எது? வசை பாடுதல், மந்திரசுவடிகள் ,வடமொழிக்கு தொண்டு செய்த தலைவர் என பல தலைப்புகளை பேசியிருக்கிறார்.
இந்த புத்தகத்தின் நான்காம் பிரிவு தான் என்னை முதலில் ஈர்த்த பிரிவு, இங்கே பல வாழ்வியல் கேள்விகளை எழுப்பி அவற்றிற்க்கான பதிலை பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்தும் வேறு பல உதாரணங்களில் இருந்தும் நமக்கு விளக்கி இருக்கிறார்.
இந்த புத்தகத்தை நான் படிக்கும் போது பெற்ற அனுபவம் :
நூலாசிரியர் கூறும் குற்றச்சாட்டு எனக்கு பிடித்து இருந்தது. நமது கலாச்சாரத்திலும் பழக்கத்திலும் பெரும்பாலானவை தான் வடமொழி இலக்கியங்களில் இருக்கின்றன. அவற்றை நாம் இன்று வடமொழியில் இருக்கிறது என்பதற்க்காக மறுக்கிறோம். கீர்த்தனையை தெலுங்கர்களுடையது என தவிர்க்கிறோம், கோவிலா அது மூட நம்பிக்கைக்கு உரியது என தவிர்க்கிறோம் என அவர் வைக்கின்ற குற்றசாட்டுகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன.
முதல் பிரிவை படிக்கும் போது ஆரம்பத்தில் அவ்வளவு சுவாரஷ்யமாக இருக்கவில்லை என்பதைப்போல தோன்றினாலும் படிக்க படிக்க நம்மவர்கள் இப்படியெல்லாமா வாழ்ந்திருக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் எழுகிறது.
இந்த புத்தகத்தில் சில சுவாரஷ்யமான விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு பழந்தமிழர் செய்த தராசு எனும் தலைப்பில் நம் முன்னோர்கள் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்திலேயே எப்படி தராசு செய்து வாழ்ந்தார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். மானசாரம் என்ற சிற்பசாத்திர நூல் வடமொழியில் இருக்கிறது. இதில் துலா என தராசு குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் தராசை துலாக்கோல் என அழைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வடமொழி நூல் என ஒதுக்கிவிட்டோம் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இதுபோலவேதான் பல தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடைசிப்பகுதியில் பல வாழ்வியல் சார்ந்த கேள்விகளை எழுப்பி அதற்காக பதிலையும் சிறப்பாக தேடி இருக்கிறார்.
முந்தைய கால தமிழர்களின் பண்பாடு மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை பல உதாரணங்களோடு தெரிவித்து இருக்கிறார். இளம் வயதினர் இந்த பிரிவை படித்து நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம்.
புத்தகம் எங்கே கிடைக்கும்
இந்தப்புத்தகம் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. நூலகத்தில் தான் நான் படித்தேன். நீங்களும் நூலகத்தில் தேடிப்படிக்கலாம் அல்லது புத்தகக்கடைகளில் கேட்டுப்பார்க்கலாம்.