உதயசந்திரன் IAS இடமாறுதல் தவறானதா? Udhayachandran IAS transferred from Education dept

நாம் பல நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு “சகாயம் IAS க்கு அடுத்தாக உதய சந்திரன் IAS கழட்டிவிட படுவாரா ? காரணம் மக்களா ?” ஓராண்டிற்கு பிறகு அது நடந்திருக்கின்றது . ஆனால் என்னுடைய நிலைப்பாட்டில் சில மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன . தவறாமல் படியுங்கள்

 

பள்ளிக்கல்வித்துறையில்  பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்ட உதயசந்திரன் IAS அவர்களை பள்ளிக்கல்வித்துறையிலிருந்து தொல்லியல் துறைக்கு இடமாற்றம் செய்திருக்கின்றது தமிழக அரசு . பல IAS அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .அரசின் இடமாற்ற உத்தரவில் சுனில் பானிவால்  ,  அசோக் டோங்கிரி போன்ற செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர் . அதனைபோலவே பல மாவட்ட ஆட்சித்தலைவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

 

Udhayachandran IAS
Udhayachandran IAS

 

ஆனால் மற்ற ஆட்சித்தலைவர்களின் இடமாறுதலுக்கோ செயலாளர்களின் இடமாறுதலுக்கோ கண்டனமோ எதிர்ப்போ எவருமே தெரிவிக்காமல் உதயசந்திரன் அவர்களின் இடமாறுதலுக்கு மட்டும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவிப்பது எதற்காக ? அது சரியா? என்கிற இயல்பான கேள்வி இங்கு எழுகின்றது

 

பல IAS அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் மட்டும் வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறார்கள் . உதாரணத்திற்கு சகாயம் , உதயசந்திரன் போன்ற அதிகாரிகளை குறிப்பிடலாம் . இவர்களை போன்றோ அல்லது இவர்களுக்கும் அதிகமான சிறப்பான  பணிகளை செய்தவர்களும் இருக்கவே செய்கிறார்கள் . இதனை மறுக்க முடியாது .

 

உதயசந்திரன் IAS மக்களால் கவனிக்கப்பட  காரணம் இருக்கின்றது?

 

அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் கீழ் பள்ளிகல்வித்துறை இயக்குனராக பணியாற்றிய உதயசந்திரன் IAS செய்த மாற்றங்களில் பல மக்களின் வரவேற்பை பெற்றன .

 

பொன்மாலைபொழுது அண்ணா நூற்றாண்டு நூலகம்

 

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் ICU வில் படுத்திருக்கும் நோயாளிபோல அசைவில்லாமல் கிடந்தது அண்ணா நூற்றாண்டு நூலகம் . பிறகு செங்கோட்டையன் உதயசந்திரன் கூட்டணி முறையான சிகிச்சை அளித்து தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு 18 வயது இளைஞரைப்போல துடிப்போடு செயலாற்றிவருகிறது . பயிற்சி வகுப்புகள் , சனிக்கிழமை தோறும் பொன்மாலைபொழுது என கலக்கிக்கொண்டிருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

 

ரேங்கிங் முறையை ஒழித்தவர்

 

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றுவிடவேண்டும் என மாணவர்களை போந்தா கோழிகளை போல அடைத்துவைத்து படிக்கவைக்கும் பள்ளிகளுக்கு சவுக்கடி கொடுத்தார்போல மாநில அளவில் ரேங்கிங் அறிவிப்பை நிறுத்தினார் . பள்ளிகளிலும் ரேக்கிங்கை வைத்து விளம்பரங்களை செய்ய தடைவிதித்தார் . இந்த திட்டம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது .

 

பாடத்திட்டங்களை மாற்றும் பணி உட்பட பல பணிகளை சிறப்பாக செய்ததினால் எதிர்கட்சியினரின் ஆதரவையும் பெற்று இருந்தார் உதயசந்திரன் .

 

இடமாற்றம் செய்தது சரியா ?

 

முதலாவது,  இந்த இடமாற்றம் உதயசந்திரன் அவர்களுக்கு மட்டுமே நடக்கவில்லை .

 

இரண்டாவது, உயர்பதவிகளில் இருப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படுவது இயல்பான ஒன்று .

 

மூன்றாவது , சில பல முரண்பாடுகள்

 

இதில் மூன்றாவது காரணத்திற்கக இடமாறுதல் நடந்திருந்தால் அதனை எதிர்க்கும் நபர்களில் நானும் இருப்பேன்

 

ஒவ்வொரு முறையும் பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும்போது செய்தியாக கடந்துவிட்டு போகும் நாம் நமக்கு தெரிந்த குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்திடும்போது எதிர்க்கின்றோம் . அப்படியானால் மற்றவர்கள் இவர்களைப்போல உழைக்கவில்லையா அல்லது மக்கள் கவனிக்க மறந்துவிட்டோமா என்கிற மிகப்பெரிய கேள்வி எழுகின்றது .

 

கவனிப்பது  தவறா ?

 

கவனிப்பது தவறல்ல , ஆனால் ஒருசிலரை மட்டும் கவனித்து அவர்களை புகழ்ந்திடும்போது மறுபக்கம் அவர்களுக்கான எதிர்ப்புகளும் உண்டாகவே செய்கின்றன . ஆட்சியாளர்கள் , அதிகாரிகள் இருவருக்குள்ளும் அது முரண்பாட்டை ஏற்படுத்திட அதிக வாய்ப்பிருக்கின்றது . தற்போது நடந்த இடமாறுதலுக்கு இந்த முரண்பாடுதான் காரணமா என தெரியவில்லை .

 

 

இந்த இடமாற்றம் இயல்பானதா  அல்லது ஏதாவது காரணத்திற்காக செய்யப்பட்டதா என்பதை விபரம் அறிந்தவர்களால்  மட்டுமே கூறிட முடியும் .

 

சிறந்த அதிகாரிகள் எங்கிருந்தாலும் சிறந்ததையே செய்வார்கள்

 

உதயசந்திரன் IAS அவர்கள் இந்த இடமாறுதலை எதிர்த்தால் அதற்கு குரல் கொடுக்கவேண்டிய கடமை நமக்கிருக்கிறது . அதேசமயம் என்ன நடந்ததென அறியாமல் அதனை எதிர்ப்பது விமர்சனம் செய்வது தவறென்றே நினைக்கிறன். (நானும் முதலில் விமர்சித்தேன் , பிறகு சிந்தித்தேன் )

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “உதயசந்திரன் IAS இடமாறுதல் தவறானதா? Udhayachandran IAS transferred from Education dept

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *