யார் இந்த வைகோ?

தேர்தல் திருவிழாவில் இந்த பெயரை உச்சரிக்காமல் எவரும் செல்ல முடியாது. அதிமுக வின் B டீம் என்று அழைக்கப்பட்டவர். திமுகவின் முதல் எதிரியாக தன்னை காட்டிகொள்ள முனைந்தவர். அப்படிப்பட்ட வைகோ என்ற மனிதனை பற்றி இந்த நேரத்தில் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

1944-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.

தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.

தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.

மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்பது தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.

உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.

அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.

அந்த வகையில் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசியல் செய்யும் தலைவராக கூட அவர் இருந்ததில்லை. தி.மு.கவை வேறு வழியின்றி அந்த எதிர்ப்பு அலை ஆட்சியில் அமர்த்தியது.

இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.

பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.

தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.

இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.[நன்றி :வினவு]

இந்த 2016 தேர்தலில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் வீழ்த்த போவதாக கூறிக்கொண்டு அனைத்து சிறிய கட்சிகளையும் தேமுதிகவையும் இணைத்து மக்கள் நல கூட்டணி என்பதை அமைத்தார். இது திமுகவினை வீழ்த்த எடுக்கப்பட்ட முடிவு என்பதை விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள். மாறாக அவர் அதிமுகவிடம் ஆயிரம் கோடிகள் பெற்றதாக சொல்லப்படுவதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் தான் அமைத்த இந்த கூட்டணியின் பயனால் அதிமுக நிச்சயம் வெல்லும் என்பதை வைகோ நிச்சயம் அறிந்திருப்பார்.

இனி வரும் காலங்களில் வைகோவின் அரசியல் வாழ்வு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியே???

நன்றி
ஸ்ரீ   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *