சானியா மிர்சாவிடம் கேட்கப்பட்ட மிக மோசமான கேள்வியும் பகிரங்க மன்னிப்பு கேட்ட செய்தியாளரும்…

மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன் சுயசரிதையை ‘ஏஸ் அகைன்ஸ்ட் தி ஆட்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இதில் தனது வாழ்வில் 5 வயதிலிருந்து நடந்த நிகழ்வுகள், டென்னிஸ் வாழ்க்கையில் தான்பட்ட கஷ்டங்கள், உலக மகளிர் இரட்டையர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடம் பிடித்தது எப்படி என்பது போன்ற தகவல்களை 40 அத்தியாயங்களாக எழுதியுள்ளார்.

இந்த புத்தகம் தொடர்பாக இந்தியா டுடே மூத்த செய்தியாளர் பேட்டி கண்டார். அப்போது சானியாவிடம் அவர் வைத்த முதல் கேள்வி “உங்களது புத்தகத்தில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது, குடும்பமாக செட்டில் ஆவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லையே?” என்பதே..

ஒரு மிக மூத்த செய்தியாளர் இப்படி கேட்டதை கேட்டு சற்று திகைத்து போன சானியா மிக அற்புதமான பதிலை அளித்து அதிரடி காட்டினார். பதிலில் “ஏன் இப்போது நான் செட்டில் ஆகவில்லையா? ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், இறுதியாக அவர் திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றால் தான் முழுமை அடைவதாக அர்த்தமா?

விம்பிள்டன் உட்பட பல்வேறு சாதனைகளைச் செய்தாலும் முதலில் திருமணம் பிறகு குழந்தை இவ்வாறு தான் ஊடகங்களின் கேள்விகள் இருக்கிறது. பெண்களைப் பார்த்தாலே ஏன் இது போன்ற கேள்விகளையே எழுப்புகிறீர்கள். ஆண் சாதனையாளர்களிடம் இது போல் கேட்பீர்களா? என சரமாரியாக பதில் கேள்விகளைத் தொடுத்தார்.

இதை சற்றும் எதிர்பாராத ராஜதீப் தனது தவறை உணர்ந்து அந்த மேடையிலேயே மன்னிப்பு கேட்டார். மேலும் ‘நிச்சயம் ஒரு ஆண் சாதனையாளரைப் பேட்டி கண்டிருந்தால் இந்தக் கேள்வியை நான் கேட்டிருக்க மாட்டேன். என் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்கிறேன்’

இருபத்தோராம் நூற்றாண்டில் சென்று கொண்டிருக்கும் நாம் இன்னும் பெண்கள் மீதான கண்ணோட்டத்தை மாற்றாமல் இருக்கின்றோம் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்..

நிச்சயம் இது போன்ற கேள்விகள் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. பெண்களை சம உரிமையுடன் நடத்துவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *