ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தமிழக அரசுக்குள்ள உண்மையான வாய்ப்புகள் என்ன தெரியுமா ?

தற்போது நடந்துவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக அரசு என்ன செய்வதென்று அறியாமல் முழித்துக்கொண்டுள்ளது. ஆம் சில நாட்களுக்கு முன்பு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று வீரவசனம் பேசினார் தமிழக முதல்வர். ஆனால் இப்போது அதே முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காவல்துறையினர் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்கி வருகின்றனர். (சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது தவறில்லை).

போராட்டம் தீவிரமடைந்துள்ள இந்த நிலையில் தமிழக அரசால் உண்மையாகவே என்ன தான் செய்ய முடியும் என்பதே நம் அனைவரின் முன்பாகவும் இருக்கக்கூடிய கேள்வி?


அவசர சட்டம் கொண்டு வரலாமா?

ஒரு மாநில அரசோ மத்திய அரசோ அவசர சட்டம் கொண்டு வர அதற்க்கு உரிமை உண்டு. ஆனால் அப்படி கொண்டுவரப்படும் அவசர சட்டம் இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகவோ அல்லது ஏற்னகனவே இருந்துவரும் சட்டத்திற்கு முரண்பட்டதாகவோ உச்சநீதிமன்றம் கருதினால் அந்த அவசர சட்டத்தினை செல்லாது என்று அறிவிக்க கூடிய அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.

நம் அனைவருக்கும் நினைவிருக்கலாம் தற்போதைய பாஜக அரசு காளைகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் செல்லாது என அறிவித்தது. காளைகளை நீக்கி கொண்டுவந்ததையே செல்லாது என அறிவித்த நீதிமன்றம் அவசர சட்டத்தையும் செல்லாது என அறிவித்தால் மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தையும் மீண்டும் அவசர சட்டம் கொண்டு வரும் வாய்ப்பையும் அது தடுத்துவிடும் .இதனால் தான் மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் கொண்டுவர தயக்கம் காட்டுகின்றது.

மத்திய அரசுக்கே இந்த தயக்கம் இருக்கும்போது மாநில அரசுக்கு இருக்காதா என்ன?

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க முடியுமா ?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில அரசானது சட்டத்தின்படியே ஆட்சி செய்திடல் வேண்டும். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய சட்ட அமைப்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஒருவேளை மாநில அரசு நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்தாத போது உத்தரவினை செயல்படுத்த மத்திய அரசின் உதவியை நாடலாம். (கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட மறுத்தது என்பதை நாம் ஒப்பிட்டு பேசிவரும் வேளையில் நாம் ஒன்றினை நினைவிலும் கொள்ளல்வேண்டும் .கர்நாடக அரசு உத்தரவினை மீற விவசாயிகளை காரணமாக பயன்படுத்திக்கொண்டது. இருந்தபோதும் உச்சநீதிமன்றத்திடம் கண்டனத்தை வாங்கிக்கட்டிக்கொண்டபிறகு உத்தரவிற்கு கட்டுப்பட்டபிறகு கொஞ்சமாவது தண்ணீரை திறந்துவிட்டது)
ஆனால் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் இப்போது தான் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடந்துவருகிறது. எனவே தமிழக அரசு சில மீறல்களை போராட்டத்தை காரணம் காட்டி செய்ய வாய்ப்புண்டு. அப்படி செய்தாலும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். எனவே தான் அதையும் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுகின்றது. இல்லையென்றால் அலங்காநல்லூரில் 5 காளைகளை திறந்துவிட சம்மதம் தெரிவித்து போராட்டத்தை கைவிட செய்திருக்கும்.

தமிழக அரசால் என்னதான் செய்ய முடியும் : 

உடனடியாக சட்டமன்றத்தினை கூட்டி கர்நாடக அரசு செய்ததை போல ஜல்லிக்கட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க போதிய நடவெடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்மானம் போடலாம்.

முக்கியத்துவம் இல்லை என்று தீர்ப்பினை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்த வேளையில் தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கொண்டு இவ்வழக்கிற்கு உடனடியாக தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்கலாம்.

சட்டவல்லுனர்களுடன் பேசி உச்சநீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல்களை பின்பற்றி  வேறு ஒரு பெயரில் பொங்கல் விழாவாக ஜல்லிக்கட்டினை கொண்டாட மசோதாவினை கொண்டுவரலாம்.

தடா (TADA) சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்ட போது அது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. ஆனால் அதே சட்டம் மீண்டும் சில மாறுதல்களுடன் பொடா (PODA )சட்டமாக கொண்டுவரப்பட்டது. இதேபோன்று சில மாறுதல்களுடன் ஜல்லிக்கட்டினை நடத்த புதிய பெயரில் சட்டமியற்றலாம். வழக்கு நிலுவையில் இருக்கும்போது இப்படி இயற்ற முடியாது. வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் சட்டமியற்றலாம்.

ஆக தமிழக அரசிடம் இப்போதைக்கு உள்ள ஒரே வாய்ப்பு உச்சநீதிமன்றத்தினை நாடி தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை விளக்கி விரைந்து தீர்ப்பினை வழங்கவேண்டும் என கூறலாம். அப்படி வழங்கப்படும் தீர்ப்பு மக்களின் உணர்வினை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தலாம். மேலும் தாங்கள் உச்சநீதிமன்ற வழிமுறைகளை கடைபிடிக்க தயாராக உள்ளோம் என தெரிவித்து நல்ல தீர்ப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளலாம்.

மக்கள் போராட்டம் அரசை நிர்பந்திக்கும்.

ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்.

ஸ்ரீ

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *