வர்தா புயல் – இதுவும் இயற்கையின் எச்சரிக்கை தான்….விழித்துக்கொள்வோமா?
முன்பெல்லாம் வானிலை முன்னறிவிப்பு மைய அறிவிப்புகளை மக்களும் அரசும் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. எல்லாம் வந்தபின்பே நடவடிக்கைள் எடுக்கப்படும். ஆனால் சென்ற ஆண்டு கனமழை சென்னை கடலூரை உலுக்கி எடுத்துவிட்ட பிறகு வானிலை முன்னறிவிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகின்றது. மக்களும் போதிய விழிப்புணர்வுடன் நடந்துகொள்கின்றனர். இதனால் சேதாரம் மிக குறைவாக ஏற்படுகின்றது.
கனமழையால் சென்னை இழந்ததைவிட அதிகமாகவே வர்தா புயலினால் இழந்துவிட்டது. இருந்தாலும் சென்னை மக்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் இந்த புயல் தாக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றனர். கனமழையின்போது சென்னை மக்கள் பெற்ற அனுபவமே இதற்கு காரணமாக இருக்கலாம். அரசும் துரித நடவடிக்கைளை செய்து வருகின்றது.
இயற்கையின் எச்சரிக்கை :
முன்பெல்லாம் சாதாரணமாக மழை பொழியும் காற்று வீசும். ஆனால் இப்போதோ பெய்தால் கனமழை, பெய்யாவிட்டால் கடும் வறட்சி , அடித்தால் புயல் என அனைத்துமே அதிக அளவில் நடந்துவருகிறது. இதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால் பருவநிலையில் போதிய நிலைத்தன்மை இல்லாததே காரணம் .
இயற்கை சீற்றங்கள் நடந்த பிறகு மீட்பு பணிகளை மேற்கொள்ளும் அரசு சுற்றுசூழலில் போதிய அக்கறையை செலுத்தி பருவநிலையில் நிலைத்தன்மையை கொண்டுவர மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.பருவநிலையில் நிலைத்தன்மையை ஏற்படுத்த அதிகப்படியான மரங்களை நடவேண்டும். இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் வாகனங்களில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியிடப்படும் கரியமில வாயுக்களின் அளவு கட்டுக்கடங்காமல் உள்ளது. மனித இனம் இந்த தவறையெல்லாம் உணர்ந்திடவே இயற்கை கனமழை வறட்சி புயல் என ஒவ்வொரு எச்சரிக்கையாக நமக்கு கொடுத்துவருகின்றது.
இனிமேலாவது நாம் இதனை உணர்ந்து இயற்கையோடு இணைந்து வாழ பழகிட வேண்டும்…..