ஊமை இளைஞன்

சிறு வயதில் அப்பா அடித்து சொல்லியும் 
ஒரு நாள் கூட பள்ளிக்கு ஒதுங்காத பாமரன் 
இரண்டு வாரங்கள் பள்ளியிலேயே தங்கினான்
அடிக்கு பயந்து அல்ல
அடை மழைக்கு பயந்து …


பள்ளிகூடத்தில் ஒழுகவில்லை
மின்சார துண்டிப்பு இல்லை
யார் யாரோ வருகிறார்கள் உணவு குடிநீர் தருகிறார்கள்
உணவுக்கும் பஞ்சமில்லை….

ஆனால்

அவன் மனம் இன்னும் அவன் வீட்டை விட்டு  வரவில்லை
ஆமாம்
அவன் வீடு ஓட்டை கூரை வீடுதான்
சாரல் மழைக்கே ஈரம் தட்டும் தரை வீடு தான்..
இருந்தாலும் அவன் மனம் வரவில்லை….
அவன் பிறந்து வளர்ந்த வீடு
அவன் முதல் நடை பயின்ற வீடு
அவன் அம்மா ஆசை முத்தம் தந்து வளர்த்த வீடு….
எப்படி வரும் அவன் மனம் அந்த வீட்டை விட்டு…

அவனுக்கு உங்கள் நிவாரண நிதி வேண்டாம்
அவனுக்கு நீங்கள் தரும் சாப்பாட்டு பொட்டலம் வேண்டாம்
அவனுக்கு வேண்டியதெல்லாம்
அடுத்த மழைக்காவது அவன் வீட்டிற்குள் வெள்ளம் வராமல் இருக்க
எதாவது செய்யுங்கள் – அது போதும் அவனுக்கு
உடனே செய்து விட்டால் அடுத்த முறை நிவாரணம் எப்படி செய்வது
நம்மை மறந்து விடுவார்களே என்ற கவலை வேண்டாம்….

என் மக்கள் வாங்கி வாங்கி பழக்கப்பட்டவர்கள் தான்
எல்லாமே இலவசம்
எல்லாமே இலவசம்
எதாவது கொடுத்து கொண்டே இருந்தால் தான்
அவர்கள் உங்களை மறக்க  மாட்டார்கள் 
என்று
நீங்கள் எண்ணுவது சரியே !!
அவன் அப்படியே பழக்கபடுத்தப்பட்டுவிட்டான்
அதற்காக அப்படியே விட்டு விடாதீர்கள் 
எதாவது செய்யுங்கள்!!!

அரசியல் செய்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு
ஆமாம்
ஒரு பிரியாணிக்கு கிடைக்க வேண்டிய ஒரு ஓட்டு
ஒரு தக்காளி சாதத்திற்கே கிடைகின்றதே!!!
சந்தோசம் தான் – அரசியல்வாதிக்கு..

ஆற்றங்கரையில் வீடு கட்டினால் அடித்து கொண்டு தான் போகும்
இது அறிவார்ந்த அரசியல் பேச்சு
நீங்கள் பேசுவதை கேட்கும் நிலைமையில் அந்த மக்கள் இல்லை
அவர்கள் தண்ணீரோடு தண்ணீராய்  மிதந்து கொண்டு இருகின்றார்கள்
ஆனால் உங்கள் அறிவார்ந்த பேச்சுக்கு என் பதில் 
ஆற்றங்கரையில் வீடு கட்டினால் அடித்து கொண்டு தான் போகும்
இதை தெரிந்து அவர்களுக்கு அங்கு இருக்க இடம் கொடுத்தது உங்கள் தலைவர் தான் 
என்பதை மனதில் வைத்து கொண்டு பேசுங்கள் – அடுத்தமுறையாவது 

தமிழகத்திற்கு தண்ணீரில் தான் கண்டம்
நான் மழை நீரை கூறினேன் – வேறு எதையும் அல்ல
எனக்கும் உண்மையை சொல்ல ஆசைதான்
ஆனால் எனக்கு இளங் “கோவன்” ஆகும் துணிவு இல்லை
உங்களை போலவே!!!!

எங்கள் மக்களுக்கு தண்ணீர் இல்லை என்று
ஒவ்வொரு முறையும் அரசு  போராடி தண்ணீர் வாங்கும் போது
பெருமையாக இருந்தது எனக்கு
ஆனால் இப்பொழுது இங்கேயே மழை பொழிகின்றதே 
இதை சேமித்தாலே போதுமே
அதை சேமிக்க ஒரு முயற்சியும் செய்யவில்லை
ஏன்
ஒருவேளை அவர்களிடம் வாங்கி கொள்ளலாம் என்று எண்ணி விட்டார்களோ
கையேந்தி நிற்பது நமக்கென்ன புதிதா ??

என் குடும்பம் தான் இப்படி என்றால்
பெரிய குடும்பம் அதை விட மோசம்
என் பெரியப்பாவிற்கு என் குடும்பத்தை பற்றி
கவலை இல்லை
என் ஊரில் வெள்ளம் போகின்றது
என்னால் தான் இந்தியா ஒளிர்கின்றதாம் – மலேசியாவில் சொல்கிறார்
உங்களை ஒளிர வைத்த நாங்கள் தண்ணீரில் மிதக்கின்றோம்
தேர்தலுக்காக வந்து போகும் நீங்கள் எங்களுக்காக
வந்திருந்தால் சந்தோசம் அடைந்திருப்போம்
*****ஸ்ரீ*****




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *