இன்னும் எத்தனை கொடுமைகளை கண்ட பின்பு தான் நீங்கள் திருந்த போகிறீர்கள் ஆட்சியாளர்களே….. சிரியாவும் நமது காஷ்மீரும் இன்று இப்படித்தான் இருக்கின்றன..
காலையில் அயர்ந்த நிம்மதியான தூக்கம்..எழுந்தவுடன் அம்மாவின் செல்ல முத்தம்..காலை உணவும் பாலும் என்று நிம்மதியாக ஒவ்வொரு குழந்தையின் பொழுதும் இனிமையாக கழிகின்றது நம் ஊரில்.. ஆனால் இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் பெயர் தக்னீஷ். 5 வயதாகிறது. அவனுக்கு மட்டும் ஏன் பொழுது இப்படி விடிந்தது..
சிரியாவில் இருக்கும் அலெப்போ நகரில் நடந்த விமானத் தாக்குதலில் நொறுங்கிப் போன கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.அலப்போ நகரம் ஏற்கனவே சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. அங்கு இருப்பவர்கள் ஒவ்வொரு நொடியையும் எப்படிப்பட்ட நிலையில் கடக்கிறார்கள் என்பதை இந்தப் படம் வெளிக்காட்டுகிறது. இந்த சிறுவனின் பெயர் தக்னீஷ். 5 வயதாகிறது. இந்த சிறுவனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாக டாக்டர் ஒசாமா அபு அல் எஸ் கூறியுள்ளார். இவன் வசித்து வந்த குவாதர்ஜி என்ற இடத்தில் நடந்த விமானத் தாக்குதலில் இந்த சிறுவனின் வீடு தரைமட்டமாகியுள்ளது.
ஏற்கனவே கடலோரம் இறந்து கிடந்த சிறுவன் அய்லானின் புகைப்படம் பெரிய அதிர்வினை ஏற்படுத்தி இருந்தது நினைவிருக்கலாம்…
அனைவரும் இன்பமாக வாழ இயற்கை தந்த இந்த பூமியை இது உன்னுடையது அது என்னுடையது என்ற அற்ப முட்டாள் தனமான காரணங்களுக்காகவும் அரசியல் விளையாட்டில் எப்பொதும் முன்னிற்க விரும்பும் ஒருசில அரசியல்வாதிகளின் எண்ணங்களினாலும் இந்த சிறுவன் போன்ற எண்ணற்ற மனிதர்கள் வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் மக்கள் நாம் இந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பதால் தான். சிரியாவில் மட்டும் தான் இப்படியா? இல்லை நம் நாட்டில் இருக்கும் காஷ்மீரிலும் எல்லை ஓரங்களிலும் எண்ணற்ற மனித உயிர்கள் நம் போன்ற சுதந்திரமான வாழ்க்கைக்கு ஏங்கி கொண்டுள்ளனர். நாம் துப்பாக்கிகளை சினிமாவில் பார்த்திருக்கின்றோம் காவலர்கள் கையில் இருக்கும் போது தொலைவில் பார்த்திருப்போம். ஆனால் அவர்களுக்கோ அது தினந்தோறும் தங்கள் நெஞ்சருகில் வந்து செல்கின்றது எப்படி அவர்களால் நிம்மதியாக இருக்க முடியும்.
அவர்கள் செய்த பாவம் தான் என்ன…அனைவருக்கும் சுதந்திரம் என்பது சமம் தானே? காஷ்மீர் உன்னுடையதா என்னுடையதா என்று அடித்துக்கொள்ளாமல் சுமூகமான பேச்சு மூலமாக தீர்வை எட்டுங்கள். காஷ்மீர் குழந்தைகளின் புகைப்படங்களை மேல் இருக்கும் சிறுவன் போல ஆக்கி விடாதீர்கள் அரசியல்வாதிகளே….
நன்றி
ஸ்ரீ