அலைந்து திரிந்து வேலைக்கு சென்று சம்பாதிக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் வரி ……ஆனால் கோடி கோடியாக கொட்டும் திரையுலகினருக்கு வரி விலக்கு……..என்ன நியாயம்….
நமது தலைவரின் படம் இவ்வளவு வசூல் செய்துள்ளதே என்று பெருமை தான். ஆனால் அந்த பெருமையையும் தாண்டி அன்றாடம் வேலைக்கு செல்லும் ஒரு நடுத்தர மனிதனாக நாம் ஒன்றை சிந்தித்து பார்க்க மறந்து விட்டோமோ என்று நினைக்க தோன்றுகிறது. ஆமாம் அலைந்து திரிந்து லோன் வாங்கி படித்து பல கேவலங்களை சந்தித்து வேலைக்கு சென்று சம்பாதிக்கும் 3 லட்சத்திற்கும் 4 லட்சத்திற்கும் TDS வரி, professional Tax என என கட்டுகிறோமே இந்த 320 கோடிக்கு வரியே இல்லையா என்று என்னும் போது கவலையாக இருக்கின்றது.
ஆமாம் வரி கட்ட தேவை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் ஆம் என்பது தான் பதில். இது இந்த 320 கோடிக்கு மட்டும் அல்ல இந்த படம் வசூலிக்க போகும் அனைத்து தொகைக்கும் தான். கபாலி படத்திற்கு மட்டுமா இந்த வரிவிலக்கு என்றால் இல்லை, கபாலியை போன்றே தமிழில் பெயர் வைத்த அனைத்து திரைப்படங்களுக்குமே இந்த கேளிக்கை வரிவிலக்கு என்பது உண்டு.
இந்த ஒரு படத்திற்கே தமிழக அரசுக்கு இழப்பு ரூ 96 கோடி (320 கோடியில் 30 சதவீதம்) என்றால் ஒரு ஆண்டுக்கு தமிழ்நாட்டில் வெளியிடப்படும் படங்களின் எண்ணிக்கையையும் அதன் வருமானத்தையும் நினைத்து பார்த்தால் குறைந்தது 200 முதல் 300 கோடி ரூபாய் வரை தமிழக அரசுக்கு வரி இழப்பு கண்டிப்பாக ஏற்படுகின்றது.
தமிழில் படப் பெயரைச் சூட்டுபவர்களுக்கு கேளிக்கை வரியை ரத்துசெய்யும் முடிவை 2006-ல் தமிழக அரசு (கருணாநிதி )அறிவித்த ஆரம்ப ஆண்டுகளிலேயே வருவாய் இழப்பு ரூ.50 கோடியைத் தொட்டது. பெருமளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லக் கூடிய நிதி இது. இந்த இழப்பைப் பற்றி அந்நாட்களில் கருணாநிதி பேசிய வார்த்தைகள் “எதை எதையோ தாங்கிக்கொண்ட இந்த இதயம், இந்த ஐம்பது கோடியையா தாங்கிக்கொள்ளாமல் போய்விடப்போகிறது?
ஆனால் இதன் பலன் யாருக்கு? இதன் மூலமாக பயன் அடைபவர்கள் பெரும் முதலாளிகளே ஆவார்கள். வரி விலக்கு என்பதை தவிர்த்து விட்டு அந்த வரியின் மூலமாக வரும் பணத்தினை தமிழ் வளர்க்க பயன்படுத்தி இருக்கலாமே..தமிழில் படம் பெயர் வைத்துவிட்டால் மட்டும் போதுமா? தமிழை வளர்த்து விடலாமா என்கிற கேள்வி ஆட்சியாளர்களுக்கு…
பெரிய நிறுவங்களை அழைத்து இலவசமாக இடம் கொடுத்து இலவசமாக மின்சாரம் கொடுத்து இலவசமாக தண்ணீர் வசதி செய்து கொடுத்து உதவுவது எப்படியோ அதை போலவே திரைப்படங்களுக்கு வரிவிலக்கு என்பதும்.
பிள்ளைகளின் பெயர்களை தமிழில் வைத்தால் பள்ளியில் கல்விக்கட்டணம் செலுத்த தேவை இல்லை. கல்லூரியில் கட்டணம் செலுத்த தேவை இல்லை என்று சட்டம் கொண்டு வரவேண்டியது தானே.தமிழ் வளர்க்க ஆசைப்பட்டால்….அப்படி கொண்டுவந்தால் அதனால் மக்கள் பயன் அடைவார்கள். தமிழ் பயனடையும்..ஆனால் அவர்கள்?????
ஒரு சினிமா ரசிகன் என்பதையும் தாண்டி சில நேரங்களில் சிந்திப்போம்….
என்ன சிந்தித்தாலும் கடைசியில் கருணாநிதி அவர்கள் கூறியது போலவே “எதை எதையோ தாங்கிக்கொண்ட இந்த இதயம், இதை மட்டும் தாங்கிக்கொள்ளாமலா போய்விடப்போகிறது?”
நன்றி
ஸ்ரீ