பேருந்தும் பேசும்


காலைப்பொழுதை கதிரவனுக்கு முன்பாகவே
எங்கள் ஊரின் ஐந்தரை மணி பேருந்து
ஹாரன் ஒலி எழுப்பி சொல்லி விட்டு போகும்

உழைத்து களைத்த பாமரனுக்கு…

எத்தனையோ எண்ணிகையில்லாத பயணம் சென்றிருந்தாலும்
அன்று கேட்ட டர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர் சத்தங்களை கேட்கும் பொழுது
இந்த பேருந்துக்கு பேச தெரிந்து இருந்தால்
என்ன பேசியிருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன்
பேருந்து பேசியிருந்தால் இவ்வாறு பேசியிருக்குமோ!!!!

அவன் அம்மா பிரசவ வலியால் துடித்தபொழுது
கண்ணிமைக்கும் நேரத்தில் மருத்துவமனைக்கு சுமந்து சென்றேன்
அவனும் பிறந்தான் வளர்ந்தான்
கல்லூரிக்கும் சென்றான்
கல்லூரியில் யாரையோ எதிர்த்து செய்து கொண்டிருந்த
போராட்டத்திற்காக பழியாய் பலபேரை சுமந்து சென்ற
என் (பேருந்து) கண்ணாடியை உடைத்தான்
நன்றி மறக்காமல்….
படித்தவன் அல்லவா

கரடு முரடான சாலைகளையும்
பள்ளம் படுகுழிகலையும் கடந்து சென்றபோது கூட
என் (பேருந்து) மனம் வலிக்கவில்லை..
கட்சிக்காக கல்லெடுத்தும்
கரன்சிக்காக கட்டை எடுத்தும்
சுமந்து சென்ற என்னையே
பெட்ரோல் குண்டால்
எரிக்கின்ற போதும் நானும்(பேருந்து)
என் மனமும் சேர்ந்தே எரிகின்றது  
இவர்களையா சுமந்தோம் என்று…

தெருவிற்கு ஒரு ஜாதி
தேதிக்கு ஒரு சண்டை
ஏழை பணக்காரன் என்று
பிரிந்து கிடக்கும் மக்கள்
ஜாதி பார்க்காமல்
சண்டை மறந்து
ஏற்ற தாழ்வில்லாமல்
பயணம் செய்யும்போது
பெருமைப்பட்டு கொண்டேன்
என்னில் மட்டும் தான் சமத்துவம் உண்டென்று!!!!

விடுவானா பேருந்தில் மட்டும் சமத்துவத்தை
கொண்டு வந்தான் நிறத்தால் வேறுபாட்டை எனக்கு கூட தெரியாமல்
வெள்ளை போர்டு பச்சை போர்டு டிஜிட்டல் போர்டு என்று …

ஆசையாக அந்த நிறுத்தத்திற்கு வந்தேன்
அதே வயது முதிந்த பாட்டி
கசங்கிய சட்டையுடன் தினக்கூலி
கையில் சாப்பாட்டு கூடையுடன் இருக்கும் அம்மாவின்
கை பிடியில் இருந்து விடுபட துடிக்கும்
வெள்ளை நிற சட்டையுடன் மாணவ சிறுவன்
இவர்கள் அனைவரும் என்னில் நேற்று பயணம் செய்தவர்கள்
பேருந்து புறப்பட்டது
ஆனால் இவர்கள் யாருமே இன்று ஏறவில்லை
எனக்கு[பேருந்துக்கு) ஒன்றும் புரியவில்லை
எதிரே வந்த பேருந்து சொல்லித்தான் எனக்கு தெரியும்
நான் இன்று முதல் டிஜிட்டல் பேருந்து என்று…
எனக்குள்ளும் பிரிவை கொண்டு வந்துவிட்டான் மனிதன்…

சடாரென்று ஒரு பிரேக்…..
நினைவு திரும்பியது எனக்கு…..

என் நிறுத்தம் வந்ததும் நான் இறங்கி கொண்டேன்
உண்மையாகவே பேருந்திற்கு மனமிருந்தால்
இப்படி பேசியிருக்குமோ என்று நினைத்து திரும்பி பார்த்தேன்
டப் டப் என்று ஒருவன் அடித்து கொண்டிருந்தான்
ஓட்டுனர் விரைவாக பேருந்தை எடுக்க முற்பட்டதால்…
மனிதன் இப்படித்தான் என்று நினைத்து கொண்டே நடந்தேன்
என்னை பேருந்து கடந்து சென்றது
அடித்த அவனையும் சுமந்து கொண்டு…

பொது சொத்துகளை பாதுகாப்போம்!!! சமத்துவத்தை போற்றுவோம்!!!


Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *