“மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, தங்கமான பிள்ளை. உம் மகளை காலம் முழுமைக்கும் கண் கலங்காம வச்சு காப்பாத்துவான்” இப்படிப்பட்ட வாக்குறுதிகள் தான் அன்று எனக்கு திருமணம் நடக்க காரணமாக இருந்தது.
“மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, தங்கமான பிள்ளை. உம் மகளை காலம் முழுமைக்கும் கண் கலங்காம வச்சு காப்பாத்துவான்” இப்படிப்பட்ட வாக்குறுதிகள் தான் அன்று எனக்கு திருமணம் நடக்க காரணமாக இருந்தது. திருமணமான 7 ஆண்டுகளில் 4 வயது மகளை மட்டும் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார் தங்கமான பிள்ளை என சொல்லி கட்டிவைத்த என் கணவன். தையல் பயிற்சியில் கலந்து கொண்டால் தையல் மெஷின் இலவசம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத்தினால் லீவு நாட்களில் சும்மா தானே இருக்கிறோம் என கற்றுக்கொண்ட தையல் தொழிலும் அவர்கள் கொடுத்த தையல் மெஷினும் தான் இன்று என்னையும் என் மகளையும் பிறரிடம் கையேந்தாமல் ஓரளவிற்கேனும் கவுரவமாக வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது – நான் கவுசல்யா [8 ஆம் வகுப்பு, 5 வயது குழந்தைக்கு அம்மா, கணவர் இல்லை]
உங்களது வாழ்க்கையில் நீங்கள் போராடி வென்றவரா? சக பெண்களுடன் பகிர்ந்துகொள்ள கருத்துக்கள் உங்களிடம் உள்ளனவா? பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள். பகிர்வோம்.
admin@pamarankaruthu.com or pamarankaruthu@gmail.com
எங்களது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. நல்ல மழை பெய்தால் நெல் விற்று வருகிற பணத்தைக்கொண்டு அந்த ஆண்டை ஓரளவிற்கு கஷ்டப்படாமல் கடந்து விடலாம் . அடுத்த வருசத்துக்கு கடன் வாங்காமல் விவசாயத்தை ஆரம்பித்து விடலாம். அப்படிப்பட்ட குடும்ப பின்னனியில், பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் எனது அப்பாவிற்கு பெரிய ஆர்வம் இல்லாவிட்டாலும் எனது அம்மாவுக்கு நான் பத்தாவது வரைக்குமாவது படிக்க வேண்டும் என பெரிய ஆசை. அம்மா சொன்னால் அப்பாவால் தட்ட முடியாது. அதனால் தான் எனது கிராமத்தில் இருந்து பள்ளிக்குச் சென்ற வெகு சில பெண் குழந்தைகளில் நானும் ஒருத்தியாக இருந்தேன்.
சந்தோசம் என்றால் என்ன என என் சிறுவயதில் எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது எனது மகளுக்கு கிடைக்கின்ற பெரும்பாலானவை எனக்கு அன்று கிடைக்கவில்லை என்பதே எதார்த்தம். “ஒரு பிள்ளை” என்பதனால் எனது பெற்றோர் என்னை பொத்தி பொத்தி வளர்த்து வந்ததனால் பெரும்பாலும் விளையாட விடாமல் அவர்களோடே வயலில் வைத்துக்கொள்வார்கள். நான் அங்கு கிணற்று மரத்தின் நிழலில் தனியே விளையாடிக்கொண்டு இருப்பேன். “நீ சொல்லவும் தான் எட்டாம் வகுப்பு வரைக்கும் அனுப்புனேன், ஊர் தாண்டி ஒம்பதாம் வகுப்பெல்லாம் அனுப்ப முடியாது” என்ற அப்பாவின் வார்த்தைகளை அம்மாவின் செல்வாக்கால் சரிசெய்ய முடியவில்லை. எட்டாம் வகுப்போடு வயல் வீடு என தங்கி விட்டேன்.
சில ஆண்டுகள் கழிந்தன. எங்களது பள்ளிக்கூடத்திற்கு வந்த தலைமை ஆசிரியர் கிராமப்புற பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துபவராம். அவரது அழைப்பின் பேரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் பள்ளி விடுமுறையில் தையல் பயிற்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் மூன்று மாதம் இலவசமாக பயிற்சி தருவார்கள். பயிற்சி முடிந்த பிறகு 10 பெண்களுக்கு தையல் மெஷின் இலவசமாக தருவார்கள் என சொன்னார்கள். எனது பள்ளித்தோழிகள் அதில் சேரலாம் என்றனர். ஆனால் அப்பா என்ன சொல்லுவார் என்றுதான் எனக்கு அச்சமாக இருந்தது. ஆனால் இலவசமாக தையல் மெஷின் தருகிறார்கள் என ஏதோதோ சொல்லி அம்மாவும் நானும் அப்பாவை சம்மதிக்க வைத்துவிட்டோம்.
எங்களுக்கு தையல் கற்றுக்கொடுக்க வந்தவர்கள் இலவசம் தானே என நினைக்காமல் நன்றாகவே சொல்லித்தந்தார்கள். முதலில் பத்து பேருக்குத்தான் தருவோம் என சொன்னவர்கள் பிறகு சேர்ந்த பதினைந்து பேருக்குமே தந்துவிட்டுப்போனார்கள். சிலருக்கு கல்யாணம் ஆன போது சீர்வரிசையில் தையல் மெஷினும் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டது. சிலர் வாங்கி சில நாட்கள் ஓட்டினார்கள், பின்னர் ஓரங்கட்டி விட்டார்கள். நானும் என் தோழியும் தான் புதியது பழையது என தைத்துக்கொண்டு இருந்தோம். எங்கள் இருவரிடமும் தான் பெரும்பாலும் கொண்டுவந்து கொடுப்பார்கள். மிகப்பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்காது என்றாலும் நூல் போக கொஞ்சம் தேறும்.
தையல் மெஷின் ஓடிய போதே என் வயதும் ஓடிப்போனதோ என்னவோ, ஒருநாள் நான் அப்பாவின் பழைய கைலி ஒன்றினை தைத்துக்கொண்டு இருக்கும் போது நாலைந்து பேர் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பெண் பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள். எனக்கு சிறிய வயதுதான் என்றாலும் அப்பாவிற்கு இப்போது உடல் பெரிதளவில் ஒத்துழைப்பு கொடுக்காதபடியால் தான் நன்றாக இருக்கும் போதே தனது ஒற்றை மகளுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைத்தார். எங்க ஊர்க்காரர் ஒருவர் “மாப்பிளைக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது, தங்கமான பிள்ளை. உம் மகளை கண் கலங்காம வச்சு காப்பாத்துவான், எங்களை நம்பி புள்ளைய கொடுப்பா” என்றார்.
கல்யாணம் நடந்தது, சீர்வரிசைகளோடு நானும் புறப்பட தயாரானேன். பொருள்களை ஏற்றும் போது “அந்த தையல் மெஷினையும் சீரோடு சேர்த்து ஏத்துங்கப்பா இங்க யாரு இருக்கா தைக்குறதுக்கு” என அம்மா கண்கலங்கி சொல்ல ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது தீர்த்தோம். ஒவ்வொரு பெண்ணும் திருமணம் முடிந்தபிறகு அழுது கொண்டுதான் அடுத்த வாழ்வை துவங்குவாள். நானும் அப்படித்தான், புறப்பட்டோம். துவங்கியது புதுவாழ்வு. என்ன சொல்லி திருமணம் செய்தார்களோ அப்படியே தான் கணவரும் நடந்துகொண்டார். இரண்டு அண்ணன் இருக்க இவர் தான் மூன்றாவது. பெரிய சொத்து பத்து இல்லாவிட்டாலும் நாள் தோறும் வேலைக்கு சென்று எங்களை நன்றாகவே பார்த்துக்கொண்டார். ஒன்றரை வருடம் கடந்து எங்களுக்கு ஒரு அழகிய மகள் பிறந்தாள். ஆனால் பேத்தியை பார்க்க எனது அப்பாவுக்கு தான் கொடுத்து வைக்கவில்லை. நான் ஆறுமாதம் இருக்கும் போதே அப்பா உடல்நிலை சரியில்லாமல் தவறிவிட்டார்.