எனது மகளுக்கு மூன்று வயது இருக்கும். இப்போது இருக்கும் கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றலாம் என நினைத்து பணம் சேர்த்து வந்தோம். அடுத்த மாதம் வேலையை துவங்கி விடலாம், நான் போய் ஓடு, பலகை விலையை விசாரித்துவிட்டு வருகிறேன் என சொல்லிப் போனார் எனது கணவர். திரும்பி வரும் போது ஏதோ கார் காரன் சைக்கிளின் பின்பக்கம் வந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு பக்கத்தில் இருந்த பாலத்தில் தலை மோதி மயக்கமாக கிடந்ததாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள் எனவும் எனக்கு சேதி வந்தது. ” “இங்க பாக்குறதுக்கு வசதி இல்லம்மா நீ மதுரையில் இருக்குற தனியார் ஆஸ்பத்திரியில செத்தா உன் புருஷன காப்பாதிப்புடலாம்” என பலர் சொல்ல அந்த நம்பிக்கையில் அவர்கள் சொன்ன மருத்துவமனையில் சேர்த்தோம். இருபத்தைந்து நாட்கள் தான் ஆனது, வீடு கட்டலாம் என சேர்த்து வைத்திருந்த பணம் ஆயிரமோ இரண்டாயிரமோ தான் மிச்சம் இருந்தது. எங்களை கடன் வாங்க வைக்கக்கூடாது என நினைத்தாரோ என்னவோ அந்த மனுஷன் உயிரை விட்டுட்டார்.
கணவர் இல்லாமல் மூன்று வயது மகளோடு தனி மரமாக நின்றேன். எனது கணவர் இருந்தபோது உறவு கொண்டாடிய அண்ணன் உறவுகள் அவர் மருத்துவமனைக்கு போனதும் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதைக்கூட தவிர்த்துவிட்டார்கள். அங்கு இருந்தால் மகளை எதுவும் செய்து காப்பாற்ற முடியாது, கடன் கேட்டுவிடுவோம் என அஞ்சி பேசாதவர்களை நம்பி நம்மால் எப்படி இருக்க முடியும் என யோசித்து அம்மாவின் ஊருக்கு சென்றுவிடலாம் என முடிவு செய்தேன். அப்பாவும் இல்லை, தனியே கஷ்டப்படும் அம்மாவுக்கு துணையாகவும் இருக்கும். போனேன், என் மகளோடு.
சில மாதங்கள் கடந்தன. தீபாவளிக்கு ஒருமாதம் இருக்கும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு அக்கா, நீ நல்ல சட்டை தைப்பியே தச்சு தர முடியுமா? கடையில கேட்டுப்பார்த்தேன் ஏற்கனவே நிறைய சேந்திருச்சாம் என கேட்டார். தையல் மெஷின் கணவர் வீட்டிலேயே இருந்தபடியால் ஒருநாள் மட்டும் என் தோழியின் வீட்டில் இருக்கும் தையல் மெஷினில் தைத்துக்கொடுத்தேன். இரண்டு நாட்களில் ஆறு ஏழு பேர் அவர்களுக்கும் தைத்துக்கொடுக்க முடியுமா என கேட்டார்கள். என்னிடம் மெஷின் இல்லை என சொல்லி அனுப்பிவிட்டேன். அப்போதுதான் தோன்றியது, ஏன் நமது மெசினை எடுத்துவந்து இங்கே தையல் வேலை செய்யக்கூடாது என்று. அம்மாவிடம் பிள்ளையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அடுத்தநாளே தையல் மெஷினை கொண்டுவந்துவிட்டேன். எண்ணெய் போட்டு துடைத்ததும் நன்றாகவே தைத்தது. வரும்போதே நூல்களும் வாங்கிவந்துவிட்டேன் .
முன்னால் வந்து கேட்டவர்களின் வீடுகளுக்கே சென்று தைத்துக்கொடுக்கிறேன் என சொல்லி துணியை வாங்கிக்கொண்டு வந்தேன். இப்போது சுற்றுவட்டாரத்தில் நிறைய பேர் என்னிடம் தைக்க வருகிறார்கள். எங்க ஊரில் வேலைக்கு வரும் டீச்சர்களே என்னிடம் கொடுக்கும் அளவுக்கு நன்றாக தைக்க ஆரம்பித்தேன். அங்கே ஒரு ஆசிரியரின் ஆலோசனைப்படி ஒரு இலவச வகுப்பிற்கு சென்று பல்வேறு டிசைன்களை கற்றுக்கொண்டேன். இப்போது எனது சொந்தக்காலில் நான் நிற்கிறேன். எனது அம்மாவையும் மகளையும் தையல் மெஷின் உதவிகொண்டு மரியாதையோடு காப்பாற்றிவருகிறேன்.
தையல் மெஷின் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக நான் கற்றுக்கொண்ட தையல் தொழில் இன்று யாரும் எனக்காக இல்லாதபோது என்னை காப்பாற்றி வருகிறது. ஆகவே நீங்களும் உங்களது எதிர்காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழ்வதற்கு இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் – இப்படி தனது வாழ்க்கையை உதாரணமாக எடுத்துசொல்லிக்கொண்டு இருந்தார் கௌசல்யா. ஆமாம், இப்போது கௌசல்யா கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி எடுக்கிறார்.
“சுயதொழில் சுயமரியாதை காக்கும்” இதுவே கௌசல்யாவின் தாரக மந்திரம்.
பாமரன் கருத்து
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!