இந்திய மோட்டார் வாகன சட்டப்படி இந்தியாவில் சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் இருக்க வேண்டியது கட்டாயம். அப்படி ஒரு வாகனம் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடினால் அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கவும் அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும் போக்குவரத்து காவல்துறைக்கு அதிகாரம் உண்டு.
பைக் மற்றும் கார் வாங்கியிருக்கும் நாம் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரங்கள் செலவு செய்து இன்சூரன்ஸ் [Insurance] போடுவோம். ஆனால், நாம் அந்த இன்சூரன்ஸை பயன்படுத்தியே இருக்க மாட்டோம். அப்படிப்பட்ட சூழலில் ஏன் ஒவ்வொரு வருடமும் இதற்கு வேறு செலவு செய்கிறோம்? இன்சூரன்ஸ் எடுத்தே தீர வேண்டுமா? எது நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என இன்சூரன்ஸ் எடுக்காமல் இருக்க முடியாதா? என நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம். அப்படிப்பட்ட கேள்வி உங்களுக்கு இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பதில் சொல்லும்.
இன்சூரன்ஸ் என்றால் என்ன?
இன்சூரன்ஸ் என்பதற்கு தமிழில் காப்பீடு என்று சொல்லலாம். நாம் மருத்துவத்திற்கு காப்பீடு எடுக்கலாம், வாகனங்களுக்கு காப்பீடு எடுக்கலாம், விலை உயர்ந்த உடைமைகளுக்கு காப்பீடு எடுக்கலாம். நாம் எதற்க்காக காப்பீடு எடுக்கிறோமோ அந்த சூழல் ஏற்படும் போது நாம் காப்பீடு எடுத்த நிறுவனம் நமக்கான இழப்பீட்டை வழங்கும். உதாரணத்திற்கு, நாம் வாகன காப்பீடு எடுத்து இருக்கிறோம் எனில் நமது வாகனம் விபத்துக்கு உள்ளானாலோ அல்லது திருடு போனாலோ அதற்கான இழப்பீட்டை நம்மால் காப்பீட்டு நிறுவனத்திடம் முறையீடு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
மோட்டார் வாகன சட்டம் (Motor Vehicles Act) என்றால் என்ன?
இந்தியாவில், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, எந்தவொரு பொது இடத்தில் இயங்கும் அனைத்து வாகனங்களும் மோட்டார் வாகனக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். நீங்கள் முழுமையான இன்சூரன்ஸ் எடுக்காவிட்டாலும் கூட குறைந்தபட்சம் ‘மூன்றாம் தரப்பு பொறுப்பு (third party liability) மோட்டார் இன்சூரன்ஸ் காப்பீட்டை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
வாகன உரிமையாளர் அல்லது இன்னொரு வாகனத்தை ஓட்டும் மற்றொரு நபரால் விபத்து ஏற்பட்டால் மூன்றாம் தரப்பு பாதுகாப்பு [third-party cover] அவசியம். நீங்கள் உங்களது வாகனத்திற்கான இன்சூரன்ஸ் எடுக்கிறீர்களோ இல்லையோ third-party cover இன்சூரன்ஸ் எடுத்தே தீர வேண்டும். நீங்களோ அல்லது இன்னொரு நபரோ உங்களது வாகனத்தை ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு அதனால் மூன்றாம் நபர் பாதிக்கப்பட்டால் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் அல்லவா, அதனை உறுதிப்படுத்துவதற்காகத்தான் third-party cover எனப்படும் இன்சூரன்ஸ் கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும்.
நான் மோதினால் நான் கொடுத்துக்கொள்கிறேன் என நீங்கள் சொன்னாலும் அது எதார்த்தத்தில் சாத்தியம் இல்லை, ஆகவே தான் சட்டம் இதனை கட்டாயமாக்கியுள்ளது. உதாரணத்திற்கு, நீங்கள் 1 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் 29 வயது இளைஞர் மீது வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என வைத்துக்கொள்ளவோம். அவருக்கு இழப்பீடாக பல லட்ச ரூபாயை நீங்கள் அவரது குடும்பத்திற்கு கொடுக்கும் நிலை வரும். அது 99.999% பேராலும் முடியாது. ஆனால் இன்சூரன்ஸ் கம்பெனியால் அதனை தர முடியும். இப்போது புரிகிறதா ஏன் இன்சூரன்ஸ் அவசியம் என்று.
இந்தியாவில் இன்சூரன்ஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன,
1. இந்தியர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் பைக், கார் உள்ளிட்டவற்றை வாங்குகிறார்கள். அவற்றிற்கு விபத்து, திருட்டு அல்லது வேறு காரணங்களால் பாதிப்பு நிகழ்ந்தால் அதில் இருந்து குறைந்த முதலீட்டில் மீள்வதற்கு இன்சூரன்ஸ் உதவும்.
2. அதேபோல, நமக்கோ அல்லது நம்மால் பிறருக்கோ விபத்து ஏற்படும் போது நமது மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படும். நமது குடும்பத்திற்கு மேலும் சுமையை அதிகரிக்காமல் இன்சூரன்ஸ் கம்பெனி மூலமாக நமது மருத்துவ செலவிற்கு பண உதவி கிடைப்பது இன்சூரன்ஸ் மூலமாக உறுதி செய்யப்படும்.
3. நமது வாகனத்தின் மூலமாக பிறருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டு உதவித்தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலோ அது அனைவராலும் முடியாது. அதனை சரிசெய்து பாதிக்கப்பட்டவருக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்திட இன்சூரன்ஸ் அவசியம்.
Third Party Insurance Policy
மிகக்குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய இன்சூரன்ஸ் இதுதான். குறைந்தபட்சம் இந்த இன்சூரன்ஸ் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் மூலமாக உங்களுக்கோ உங்களது வாகனத்திற்கோ ஏதேனும் ஏற்பட்டால் இழப்பீடு கொடுக்கப்பட மாட்டாது. அதேசமயம், உங்களது வாகனத்தால் பிறருடைய வாகனமோ, பிறரோ அல்லது பிறரின் சொத்துக்களோ பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பீடு இதன் மூலமாக கிடைக்கும்.
Comprehensive Insurance Policy
தமிழில் இதனை விரிவான காப்பீடு என்று சொல்லலாம். இந்த இன்சூரன்ஸ் நீங்கள் எடுத்திருந்தால், உங்களது வாகனம் திருடப்பட்டாலோ, விபத்து, தீ பிடித்தல் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டால் உங்களால் இழப்பீடு கோர முடியும். விபத்தின் போது பாதிக்கப்படும் மூன்றாம் நபருக்கும் அவரின் வாகனத்திற்கும் இழப்பீடு கிடைக்கும். மனிதர்களால் ஏற்படும் பாதிப்பு, இயற்கையால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் இழப்பீடு பெற வழிவகை உண்டு.
இந்தப்பதிவின் வாயிலாக இன்சூரன்ஸ் குறித்து தெளிவாக தெரிந்துகொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்