உடல் ஆரோக்கியத்தை தாண்டி “காரணத்தோடு கூடிய வாழ்வு” தான் வாழ்நாளை அதிகரிக்கிறது.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையின் படி Journal of the American Medical Association ஒவ்வொருவரின் வாழ்நாளையும் எது அதிகரிக்கிறது என்பதற்கான பதில் கிடைத்திருக்கிறது. அதன்படி உங்களது வாழ்நாளை அதிகரிப்பது “ஏன் நாம் வாழுகிறோம்?” என்பதை தெரிந்துகொள்வது, அதன் தொடர்ச்சியாக தேடல் செய்வது, நம்முடைய வேலையை மகிழ்ச்சியோடு முழுமையாக செய்வது போன்றவை தான் வாழ்நாளை அதிகரிப்பதில் மிகப்பெரிய அளவில் பங்காற்றுகின்றன என தெரியவந்திருக்கிறது.
ஆமாம் தானே! நம்மில் எத்தனை பேர் “என்னடா இந்த வாழ்க்கை?” ” நான் ஏன் பிறந்தேனு தெரியலையே” என்ற கேள்விகளோடு அலைவதனை பார்த்திருப்போம். இப்படி நினைப்பவர்கள் மறைமுகமாக தங்களது வாழ்நாளை குறைத்துக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கே பிறந்த ஒவ்வொருவருக்கும் குடும்பம், வேலை, சமூகம் அனைத்தையும் தாண்டி தனியாக அவர்கள் செய்து முடிப்பதற்கான வேலைகள் நிர்ணயிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, பத்தாயிரம் பாடல்களுக்கு இசை அமைப்பது இளையராஜா அவர்களின் பணி. இதுபோன்று உங்களுக்கென்று சில பணிகள் இருக்கும்.
பின்வரும் கேள்விகள் உங்களுக்கு இன்னும் பல புரிதல்களை கொடுக்கும்.
உங்களுடைய தனித்திறமை என்ன?
நான் இதை செய்தால் சிறப்பாக, மகிழ்வோடு செய்வேன். இப்படி நாம் ஒவ்வொருவருக்குமே ஏதாவது ஒரு விசயம் இருக்கும். எந்தவொரு விசயமே நம்முடைய வேலையாக மாறிவிடும் போது அது ஒரு வேலையாக இல்லாமல் போய்விடும். தொடர்ச்சியாக நீங்கள் அதே வேலையை செய்துகொண்டே இருக்கும் போது நீங்கள் அந்த துறையில் சூப்பர் பவர் கொண்டவராக மாறுவீர்கள்.
உங்களது நம்பிக்கையை நோக்கி பயணியுங்கள்
உங்களுக்கு எதன் மீது நம்பிக்கை இருக்கிறதோ அதன் மீதுதான தேடலை துவங்குங்கள். அதில் உங்களுடைய புரிதலை அதிகரித்துக்கொள்ளுங்கள். அதற்காக உழைக்க துவங்குங்கள்.
உங்களுடைய தனிமை நினைப்பது என்ன?
ஒரு மனிதன் தனிமையில் இருக்கும் போது என்னவாக ஆக நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான் என்பது முதுமொழி. நீங்கள் தனிமையில் இருக்கும் போது நினைக்கும் ஒரு விசயம், நீங்கள் அதனை செய்தால் நேரம் போவதே தெரியாத ஒரு விசயம் ஆகியவை தான் நீங்கள் அந்த குறிப்பிட்ட செயலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கு அறிகுறி. அது நல்ல செயலாக இருக்கட்டும். அதனை நோக்கி நகருங்கள்.
நீங்கள் தேவைப்படுமாறு நடந்துகொள்ளுங்கள்?
நான்கு நண்பர்கள் கூடும் போது நீங்கள் அங்கு இருந்திருந்தால் இன்னும் மகிழ்வாக இருந்திருக்கும் என அந்த நண்பர்கள் உங்களை நினைத்துப்பார்க்கும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். அதுபோலவே பணியிடத்தில், இந்நேரம் அவர் இருந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடித்திருப்பார் என சக பணியாட்கள் மெச்சுகிற அளவுக்கு தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மேற்கூறியவை அனைத்துமே உங்களது இருப்பிற்க்கான காரணத்தை அறிய முற்படச்செய்கின்ற கேள்விகள் தான். இவற்றை நோக்கி நீங்கள் பயணிக்கும் போது வாழ்க்கைக்கான ஓர் அர்த்தம் தெரிய வரும், நீங்கள் ஒரு காரணத்தை பிடித்துக்கொண்டு வாழ்க்கையை கடப்பீர்கள், அது நீண்ட வாழ்வினை உங்களுக்கு கொடுக்கும்.
Read this post also :
ஒரே ஒரு பழக்கம் உங்களை உயர்த்தும்
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!