நானும் அதனையேதான் செய்கிறேன் ஏன் எனக்கு கிடைக்காதது இன்னொருவருக்கு கிடைக்கிறது? நான் என்ன செய்ய தவறிவிட்டேன்
உங்களோடு பலர் வேலை செய்தாலும் சிலருக்கு மட்டும் தானே பதவி உயர்வோ அல்லது அங்கீகாரமோ கிடைக்கிறது. ஏன் அப்படி நடக்கிறது? நம்மிடம் இல்லாத ஒன்று என்ன அவரிடம் இருக்கிறது? நம்மால் ஏன் சாதிக்க முடியவில்லை? நமக்கு ஏன் அது கிடைக்கவில்லை என சிந்தித்துக்கொண்டிருப்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக இந்த பதிவு உங்களுக்கானதுதான்.
ஒரு முதலாளி தன்னுடைய இரண்டு மகன்களையும் அழைத்து , தன்னுடைய நிறுவனத்தை இனி இளைய மகனே கவனித்துக்கொள்வான் என கூறுகிறார் . பெரிய மகனுக்கு இதனை கேட்டதும் அதிர்ச்சியும் கோபமும் வந்துவிட்டது . நானும் இந்த நிறுவனத்துக்காக கடினமாக உழைத்திருக்கிறேன் , ஏன் எனக்கு கொடுக்காமல் தம்பிக்கு கொடுத்தீர்கள் என்றான் . சரி , இதுபற்றி பிறகு பேசிக்கொள்ளலாம் என இருவரையும் அனுப்பினார் முதலாளி .
அடுத்தநாள், பெரிய மகனை அழைத்து, மூலப்பொருள்கள் வாங்கும் நிறுவனத்திற்கு சென்று குறிப்பிட்ட பொருள் இருக்கிறதா என கேட்டுவரச்சொன்னார். பெரிய மகனும் சென்று குறிப்பிட்ட மூலப்பொருள் இருக்கிறதா என கேட்டு வந்து, “அப்பா நாம் கேட்ட மூலப்பொருள் இருக்கிறதாம்” என சொன்னான். இளைய மகனை அழைத்தார், மூலப்பொருள்கள் வாங்கும் நிறுவனத்திற்கு சென்று குறிப்பிட்ட பொருள் இருக்கிறதா என கேட்டுவரச்சொன்னார். இளைய மகன் சென்றுவந்து “மூலப்பொருள்கள் 20 டன் இருக்கிறதாம். ஒரு டன் விலை 30 ஆயிரமாம், மொத்தமாக வாங்கினால் 25 ஆயிரம் விலைக்கு கொடுப்பதாக கூறினார். அருகில் இருக்கும் இன்னொரு நிறுவனத்திலும் கேட்டுப்பார்த்தேன் இதே விலைதான் சொல்கிறார்கள். மொத்தமாக வாங்கினால் நல்லது என கூறினான்” .
இப்போது அந்த முதலாளி பெரிய மகனை பார்த்து சொன்னார் “இதற்காகத்தான் கம்பெனியை நிர்வகிக்கும் பொறுப்பை உன் தம்பிக்கு கொடுக்க நினைக்கிறேன்” என்றார்.
பிறரிடம் இருந்து தனித்து நில்லுங்கள்
நாம் ஒரு நிறுவனத்தில் பலரோடு வேலை பார்க்கிறோம் எனில் அங்கு மற்றவர்களில் இருந்து தனித்துவமாக தெரிவதற்கு நாம் ஏதாவது செய்துதானே ஆகவேண்டும். பதவி உயர்வு போன்றவை சிலருக்கு மட்டுமேதான் கிடைக்கும் என்பதனால் அதற்காக நம் தரத்தை உயர்திக்கொள்வதும் நான் தான் அதற்கு தகுதியானவன் என்பதனை காட்டிக்கொள்வதும் அவசியமான ஒன்று. நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறீர்களா?
உங்களுக்கு மேலே இருப்பவர் உங்கள் அனைவரிடமும் வேலையை கொடுக்கிறார் எனில் அதனை அனைவருமே செய்து முடிப்பீர்கள். நீங்கள் பிறரிடமிருந்து வித்தியாசமாக தெரிந்திட அதனை சிறப்பான விதத்தில் செய்துமுடிக்க வேண்டும், விரைவாக செய்துமுடிக்க வேண்டும். அது அந்த பணியினை பொறுத்தது.
உங்களுக்கு மாற்று இல்லை என உங்களுடைய மேல் அதிகாரி நினைத்துவிட்டாரேயானால் நீங்கள் பிறரிடம் இருந்து மேலான நிலைக்கு சென்றுவிட்டீர்கள் என அர்த்தம். சிலர், கொடுக்கின்ற வேலையை மட்டும் செய்துவிட்டு நான் கொடுத்த வேலையை நன்றாகத்தானே செய்தேன் எனக்கு ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை என புலம்புவார்கள். உயர் பதவிகளுக்கு கொடுப்பதனை மட்டும் செய்கின்ற பணியாள் தேவைப்படுவதில்லை, அதனினும் சிறந்து செயலாற்றுகிற ஒருவர் தான் தேவை என்பதனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் “அனைவரும் ஒரேவிதமாக நோட்டில் படத்தை மட்டும் வரைந்துகொண்டு சென்றால், நீங்கள் கட்டம் போட்டு அதனில் படத்தை வரைந்து கொண்டு செல்வது மாதிரி” நான் சொல்லுகின்ற “சிறப்பான விதம்” என்பது ஒவ்வொரு பணிக்கும் வித்தியாசப்படும். நிச்சயமாக புரிந்திருக்கும் என நம்புகிறேன் போட்டி நிறைந்திட்ட உலகில் தகுதி உடைய நபராக செயலாற்றுவது என்பது அவசியமான ஒன்று.
புரிந்துகொண்டீர்களா?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!