1891 இல் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜே.எச்.ஏ. ட்ரெமென்ஹீரே மற்றும் கிறித்துவ மிஷனரிகள் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். தலித் எனப்படும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வாழ்வதை ஆங்கிலேய அரசுக்கு தெரிவிப்பதே அதன் நோக்கம். பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த சொந்தமாக நிலங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என கோரினர். அந்த கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் தான் “பஞ்சமி நிலம்”
பஞ்சமி நிலம் என்றால் என்ன?
இந்தியா வெள்ளைக்காரர்களுக்கு அடிமைப்பட்டு இருந்த கால கட்டங்களில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்கள் பெரிய ஜமீன்தார்களுக்கும் நில சுவான்தார்களுக்கும் அடிமைப்பட்டு இருந்தார்கள். இவர்களுடைய உழைப்பை மட்டும் சுரண்டிக்கொள்ளும் அதிகார வர்க்கத்தினர் இவர்களுக்கு குறைந்தபட்ச உணவு, இருப்பிட வசதியைக்கூட வழங்காமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். தங்களது உணவு பாத்திரத்தை கழுவும்போது அதில் இருந்து சிந்திய விதையால் முளைத்த தக்காளி செடியில் இருந்து வரக்கூடிய தக்காளியைக்கூட பறிக்க உரிமை அற்றவர்களாகத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். இவர்களது இந்த இழிவான நிலைக்குக் காரணம், அவர்களிடம் நிலம் இல்லை என்பது தான். வாழ்க்கையை நகர்த்த அவர்கள் ஏதாவது ஒரு நில உரிமையாளரிடம் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை. ஆகவே, அவர்கள் தங்கள் உரிமை, உணவு, உறைவிடம் பற்றியெல்லாம் பேசவே முடியாது.
1891 கால கட்டங்களில், அப்போதைய செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜேம்ஸ் ஹென்றி அப்பர்லி ட்ரெமென்ஹீரே [JAMES Henry Apperley Tremenheere] மற்றும் சில கிறிஸ்துவ மெஷினரிகள் இணைந்து ஒரு ஆய்வை நடத்தின. தலித் மக்கள் இவ்வளவு சிக்கலான நிலையில் வாழ்வதற்கு காரணம் என்ன என ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கம். மிகத்தெளிவாக இந்த ஆய்வினை நடத்திய ட்ரெமென்ஹீரே தலித் மக்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையை இங்கிலாந்துக்கு அனுப்பினார்.
“பறையர்கள் பற்றிய குறிப்புகள்” என்ற பெயரில் அனுப்பப்பட்ட இந்த அறிக்கையில், இந்த மக்களுக்கு வேளாண்மை செய்யவும், தங்கவும் சொந்தமாக நிலங்களை வழங்குவதன் மூலமாக அவர்களின் நிலையினை மேம்படுத்த முடியும் என தெரிவித்து இருந்தார். இவரது ஆய்வு அறிக்கை, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 1892, மே 16 ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனு மீது விவாதம் நடந்து பஞ்சமி நிலம் தொடர்பான சட்டம், 30 செப்டம்பர் 1892 இல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாண அரசும் ட்ரெமென்ஹீரே அனுப்பிய ஆய்வு அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து கவனித்தது. பின்னர், அவர்களுக்கு நிலம் வழங்குவது தொடர்பாக ட்ரெமென்ஹீரே அனுப்பிய கோரிக்கையை ஏற்று இந்தியா முழுமைக்கும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலங்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
1950க்கு பிறகு, ஆச்சார்ய வினோபா பாவே பூமி தான இயக்கத்தின்படி, பல நிலங்களை இதே சட்டப்படி பட்டியலின மக்களுக்கு அரசின் மூலம் வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.
[Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste பட்டியல் வகுப்பினர் (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது]
பஞ்சமி நிலம் என ஏன் அழைக்கப்படுகிறது?
ஆங்கிலேயே அரசு இந்த நிலத்தை வழங்க ஆணையிட்டபோது இந்த நிலங்களை “Depressed Class Land” என்றே அழைத்தனர். இந்தியாவில் இருந்த உயர்சாதி இந்துக்கள் மற்றும் நில பிரபுக்கள், தலித் மக்களை “பஞ்சமர்கள்” என்றே அழைத்தனர். ஆகவே தான் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை அவர்களை DC Land என்று அழைக்காமல் பஞ்சமி நிலம் என அழைத்தனர்.
பஞ்சமி நிலம் விதிகள் என்ன?
ஒருவேளை நமது அரசாங்கம் ஏழைகளுக்கு நிலம் வழங்கினால் கூட இத்தகைய பாதுகாப்போடு வழங்கி இருப்பார்களா எனத்தெரியவில்லை. வெள்ளைக்காரர்கள் பஞ்சமி நிலம் தொடர்பாக விரிவான விதிகளை வகுத்து அதன்படியே நிலத்தை வழங்கி இருக்கிறார்கள். அதன்படி,
1. இந்தியா முழுமைக்கும் உள்ள பட்டியலின மக்களுக்கு இலவச நிலங்கள் வழங்கப்பட்டன. இதில் விவசாயம் செய்யவோ அல்லது வீடு கட்டிக்கொள்ளவோ அம்மக்களுக்கு அனுமதி உண்டு.
2. முதல் பத்து ஆண்டுகளுக்கு அந்த நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாது.
3. 10 அங்குகளுக்கும்`ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை விற்க உரிமை உண்டு. அப்படியே விற்றாலும் அந்த நிலங்களை அதே பட்டியலின மக்களிடம் மட்டுமே விற்க முடியும். வேறு சாதியினருக்கு விற்க முடியாது. உயர்சாதி இந்துக்கள் ஏழைகளின் நிலங்களை மீண்டும் வாங்கிக்கொண்டு அவர்களை அடிமைப்படுத்திட வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தால் இந்த விதி போடப்பட்டது.
4. பட்டியலினத்தை சேராத ஒருவர் பஞ்சமி நிலத்தை வாங்க முயற்சித்தால் அதனை அரசு பதிவு செய்திடக்கூடாது. அப்படியே தவறு நடந்து பதிவு செய்துவிட்டால் எந்தவித இழப்பீடும் இன்றி அந்த நிலங்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.
பறிபோன பஞ்சமி நிலம்
பஞ்சமி நிலங்களை அம்மக்களிடம் இருந்து பறித்துவிடக்கூடாது என்பதற்காக கடுமையான விதிகள் போடப்பட்டு இருந்தாலும் கூட, விதிமுறைகளைக் கடந்து அந்த நிலங்கள் பறிபோயின. நிலம் கொடுத்தால் சொந்தமாக விவசாயம் செய்து சுயமரியாதையோடு வாழ்வார்கள் என நினைத்து நிலம் வழங்கப்பட்டது. ஆனால், அதனை அம்மக்களில் பெரும்பாலானோர் உணரவில்லை, அவர்களால் அங்கே இருந்த நில சுவாந்தார்களை எதிர்த்து சுயமாக விவசாயம் செய்ய இயலவில்லை, மிரட்டல், கடன் போன்ற சிக்கல்களால் பஞ்சமி நிலங்கள் பறிபோயின.
காலம் செல்ல செல்ல பஞ்சமி நிலம் என நிலத்தை வரைமுறைப்படுத்தி குறிப்பிடும் வழக்கம் பதிவுத்துறையில் இருந்தும் மறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், நிலத்தை பதிவு செய்திட செல்லும் போது அந்த நிலம் பஞ்சமி நிலமா என்பதை சோதிப்பதையே அதிகாரிகள் மறந்துபோய் விட்டார்கள்.
பஞ்சமி நிலங்கள் எவ்வளவு இருக்கிறது, யாரிடம் இருக்கிறது, எவ்வளவு பஞ்சமி நிலங்கள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான தெளிவான தரவுகள் அரசிடமே இல்லை. குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கும் கூட அவர்களுக்கு பஞ்சமி நிலம் இருக்கிறதா, இப்போது அது யாரிடம் இருக்கிறது என எந்த விவரமும் தெரியவில்லை.
பஞ்சமி நிலங்கள் மீட்பு எந்த நிலையில் இருக்கிறது?
வெகுசிலர் தான் பஞ்சமி நிலங்கள் குறித்து பேசுகின்றனர். ஒருவேளை தங்களுக்கும் பஞ்சமி நிலம் இருக்கிறது என்பதை அறிந்தால் மக்கள் இதற்கான குரலை கொடுப்பார்களா எனத்தெரியவில்லை. அரசியல் கட்சிகளும் கூட பெரிதாக பஞ்சமி நிலங்களை மீட்பதில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் பஞ்சமி நில மீட்பு விவகாரம் தொய்வடைந்து வருகிறது.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது கருப்பன் ஐஏஎஸ் தலைமையில் ஓர் ஆணையம் ஏற்படுத்தினார்கள். ஆனால், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது அந்த ஆணையத்தை புதுப்பிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்கள் விற்பனை குறித்து விசாரணை செய்து, அறிக்கை வழங்க 17 சனவரி 2011 அன்று முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் எம். மருதமுத்து தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும், பஞ்சமி நிலங்களை மீண்டும் பட்டியல் சமூகத்தினர்களுகு திருப்பி வழங்க, நில நிர்வாக ஆணையர் தலைமையில் மாநில அளவிலான குழுவை 13 அக்டோபர் 2015 அன்று அமைத்துள்ளது
பஞ்சமி நிலங்களை பட்டியல் வகுப்பினருக்குத் தவிர பிற வகுப்பினர்க்கு விற்கவோ அல்லது குத்தகைக்கு விட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்துள்ளது.
உங்கள் பஞ்சமி நிலத்தை மீட்பது எப்படி?
தீர்ப்புகள் வந்தாலும் கூட அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. தற்போது பஞ்சமி நிலங்கள் குறித்த தகவல்கள் பெரிதாக இல்லை என்று சொல்லப்படும் சூழலில், சென்னை ஆவண காப்பகத்தில் 1000 ஆண்டுகளுக்கான நில ஆவணங்கள் இருப்பதாகவும் அங்கே அரசு ஆய்வு நடத்தினால் பஞ்சமி நிலங்கள் குறித்த தெளிவான தகவல் கிடைக்கும் என்றும் பஞ்சமி நில மீட்பு தொடர்பானபணிகளில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களுக்கு பஞ்சமி நிலம் உள்ளதா என்பதை அறிய முயற்சி செய்திடுங்கள். அதுபற்றிய பழைய ஆவணங்கள் இருந்தால் தேடிப்பார்க்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் அதனை மீட்க நீங்கள் வழக்கு தொடரலாம். அதுபோலவே, இதுசார்ந்து இயங்கக்கூடிய இயக்கங்களில் உங்களையும் இணைத்துக்கொண்டு நீங்கள் பஞ்சமி நிலத்தை மீட்க உரிமைக்குரல் எழுப்பலாம்.