“வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” புத்தகம் குறித்து சுனிதா கணேஷ் குமார் அவர்கள் முகப்புத்தகத்தில் எழுதிய புத்தக அறிமுக கட்டுரை உங்களுக்காக….
இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் பதினொரு கதைகள் உள்ளன.. இவற்றில் வெளிப்பாடு, ஒரு கட்டுக்கதை, வயது, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, கருப்புக் குதிரை சதுக்கம் ஆகிய சிறுகதைகள் அபாரமானவை.. மற்ற கதைகளெல்லாம் ஏதோ ஒரு பேன்டசி வகையில் சிறு சிறு அக உணர்வை வெளிப்படுத்தும் கதைகளாகவே என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது…
“வெளிப்பாடு” என்ற சிறுகதையில் கிராம வாழ்க்கைக்கு பழக்கப்படாதவர் ஆசிரியர் என்பது தாமிரபரணி ஆற்றில் குளித்து உடைமாற்ற ஏற்படும் சங்கோஜம் சொல்கிறது.. மிகவும் சாதாரண வழக்கமாக மாறிப்போன கிராமப் பெண்களின் சமையல் அறையும், கணவனிடம் அரை வாங்குவதையும் எத்தனை இயல்பாக பழகி இருக்கிறார்கள் பெண்கள்.. அண்ணாவின் ஷர்ட் பாண்டுகளை துவைத்து ஆயிரன் பண்ணி வைக்கவில்லை என்றால் கோபித்துக் கொள்வான், வெளியில் எல்லாம் அனுப்ப மாட்டாக என்று சொல்லும் சந்திராவின் பெண்ணும்,தெருவில் நடக்கணும், ஓட்டலில் சாப்பிடணும், கடைக்கு போயி நானே புடவை எடுக்கணும், நிறைய ஊர் பார்க்க வேண்டும் என்று சொல்லும் இடங்களில் எல்லாம் வலி என்று கூட உணர முடியாத வேதனைகள் அந்த பெண்களின் வாழ்வில் மிக இயல்பாய் விரைவு கிடப்பதை உணர முடிந்தது… பெண்களின் மீதான பாதுகாப்பும் ஒருவித அடக்குமுறைதான்.. வீட்டிலிருந்தால் உன்னை காப்பாற்ற முடியும். வெளியில் வந்தால் அபாயம் உன்னை சூலும் என்று கூறியவர் செய்யும் அடக்குமுறையினையும் மெல்லியதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்…
பன்றிக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் ஒரு உரையாடல் போல் நகர்கிறது “ஒரு கட்டுக்கதை” அந்த பன்றிக்கு அதன் சாவில் ஒருவித ஆட்சேபனையும் இல்லை..இன்று இல்லை என்றால் ஆனால் நாளை இறந்து விடுவோம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை..இப்படியான வாழ்வில்தான் வாழவேண்டும் என்ற வகையில்,ஆட்சேபனை காட்டக்கூட அதற்கு அதிகாரம் இல்லை.. சாவில் எம்மாதிரியான சாவு?குச்சி போன்ற “சுழி” என்ற கம்பியினைக் கொண்டோ,அடித்துக் கொள்ளப்படும் மரக்கட்டைகளினாலோ எதுவாயினும் வலிக்க வலிக்க கிடைத்துவிடும் இவ்வாழ்விலிருந்து விடுதலை.. பன்றி எந்த ஒன்றையும் நேரிடையாக குறிப்பிட்டு சொல்லாமல் அந்த மனிதனுக்கு நாம் “சாகப்போகிறோம்” என்று மட்டும் சொல்கிறது.. இதிலிருந்து பன்றி உணர்த்திவிட்டு செல்வது ஏராளம்!
பக்கிங்ஹாம் இல் வசிக்கும் இந்திய பெண்கள் இருவரை வைத்து ஆரம்பிக்கிறது “வயது” கதை.. தீபவிளக்கு ஏற்றியும் கோலம் போட்டும் இந்திய கலாச்சாரத்தை இங்குள்ள இந்தியர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறாயா? என்ற கேள்விக்கு, இந்தியாவையே பார்க்காத இந்தியர்கள் என்று அழைக்கப்படும் எங்களுக்கு வேறு எந்த வேர்கள் இருக்க முடியும் இங்கே? என்ற லாஜ்வந்தியின் கேள்வியிலும்.. எங்களுக்கு பயமில்லாமல் வாழவேண்டும்.. ஒரு சாதாரண பிரஜை க்கு உரிய கௌரதையுடன் இருக்கும் உரிமை எனக்கு தேவை என்று அகதியாய் வாழும் ஆண்டோனியாவின் வார்த்தைகளிலும் தொக்கிக்கொண்டு நிற்கிறது தாய்நாட்டின் உரிமையும், ஏக்கங்களும்…
வீட்டு வேலைகளை செய்யாத பெண்ணை பொதுவெளியில் கிண்டலடிக்கும் எத்தனையோ பெண்களை பார்க்கமுடிகிறது.. சதா சமையலறையிலும், சுத்தம் செய்வதிலும், குடும்பத்தின் பிற உறுப்பினர்களின் மீது காட்டும் அக்கறை என அவர்களுக்காக வேலை செய்வதிலேயே கரைகிறது பெண்களின் வாழ்க்கை பெரும்பாலும்..
சமையலறையை ஆக்கிரமித்துக் கொள்..அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே.. இரண்டும் தான் உன் பலம்..அதிலிருந்து தான் அதிகாரம்.
“வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற இந்த கதையினை படிக்கும்போது கதை முழுவதும் ஒரு மென்நகைச்சுவை இலையோடிக்கொண்டே இருந்தது எனக்கு.. இத்தனை வருடங்கள்கழித்து பெண் சமூகத்தின்பால் (என் குடும்பத்தில்) ஏற்பட்ட முன்னேற்றம் கூட இருக்கலாம் என்னுடைய இந்த உணர்வு.. ஆனாலும் வட இந்தியர்கள் வீட்டின் அருகில் வாழ்ந்த அனுபவம் உண்டு எனக்கு.. இன்றைய காலகட்டத்திலும் இதேபோன்ற காட்சிகளை நான் அந்த வீடுகளில் பார்த்திருக்கிறேன்.. உடல்நலம் சரியில்லாமல் மயங்கி பின்பு தெளிவடையும் ஜிஜி, முதலில் நினைத்தது அந்த சாவிக்கொத்து! அந்த சமையலறையின் மீது தனக்கு இருந்த அதிகாரம்!! இதுதானா வாழ்க்கை? என்ற சிறு எண்ணமும் கூட இல்லாமல் தன்னுடைய சமையல் வேலை மும்முரத்தில் தன் மகனை பற்றி சிந்தனை இல்லாமல் அவனை இழந்த பிறகும் கூட காரியம் முடித்து மிச்சப்பூரிகளையும் பொறித்தெடுத்தேன் என்று தன்னுடைய நல்ல பெயரை நிலைநாட்டிக் கொள்வதாக சாதாரணமாக கூறுவது, சமையல் ஒன்றுதான் வாழ்க்கையாகக் கொண்ட பெண்கள் பலரின் சுய விருப்பமற்ற வாழ்க்கையை முன்னிறுத்துகிறது.
தன்னுடைய உடலுறுப்புகளின் மீதான அடக்கமும், தன்னுடைய உணர்வுகளின் மீதான கட்டுப்பாடும் பெண்களை எப்போதும் இறுக்கிக்கொண்டே இருக்கிறது.. பெண்களின் ஆழ்மனதில் காணப்படும் இறுக்கங்களை மிக சாதாரணமாகவே சொல்லிவிடுகிறார் ஆசிரியர்.. மனிதர்களின் அகம்சார்ந்த பயணங்களாகவே இவருடைய கதைகள் இருக்கின்றன.
மேலும் பல புத்தகங்கள் குறித்து வாசிக்க Click Here