அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த தமிழின் தொன்மையான இலக்கியங்களை வரும் தலைமுறைக்காக புதுப்பித்து பாதுகாத்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
ஒரு மொழியை அல்லது இனத்தை அழிக்க வேண்டுமெனில் அதன் புகழ் மணக்கும் இலக்கியங்களை அழித்தால் போதும் என்பார்கள். ஆகையினாலேயே படையெடுப்புகளின் போது பெரும்பாலும் கல்வி நிலையங்களும் புத்தகசாலைகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஒரு இனம் அல்லது மொழி வாழ்வாங்கு செழித்து வாழ்வதற்கு அதன் இலக்கியங்களையும் பண்டைய நூல்களையும் காத்திடுவது அவசியமாகிறது. இன்று கீழடி உள்ளிட்ட அகழ்வாராச்சி நடைபெறும் இடங்களில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டுபிடிக்கப்படும் போது நாம் பெருமையடைகிறோம். ஆனால் வெறுமனே பானைகளும் கிணறுகளும் ஓடுகளும் வீடுகளும் போதுமா நாம் எத்தகைய பெருமை வாய்ந்தவர்கள் என்பதை உலகிற்கு உரைக்க?
தோண்டப்படும் பொருள்களில் புத்தகங்களும் இருக்கின்றனவா? ஆண்டுகள் ஆயிரம் கடந்திட்டபடியால் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் இருந்திருந்தாலும் கூட அவை மக்கி மண்ணாய்ப் போயிருக்கும். ஆனால் அவற்றைக் காத்து பிற்காலத்தில் வரப்போகும் தன் தமிழ்ப்பிள்ளைகள் நிமிர்ந்து நிற்க சான்று தந்தவர் தான் தமிழ் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் தமிழறிஞர் திரு உ.வே.சாமிநாத ஐயர். அவரைப்பற்றித்தான் இந்தக்கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.
உ.வே.சா. என்பதற்கு விளக்கம் “உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன்” என்பது தான். இவர் பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் பிறந்தார். உ.வே.சா. இவர் வேங்கட சுப்பையர் – சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். இவரது தந்தை இசையுடன் ஹரிகதா கலாட்சேபம் செய்பவர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார். பின்னர் தன் 17 ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார். தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.
துவக்கம் முதலே தமிழ் கற்பதில் பெரிய ஆர்வம் மிக்கவராகவே இருந்து வந்தார் உ.வே.சா. உவேசாவின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்து சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக்கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உவேசா தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத்தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப்புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது.
உ.வே.சா அவர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் கல்வி கற்றிருக்கிறார். திருநாகைக்காரோணம், நைடதம், திருக்குடந்தைத்திரிபந்தாதி, பழமலைதிருபந்தாதி, திருப்புகலாதிருபந்தாதி, மறைசையந்தாதி, தில்லையக அந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழநிர்வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஸ்டபபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் ஆகிய நூல்களை இவரிடம் கற்று இருக்கிறார். விருத்தாச்சலம் ரெட்டியாரிடம் தமிழையும் பாடல் எழுதுவதன் நுணுக்கங்களையும் அங்கு கற்றார்.
உவேசா திருவாடுதுறையில் தங்கியிருந்த பொழுது தாமும் விரும்பிய நூல்களை கற்றுக்கொண்டு மாணவர்களுக்கும் நூல்களைக் கற்பித்து வந்தார். செய்யுள் இயற்றுவதிலும் பயிற்சி செய்து தமது திறமையை வளர்த்துக் கொண்டார்.திருவாடுதுறை ஆதினத்தின் ஆதரவில் தாம் நல்ல முறையில் வாழ முடியும் என்ற நம்பிக்கை உவேசாவிற்க்கு இருந்தது. அப்பொழுது 1880 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உவேசா வாழ்வில் மிகப்பெரிய திருப்பம் நிகழ்ந்தது. தியாகராச செட்டியார் அவர்கள் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையை தாம் விட்டுவிட முடிவுசெய்து விட்டதாகவும். அந்த வேலைக்கு உவேசாவைப் பரிந்துரைத்துள்ளதாகவும் ஆதினம் சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். திகைப்படைந்த தேசிகர், உவேசாவை அனுப்பும் எண்ணமில்லை என்று மறுத்து விட்டார். ஆனாலும் செட்டியாரவா்கள் ஒரு நாள் மடத்திலேயே தங்கி ஐயரவர்களின் எதிர்காலம் கருதி அவரை அனுப்பவேண்டும் என்று உருக்கமாக வேண்டினார். உவேசாவிடம் கல்லூரி வேலையின் மேன்மையையும் இங்கு வருடம் முழுவதும் உழைத்தாலும் கிடைக்காத ஊதியம் அங்கு மாதம்தோரும் நிலையாக வரும்மென்றும் எடுத்துக் கூறினார்.
ஆனால் உவேசா பணம் பதவியைப் பொருட்படுத்தாமல். மடத்தில் எல்லா வசதிகளையும் சன்னிதானம் பார்த்துக் கொள்கிறது. ”திருவாடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளது என்பதை செட்டியார் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை”. என்று பதிவு செய்கிறார். பணம் பதவிக்கு ஆசைப்படாமல்திருவாடுதுறை மடம் காட்டிய ஆதரவிற்கு நன்றி பாராட்ட வேண்டும் என்ற உணர்வு உவேசாவிடம் இயற்கையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். கல்லூரிப்பணி உவேசாவின் உள்ளத்தைக் கவர்ந்திருந்தாலும் மடத்தில் மற்றவர்கள் செலுத்திய அன்பும் தேசிகரின் ஆதரவும் உவேசாவின் உயிரோடு இணைந்து நின்றது. செட்டியார் கூறியதைக் கேட்ட உவேசா சன்னிதானம் இசைவு தெரிவித்தால் செல்வது என்று முடிவு செய்தார். செட்டியாரின் விடாமுயற்சி பலித்தது. உவேசாவால் மடத்திற்கு அநேக நன்மை இருந்தாலும் அவாின் எதிா்காலத்தை மனதில் கொண்டு சுப்பிரமணியதேசிகர் அவரை மடத்திலிருந்து அனுப்ப இசைவு தெரிவித்தார்கள்.
திருப்பம் தந்த சந்திப்பு
உ.வே.சாமிநாத ஐயர் தமிழ் நூல்கள் பலவற்றை கற்றார். கல்லூரியில் பணி செய்து மாணவர்களுக்கும் சிறப்பாக கற்பித்தார். ஆனால் அதற்காகவெல்லாம் அவர் இன்று கொண்டாடப்படுவது கிடையாது. அதனினும் சிறந்த தொண்டை தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கிறார். அதனாலேயே அவர் கொண்டாடப்படுகிறார். உ.வே.சா அவர்கள் அழியும் நிலையில் இருந்த பல இலக்கியங்களை புத்தாக்கம் செய்து பதிப்பித்தார். ஓலைச்சுவடிகளில் பதிந்திருந்த தமிழ் வளங்களை மீள்பதிப்பு செய்தார். அப்படி செய்திடும் போது வெறுமனே எழுதியிருந்ததை அப்படியே செய்திடாமல், சிதைந்து போன வார்த்தைகளுக்கு ஆராய்ச்சி செய்து சரியான வார்த்தைகளால் பூர்த்தி செய்வது, பின்னாட்களில் வாசிப்போருக்கு புரியாது என்பதற்காக விளக்கவுரை எழுதுவது என அற்புதம் நிகழ்த்தியிருப்பார். அதற்காகவே அவர் இன்றளவும் கொண்டாடப்படுகிறார்.
தான் தமிழ் மெத்த படித்தவன் என்றே உ.வே.சா அவர்கள் நினைத்திருந்தார். ஆனால் ஒருவருடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு அவருடைய எண்ணத்தை உடைத்தெறிந்தது. தமிழுக்கு இன்னும் சிறந்த தொண்டாற்றிட வேண்டும் என ஊக்குவித்தது அந்த சந்திப்பு தான்,
கும்பகோணத்துக்கு முன்சீப்பாக சேலம் இராம சுவாமி முதலியார் என்பவர் மாற்றலாகி வந்தார். முதலியார் சேலத்தில் ஒரு பெரிய மிட்டா ஜமீன்தார் பரம்பரையினர். இளமையிலேயே பேரறிவு படைத்து விளங்கினார். தமிழிலும், சங்கீதத்திலும், வடமொழியிலும் பழக்கமுள்ளவர். கும்பகோணத்தில் வேலை பார்த்துவந்த காலத்தில் அவருடைய திறமை ஓரளவு வெளிப்பட்டு ஒளிர்ந்தமையால் அவரைத் தக்க கனவான்கள் சென்று பார்த்துப் பேசிவிட்டு வந்தார்கள்.
முதலியாரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் முதலில் என்னிடம் இல்லை. ஆனால், ஆதீன மடத்தில் இருந்து சொல்லி அனுப்பியதால் ஒருநாள் அவரை பார்க்க புறப்பட்டேன். அன்று வியாழக்கிழமை (21-10-1880) அவர் இருந்த வீட்டை அடைந்து அவரைக் கண்டேன். நான் கல்லூரியில் இருப்பதையும் மடத்தில் படித்தவன் என்பதையும் சொன்னேன். அவர் யாரோ அயலாரிடம் பாராமுகமாகப் பேசுவது போலப் பேசினார். என்னோடு மிக்க விருப்பத்தோடு பேசுவதாகப் புலப்படவில்லை. `அதிகாரப் பதவியினால் இப்படி இருக்கிறார்; தமிழ் படித்தவராக இருந்தால் இப்படியா நம்மிடம் பேசுவார்?’ என்று நான் எண்ணலானேன்.
`நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்?’ என்று அவர் கேட்டார்.
`மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன்’ என்றேன்.
பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டவுடன் அவரிடம் ஏதாவது கிளர்ச்சி உண்டாகும் என்று எதிர்பார்த்தேன். என்னுடைய உத்தியோகத்துக்காக என்னை மதிக்கா விட்டாலும், பிள்ளையவர்கள் மாணவன் என்ற முறையிலாவது என்னிடம் மனம் கலந்து பேசலாமே. அவர் அப்படிப் பேச முன்வரவில்லை. கணக்காகவே பேசினார்.
“என்ன பிரயோசனம்?”
`பிள்ளையவர்கள் பெயரைக் கேட்டுப் புடைப் பெயர்ச்சியே இல்லாமலிருக்கும் இவராவது, தமிழில் அபிமானம் உடையவராக இருப்பதாவது… எல்லாம் பொய்யாக இருக்கும்’ என்று நான் தீர்மானம் செய்துகொண்டேன்.
அவர் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. `என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?’ என்ற கேள்வி அடுத்தபடி அவரிடம் இருந்து வந்தது. `இதற்கு நாம் பதில் சொல்லும் வகையில் இவரைப் பிரமிக்கும்படி செய்துவிடலாம்’ என்ற நிச்சய புத்தியோடு நான் படித்த புஸ்தகங்களின் வரிசையை ஒப்பிக்கலானேன்.
`குடந்தை யந்தாதி, மறைசை யந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக் குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ், திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை…’ என்று சொல்லிக்கொண்டே போனேன். அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழ்களில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள் இப்படியே பிரபந்தங்களை அடுக்கினேன். அவர் முகத்தில் கடுகளவு வியப்பு கூடத் தோன்றவில்லை.
`இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?’ என்று திடீரென அவர் இடைமறித்துக் கேட்டார். நான் மிக்க ஏமாற்றம் அடைந்தேன். `இவர் இங்கிலீஷ் படித்து அதிலே மோகங்கொண்டவராக இருக்கலாம். அதனால்தான் இப்படிச் சொல்கிறார்’ என்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று. ஆனாலும் நான் விடவில்லை. புராண வரிசையைத் தொடங்கினேன்.
`திருவிளையாடற் புராணம், திருநாகைக் காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், குற்றாலப் புராணம்…’
அவர் பழையபடியே கற்சிலைபோல இருந்தார்.
`நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞானசித்தியார் உரை…’ என்னும் நூல்களின் பெயர்களைச் சொன்னேன். இலக்கண நூல்களை எடுத்துக் கூறினேன். அப்போதும் அவருக்குத் திருப்தி உண்டாகவில்லை. `அடடா! முக்கியமானவற்றை அல்லவா மறந்துவிட்டோம்? அதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவரை வழிக்குக் கொண்டுவந்திருக்கலாமே!’ என்ற உறுதியுடன், `கம்பராமாயணம் முழுவதும் இரண்டு, மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடமும் சில காண்டங்களைப் பாடம் கேட்டிருக்கிறேன்’ என்றேன்.
இராமசுவாமி முதலியார், `சரி, அவ்வளவுதானே?’ என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. `கம்பராமாயணத்தில்கூடவா இவ்வளவு பாராமுகம்… இவ்வளவு அசட்டை!’ என்ற நினைவே அதற்குக் காரணம். அதற்கு மேலே சொல்ல என்ன இருக்கிறது? ஆனால், அவர் என்னை விடுகிறவராக இல்லை. மேலும் கேள்வி கேட்கலானார்.
இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களெல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?’
எனக்கு அவர் எதைக் கருதிக் கேட்டார் என்று தெரியவில்லை. `பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையே நான் படித்திருப்பதாக இவர் எண்ணிக்கொண்டாரோ? கந்த புராணம், பெரிய புராணம் முதலியவைகளெல்லாம் பழைய நூல்களல்லவோ? கம்பராமாயணம் பழைய நூல்தானே? பழைய நூலென்று இவர் வேறு எதைக் கருதுகிறார்?’ என்று யோசிக்கலானேன்.
`நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் இருக்கின்றனவே!’ என்றேன் நான்.
`அவற்றுக்கெல்லாம் மூலமான நூல்களைப் படித்திருக்கிறீர்களா?’ என்று அவர் கேட்டபோதுதான் அவரிடம் ஏதோ சரக்கு இருக்கிறதுஎன்ற எண்ணம் எனக்கு உண்டாயிற்று.
`தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லையே?’ என்றேன்.
`சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா?’
அவர் சொன்ன நூல்களை நான் படித்ததுஇல்லை; என்னுடைய ஆசிரியரே படித்தது இல்லை. புஸ்தகத்தைக்கூட நான் கண்ணால் பார்த்ததில்லை. ஆனாலும், `இவ்வளவு புஸ்தகங்களைப் படித்ததாகச் சொன்னதைப் பொருட்படுத்தாமல், எவையோ இரண்டு, மூன்று நூல்களைப் படிக்கவில்லையென்பதைப் பிரமாதமாகச் சொல்ல வந்துவிட்டாரே!’ என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்துகொண்டது.
`புஸ்தகம் கிடைக்க வில்லை; கிடைத்தால் அவையும் படிக்கும் தைரியமுண்டு’ என்று கம்பீரமாகச் சொன்னேன்.
சாதாரணமாகப் பேசிக்கொண்டு வந்த முதலியார், நிமிர்ந்து என்னை நன்றாகப் பார்த்தார். `நான் புஸ்தகம் தருகிறேன்; தந்தால் படித்துப் பாடம் சொல்வீர்களா?’ என்று கேட்டார்.
`அதிற் சிறிதும் சந்தேகமே இல்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்’ என்று தைரியமாகச் சொன்னேன். அறிவு பலத்தையும் கல்வி-கேள்விப் பலத்தையும் கொண்டு எப்படியாவது படித்து அறிந்துகொள்ளலாம் என்ற துணிவு எனக்கு உண்டாகிவிட்டது.
`சரி, சிந்தாமணியை நான் எடுத்துவைக்கிறேன். நீங்கள் படித்துப் பார்க்கலாம். அடிக்கடி இப்படியே வாருங்கள்’ என்று அவர் சொன்னார். நான் விடைபெற்றுக்கொண்டு வந்தேன். பார்க்கச் சென்றபோது அவர் இருந்த நிலையையும் நான் விடை பெறும்போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்லர்என்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவரென்றும் உணர்ந்தேன்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை இராமசுவாமி முதலியாரிடம் போனேன். அன்று அவர் மிகவும் அன்போடு என்னை வரவேற்றார். அவரைப் பார்ப்பதைவிட அவர் சொன்ன புஸ்தகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது.
அவர் தம்மிடம் இருந்த சீவக சிந்தாமணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார். `இதைப் படித்துப் பாருங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாமா?’ என்றார். `அப்படியே செய்யலாம்” என்று உடன்பட்டேன். பிறகு, அவர் அந்தப் பிரதியைத் தாம் பெற்ற வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.
`எனக்குச் ‘சிந்தாமணி’ முதலிய பழைய புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்தத் தேசத்தில் நான் சந்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகவே தெரியவில்லை. ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை. ஒரு சமயம் ஸ்ரீ வைகுண்டத்துக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் பரம்பரை வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் ஒரு வழக்கில் சாக்ஷியாக வந்தார். அந்தச் சாக்ஷியை விசாரித்தபோது, அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவருடைய முன்னோர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்களென்றும் என் நண்பருக்குத் தெரியவந்தது. விசாரணையெல்லாம் முடிந்த பிறகு, முன்சீப் அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து அவர் வீட்டில் ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தார். அவர், `இருக்கின்றன’ என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதியிருந்தால் தேடி எடுத்துத் தர வேண்டுமென்று கூறினார். அதிகாரப் பதவியில் இருந்தமையால் அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவக சிந்தாமணிப் பிரதியைக் கொண்டுவந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பினார். அதிலிருந்து காகிதத்திற்கு பிரதி பண்ணிய புத்தகம் இது.
`இவ்வளவு கஷ்டப்பட்டு இதனைப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லை. நான் காலேஜில் படித்தபோது இதன் முதற்பகுதியாக நாமகளிலம்பகம் மாத்திரம் பாடமாக இருந்தது. அதை ஒரு துரை அச்சிட்டிருந்தார். அதில் தமிழைக் காட்டிலும் ஆங்கிலம் அதிகமாயிருந்தது. நூல் முழுவதும் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் நான் போகும் இடங்களில் உள்ள வித்துவான்களை எல்லாம் விசாரித்துப் பார்க்கிறேன். எல்லோரும் அந்தாதி, பிள்ளைத் தமிழ், புராணங்கள் இவற்றோடு நிற்கிறார்களே ஒழிய, மேலே போகவில்லை. அதனால் நான் மிகவும் அலுத்துப்போய்விட்டேன்.
`புத்தகம் , மிகச் சிறந்த புத்தகம். கம்ப ராமாயணத்தின் காவிய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் செய்துகொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது; எனக்கும் இன்பம் உண்டாகும்.’
சிந்தாமணியைப் பிழையில்லாமல் பதிப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் உவேசா முயற்சி தொடர்ந்தது. இதனால் காலதாமதம் ஆயிற்று ஒவ்வொறு விசயத்தையும் சந்தேகமறத் தெளிந்து பின்பு வெளியிடுவது எளிதன்று என்றும் இப்படி ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் செலவாகி விடும் என்று நண்பர்கள் அறிவுறுத்த உவேசாவும் நூலைப்பதிப்பிக்கலாம் எனவும் திருத்தங்கள் தேவைப்படின் அடுத்த பதிப்பில் மேற்கொள்ளலாம் என முடிவு செய்தார்.
அடுத்து பத்துப்பாட்டை பதிப்பிக்கும் முயற்சியை ஐயரவர்கள் கையிலெடுத்தார்கள். சீவக சிந்தாமணி போலவே ஏட்டுச் சுவடிகளை தேடி ஊர்ஊராகக் சென்றாா். ஒரு பிரதி அவர் கைவசம் ஏற்கனவே இருந்தது. “பத்துப்பாட்டில் விசயம் தெரியாமல், பொருள் தெரியாமல், முடிவு தெரியாமல் மயங்கிய போதெல்லாம் இந்த வேலையை நிறுத்தி விடலாம் என்று சலிப்புத் தோன்றும். ஆனால் அடுத்த கணமே ஒரு அருமையான விசயம் புதிதாகக் கண்ணில் படும் போது, அத்தகைய விசயங்கள் சிரமமாக இருந்தாலும் அவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கலாம் என்ற எண்ணம் உண்டாகும்” என்று தமது விடாமுயற்சியை உவேசா பதிவு செய்கிறார். சில கெட்டஎண்ணம் கொண்ட மதியிலோர் உவேசாவின் முயற்சியில் குற்றம் கண்டு தமது சுயவிளம்பரத்திற்காக துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். இதற்கு மறுப்பு எழுதவேண்டும் என்று உவேசா விரும்பினார். சாது சேசையர் அவர்கள் இவ்வாறு நீங்கள் மறுப்பு எழுதினால் உங்கள் காலம் இதிலேயே வீணாகும் எனவும், மறுப்புக்கு மறுப்பு என்று இது வளரும் எனவும், இதைப் பொருட்படுத்த தேவையில்லை எனவும், அறிவுறுத்தியதுடன் தாம் எழுதி எடுத்துச் சென்ற மறுப்பைக் கிழித்துப் போட்டதாக உவேசா தெரிவிக்கின்றார்.
அடுத்ததாக புறநாநூறு பதிப்பிக்கும் முயற்சியை உவேசா கையிலெடுத்தார்கள். அப்பொழுது கும்பகோணம் கல்லூரியில் சாித்திர ஆசிரியர் வைத்திருந்த பைபிளைக் காணும் வாய்ப்புக்கிடைத்தது. பைபிளை ஆராய்ந்து ஒரே மாதிரியான கருத்துள்ள பகுதிகளை ஆங்காங்கே காட்டிப் பதிப்பித்திருக்கின்றார்கள். புறநாநூறையும் இது போல் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. “புறநாநூறை ஆராய்ச்சி செய்வதற்கு சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதானல் எனக்கும் பன்மடங்கு இன்பமுண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று” என்று உவேசா குறிப்பிடுகிறார். புறநாநூறு நூல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் பொழுது கும்பகோணம் கல்லூரியில் முதல்வர் ஜே ஹெச் ஸ்டோன் என்பவர் சேக்ஸ்பியர் நாடகமான ‘நடுவேனிற் கனவு’ (Mid summer nights dream) தமிழில் நடித்துக்காட்ட ஏற்பாடு செயதார். உவேசா மொழி பெயர்ப்பைச் சரிபார்த்து இடையே தமிழ்ப் பாடல்களையும் இயற்றிச் சோ்த்தார். இம்முயற்சியின் தொடர்ச்சியாக ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உதவியுடன் சேக்ஸ்பியரின் நாடகங்களையும் மகாகவி காளிதாசரின் நாடகங்களையும் தமிழில் வெளியிட வேண்டுமெனவும் விரும்பினார்கள். பல கல்லூரி ஆசிரியர்கள் உவேசாவைப் புதிதாக வசனநூல்களை எழுதும்படியும், அவைகளைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம் அதனால் நல்ல பொருள் ஈட்டலாம் என்றும் யோசனை கூறினாலும் இவர் மனம் இதில் நாட்டம் கொள்ளாமல் பழந்தமிழ் நூலாராய்ச்சியிலேயே மனம் ஒன்றிப் போனதாகக் குறிப்பிடுகின்றார்.
ஆளுமைகளைக் கொண்டாடுவோம்
இதையெல்லாம் ஏன் தேவையில்லாமல் செய்கிறார் என அன்று பலர் நிச்சயமாக உ.வே.சாமிநாத ஐயர் அவர்களை விமர்சித்து இருக்கலாம். காரணம் இவர் பல நூல்களை மறுபதிப்பு செய்த போது அதற்காக பணப்பரிசை எவரும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர் எதையும் எதிர்பாராமல் செய்ததினாலேயே பல இலக்கிய நூல்களை நம்மால் இன்று வாசிக்க முடிகிறது. நம்முடைய பழைய பெருமைகளை பேச முடிகிறது.
எதிர்கால தலைமுறைக்கு ஒரு விசயம் பயன்படும் எனத்தெரிந்த பிறகு எதையும் எதிர்பாராமல் செயலை செய்து முடிக்க வேண்டும் என்பதைத்தான் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!