ஆயிரம் பிள்ளைகள் கூட்டி
எல்லோருக்கும் நல்ல பாடம் ஊட்டி
அரவணைப்பில் நல்வழி காட்டி
சிகரத்தை அடையாளம் நீட்டி
ஏணியாய் தன்னையும் மாட்டி
ஏறி செல்லடா என்மகனே என்று
நரைமுடி கண்டாலும்
வழுக்கைத் தலை வந்தாலும்
உடல் தலறிப்போனாலும்
தளராத மனம் கொண்டு
தத்தம் மாணாக்கரை உயரமேற்றி
பார்க்கும் பேராற்றல் பெரு மனம்
அந்த சிலருக்கே உண்டு
“நல்லாசிரியர் என்போம்” அவரை …
ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்கவேண்டுமெனில் நல்ல எண்ணமுடையவர்கள் அதிகமாக வாழ வேண்டும். நல்ல எண்ணமுடையவர்கள் பிறக்கும் போதே நல்லவர்களாக பிறப்பது இல்லை. மாறாக, அவர்கள் இந்த சமூகத்தால் ஒவ்வொரு நிலையிலும் பட்டை தீட்டப்படுகிறார்கள்.
பெற்றோரைத் தாண்டி ஒருவரை நல்வழிப்படுத்திடும் பெரும் பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை தங்கள் வழியே அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள் ஆசிரியபெருமக்கள்.
அனைத்து ஆசிரியர்களுமே சிறப்பாக செயல்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே நாம் ஒவ்வொருவரும் சொல்லுவோம். காரணம் எளிது, நாம் படித்து வந்த பள்ளியில் 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தாலும் கூட ஒன்று இரண்டு ஆசிரியர்கள் தான் மாணவர்கள் நலனில் சிறந்த அக்கறையோடு செயல்படுவார்கள்
மற்ற ஆசிரியர்கள் தங்களது பணியை செய்தாலும் கூட அது வாங்குகிற சம்பளத்திற்கு செய்யப்படுகிற பணியாகத்தான் இருக்கும். இன்னும் சில ஆசிரியர்கள் இருப்பார்கள், அவர்கள் தொழில் ஏதேனும் செய்துகொண்டு பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவதை இரண்டாவது வேலையாக செய்து வருவார்கள்.
அனைத்து பாடங்களிலும் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் கூட சில பாடங்களில் பின்தங்கிப்போவதற்கு அத்தகைய ஆசிரியர்களின் அலட்சியத்தன்மை தான் காரணம். அரசு வேலை என்பதனால் அவர்களை களையெடுப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்
இந்த ஆண்டு நல்லாசிரியர் தேசிய விருதுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். சென்னையின் அசோக் நகர் பகுதியில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகின்ற சரஸ்வதி, விழுப்புரம் சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் திலீப் என்ற ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரும் தான் தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பவர்கள்.
அது போதாது, இன்னும் பல ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை மாணவர்களின் நலனை மேம்படுத்திட உழைத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருமே அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டியவர்கள்.
நமக்கு தெரிந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு அங்கீகாரம் கிடைக்காமல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் உண்டு. பாடமே சரியாக நடந்திடாமல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் உண்டு. இவர்கள் இருவருக்கும் எந்த வித்தியாசமும் பார்க்கப்படாதது வருத்தமே.
நல்ல ஆசிரியர்களுக்கு எப்போதும் மாணவர்களின் மனதில் இடம் கிடைத்துவிடுகிறது. மற்ற ஆசிரியர்களுக்கு அது கிடைப்பது இல்லை. படித்து முடித்து பத்தாண்டு இருப்பது ஆண்டுகளுக்கு பிறகு உனக்கு தெரிந்த ஆசிரியர் பெயரை சொல் என்றால் “அப்போது நல்ல ஆசிரியர்களே நினைவில் நிற்பார்கள்”
ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்கள் தங்களது மனதில் இடம் அளிக்கும் விதமாக சிறப்பாக செயல்பட்டால் இன்னும் சிறந்த தலைமுறை உருவாகும்.
ஆசிரியர்கள் எப்போதும் தேயாத ஏணி தான். அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
பாமரன் கருத்து