மத்திய கல்வி அமைச்சகம் சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதை வென்ற 47 நல்லாசிரியர்களின் பெயரை வெளியிட்டு இருக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
சென்னையின் அசோக் நகர் பகுதியில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகின்ற சரஸ்வதி, விழுப்புரம் சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் திலீப் என்ற ஆங்கில ஆசிரியர் ஆகிய இருவரும் தான் தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பவர்கள்.
ஆசிரியர் சரஸ்வதி அவர்கள் பணியாற்றுகின்ற பள்ளியானது பெண் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பள்ளி. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் நடத்தப்படும் இந்த பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 3945. இந்த விருது பற்றி பேசிய ஆசிரியர் சரஸ்வதி இந்த விருதுக்கு தங்கள் பள்ளியில் பணியாற்றும் 121 ஆசிரியர்களும் காரணம் என்றார். அரசு மற்றும் தன்னார்வ குழுக்களின் உதவியின் மூலமாக மிகசிறந்த கட்டமைப்பு மற்றும் சிறந்த ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.
ஆங்கில ஆசிரியர் திலீப், கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். லட்சக்கணக்கான மாணவர்களை சென்றடைந்து இருக்கும் இவரது திட்டம் காரணமாக பல்வேறு விருதுகளை இவர் ஏற்கனவே வாங்கி இருக்கிறார்.
இவர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி குடியரசுத்தலைவர் விருதினை வழங்கி கௌரவிப்பார். தற்போதைய சூழல் காரணமாக ஆசிரியர்கள் வீடியோ கான்பிரன்சிங்கில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்னும் எண்ணற்ற ஆசிரியர்கள் தன்னலம் கருதாது மாணவர்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்கள் அனைவருமே விருதுக்கு தகுதி படைத்தவர்கள் தாம். அவர்களுக்கு இவ்விருது சமர்ப்பணம்.