Site icon பாமரன் கருத்து

செல்வமகள் சேமிப்பு திட்டம் | எப்படி துவங்குவது? விதிகள் என்னென்ன?

செல்வமகள் சேமிப்பு திட்டம்-min

செல்வமகள் சேமிப்பு திட்டம்-min

செல்வமகள் திட்டம் பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்….

 கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த காலகட்டங்களில் பெண் குழந்தைகள் வைத்திருப்போர் அவர்களது எதிர்கால திருமண தேவைக்காகவும் மேற்படிப்பு தேவைக்காகவும் சேமிப்பை துவங்குவது என்பது மிகவும் அவசியமானது. பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே பெற்றோர்கள் சேமிக்க உதவும் ஒரு திட்டம் தான் செல்வமகள் சேமிப்புத்திட்டம் [சுகன்யா சம்ரிதி யோஜனா sukanya samrithi yojana]. வருடத்திற்கு ரூ 250 முதல் ரூ 1,50,000 வரைக்கும் அதிக வட்டித்தொகையுடன் சேமிக்கும் வாய்ப்பை இந்த சேமிப்புத்திட்டம் வழங்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் 7.6% வட்டி இந்த திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

 

ஒவ்வொரு காலாண்டிற்கும் இந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றும் என்றாலும் கூட அண்மைக்காலமாக இதில் மத்திய அரசு எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பெற்றோர்கள் இந்தத்திட்டத்தில் கட்டும் பணம் அனைத்திற்கும் மத்திய அரசு பொறுப்பு என்பதனால் இதில் பயமில்லாமல் பெற்றோர்கள் இணையலாம். இந்தத்திட்டம் குறித்த பல்வேறு தகவல்களை இங்கே விரிவாக பார்க்கலாம். 

1. செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்றால் என்ன?

 

மத்திய அரசினுடைய “பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் [Beti Bachao Beti Padhao]” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செல்வமகள் சேமிப்புத்திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா முழுமைக்கும் இந்தத்திட்டம் பல்வேறு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. இந்தத்திட்டத்திற்கு மத்திய அரசு வைத்துள்ள பெயர் “சுகன்யா சம்ரிதி யோஜனா [sukanya samrithi yojana]. தமிழகத்தில் இந்தத்திட்டம் செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பெற்றோர்கள் கட்டும் பணத்திற்கு 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். அதேபோல பணத்தை திரும்பப்பெறும் போதும் வரிவிலக்கு பெற முடியும். 

2. செல்வமகள் சேமிப்புத்திட்ட கணக்கை எப்போது துவங்கலாம்?

 

ஒரு பெண் குழந்தை பிறந்து 10 வயது ஆகும் வரை எந்த நேரத்திலும் செல்வமகள் சேமிப்புத்திட்ட [சுகன்யா சம்ரித்தி] கணக்கைத் திறக்கலாம், கணக்கு துவங்கும் போது நீங்கள் குறைந்தபட்சம் ரூ. 250 டெபாசிட் செய்ய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில், குறைந்தபட்சம் ரூ. 250 மற்றும் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம்.

கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகள் அல்லது பெண்ணின் 18 வயதுக்குப் பிறகு திருமணம் ஆகும் வரை இந்தக்கணக்கு செயல்பாட்டில் இருக்கும். 18 வயதிற்கு பிறகு குழந்தையின் உயர்கல்விச் செலவுகளின் தேவையைப் பூர்த்தி செய்ய, இருக்கும் தொகையில் 50 சதவீதத்தை எடுக்க குழந்தைக்கு அனுமதி தரப்படுகிறது. 

3. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை துவங்க என்னென்ன விதிகள் உள்ளன?

 

பெண் குழந்தைகளின் பெயரில் மட்டுமே கணக்கை திறக்க முடியும். அதேபோல ஒரு பெண் குழந்தைக்கு ஒரு செல்வமகள் சேமிப்புத்திட்ட கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கை திறக்க முடியாது. ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் (10 வயது வரை) பெண்ணின் பெயரில் அரசால் அனுமதிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

யாருடைய பெயரில் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழுடன், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இருப்பிடம் மற்றும் அடையாளம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களையும் வழங்கவேண்டும். 

4. இத்திட்டத்தில் எவ்வளவு சேமிக்க முடியும்?

 

இந்தத்திட்டத்தில் இணைவதற்கு ஒரு கணக்கு துவங்கும்போது ரூ 250 டெபாசிட் தொகையாக கட்ட வேண்டும். அதற்கு அடுத்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ 250 தவணைத்தொகையாக கட்ட வேண்டும். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ 1,50,000 வரைக்கும் 15 ஆண்டுகள் கட்டலாம்.

நீங்கள் குறைந்தபட்ச தொகையை காட்டாமல் விட்டுவிட்டால் குறிப்பிட்ட அந்தக்கணக்கு சாதாரண கணக்கு போல மாறிவிடும். குறிப்பிட்ட 15 ஆண்டிற்குள் நீங்கள் தவறவிட்ட ஆண்டுகளுக்கான தவணைத்தொகை மற்றும் ஆண்டுக்கு அபராதம் ரூ 50 சேர்த்து கட்டினால் மீண்டும் கணக்கை திரும்பப்பெற முடியும். இல்லையேல் அந்தக்கணக்கு சாதாரண கணக்காக மாறிவிடும். சாதாரண கணக்கிற்கு கொடுக்கப்படும் வட்டித்தொகை தான் வழங்கப்படும்.

 

5. வரிவிலக்கு எப்படி செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும்?

 

ஆண்டுதோறும் பெற்றோர்கள் கட்டுகிற தவணைத்தொகைக்கு 80C பிரிவின் கீழ் வரிவிலக்கு பெற முடியும். அதேபோல இறுதியாக கொடுக்கப்படும் தொகைக்கும் வரிவிலக்கு என்பது உண்டு. 

6. செல்வமகள் சேமிப்பு கணக்கு எப்படி வேலை செய்யும்?

 

குழந்தைக்கு 10 வயது ஆன பிறகு குழந்தையால் அந்த கணக்கை நேரடியாக நிர்வகிக்க முடியும். ஆனால் வைப்புத்தொகையானது பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயராலேயே செய்யப்பட வேண்டும். சாதாரணமாக கணக்கு துவங்கிய 21 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் இந்தக்கணக்கு முதிர்வு அடையும் அல்லது அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் நடைபெற்றால் கணக்கை முடித்துக்கொள்ள முடியும்.

கணக்கு வைத்திருப்பவர் மரணம் அடைந்தால், இறப்புச் சான்றிதழைத் சமர்ப்பித்தால் கணக்கு உடனடியாக மூடப்படும். கணக்கை மூடும் மாதத்திற்கு முந்தைய மாதம் வரையிலான வட்டியுடன் கணக்கில் உள்ள இருப்புத்தொகை, கணக்கு வைத்திருப்பவரின் பாதுகாவலருக்கு வழங்கப்படும்.

வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், SSY கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கான கோரிக்கையை கணக்கு தொடங்கி ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு முன்வைக்கலாம். விதிகளின்படி, உயிருக்கு ஆபத்தான நோய்களில் மருத்துவ உதவிக்கு தேவைப்படுகிறது போன்ற அடிப்படையில் கோரினால் தீவிர கருணை அடிப்படையில் அனுமதிக்கப்படும். வேறு ஏதேனும் ஒரு காரணத்திற்காக கணக்கை மூடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அது ஏற்கப்படும். ஆனால் சாதாரண தபால் அலுவலக சேமிப்புக்கணக்கிற்கு எவ்வளவு வட்டித்தொகை வழங்கப்படுமோ அதுதான் வழங்கப்படும்.

ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும்போது அதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் இலவசமாக கணக்கை மாற்றிக்கொள்ளலாம். அப்படி சமர்ப்பிக்கவில்லை எனில் ரூ 100 கட்டி கணக்கை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

 





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version