இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக இருப்பவர் தான் மாண்புமிகு ராம்நாத் கோவிந்த். இந்தியாவின் முதல் குடிமகனாக விளங்கும் இவரின் வாழ்க்கை வரலாறு பலருக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. அந்தக்குறையை நீக்குவதற்காகவே ‘திரு. ராம்நாத் கோவிந்த் – சுயசரிதை, வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், குடும்பம்’ குறித்த தகவல்கள்.
இந்தியாவின் 14வது குடியரசுத்தலைவராக பதவியேற்றுக்கொண்ட திரு ராம்நாத் கோவிந்த் அவர்கள் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர், வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியவர், பீகார் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்தவர், ராஜ்யசபாவின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்த காலத்தில் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் அங்கம் வகித்து சிறப்பாக செயலாற்றிவர், ஏழை எளிய மக்களுக்காக சட்டபூர்வ உதவிகள் பல புரிந்தவர் என பல்வேறு சிறப்புக்களோடு இந்தியாவின் முதல் குடிமகன் பதவியை அலங்கரித்து வருவபர் தான் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள். அவரைப்பற்றி விரிவாக அறிவோம் வாருங்கள்.
ராம்நாத் கோவிந்த் இளமைப்பருவம்
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் பராங்கு என்ற கிராமத்தில் அமைதியான குடும்பத்தில் அக்டோபர் 01, 1945 அன்று பிறந்தார் ராம்நாத் கோவிந்த். கான்பூரில் தனது பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரிப்படிப்பை முடித்தார் ராம்நாத் கோவிந்த். தனது இளங்கலை படிப்பில் வணிகத்தை தெரிவு செய்த ராம்நாத் கோவிந்த் பின்னர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தார்.
வழக்கறிஞர் தொழில்
ராம்நாத் கோவிந்த் 1971 ல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து 1977 முதல் 1979 வரை தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் ஆலோசகராக பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டில் அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உயர்ந்தார். 1980 முதல் 1993 வரை, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் நிலையான ஆலோசகராக இருந்தார். புது தில்லியின் இலவச சட்ட உதவி சங்கத்தின் கீழ், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவிகளையும் செய்தார்.
நாடாளுமன்றத்தில் திரு ராம்நாத் கோவிந்த்
1994 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மேலவை என அழைக்கப்படும் ராஜ்யசபாவில் உத்திரபிரதேசத்தில் இருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டார். தொடர்ச்சியாக இருமுறை என 2006 வரைக்கும் ராஜ்யசபாவில் உறுப்பினராக இருந்தார். அவர் உறுப்பினராக இருந்த காலத்தில் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் பங்காற்றினார். இதன் மூலமாக நீண்ட நெடிய அரசியல் அனுபவத்தை பெற்றிருந்தார் திரு. ராம்நாத் கோவிந்த். தான் பொறுப்பில் இருந்த போது ஒவ்வொரு தருணத்திலும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டார். லக்னோவில் இருக்கும் அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும் கொல்கத்தாவில் இருக்கும் IIM ஆளுநர் குழுவிலும் உறுப்பினராக பதவி வகித்தார்.
பீகாரின் ஆளுநர் திரு. ராம்நாத் கோவிந்த்
ஆகஸ்ட் 08, 2015 அன்று பீஹார் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார் திரு. ராம்நாத் கோவிந்த். அரசியலமைப்பு சட்டத்தை பாகுபாடில்லாமல் நிறைவேற்றியதன் விளைவாக அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்றார். பல்கலைக்கழகங்களின் வேந்தராக, துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை நடைமுறைப்படுத்தினார்.
குடியரசுத்தலைவராக திரு. ராம்நாத் கோவிந்த்
ஆளுநராக சிறப்பாக செயல்பட்டமையால் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அரசியலமைப்பின் உயரிய பதவியான குடியரசுத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது அனுபவத்தால் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக பயணம் செய்திருக்கிறார். இந்திய ஆயுதப்படைகளின் தளபதியாக, மே 2018 இல், உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சினில் உள்ள ‘குமார் போஸ்டில்’ நிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுக்கு வரலாற்று விஜயம் செய்தார். அடிப்படையில் ஒரு தீவிர வாசகராக இருக்கும் திரு. ராம்நாத் கோவிந்த், அரசியல், சமூக மாற்றம், சட்டம், வரலாறு மற்றும் ஆன்மீகம் பற்றிய புத்தகங்களை படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!