Site icon பாமரன் கருத்து

இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிரஞ்சல் பாட்டீலின் வெற்றிக் கதை

இந்தியாவின் சவால் நிறைந்த போட்டித்தேர்வான UPSC தேர்வில் பார்வையற்ற பெண் பிரஞ்சல் பாட்டீல் வெற்றி பெற்றது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. பார்வையற்ற ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாவது அதுதான் முதல்முறை. இந்த சாதனையை அவர் நிகழ்த்த கடந்து வந்த பாதை உங்களையும் ஊக்குவிக்கலாம்.

முயற்சி செய்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் வெகு சிலர் மட்டுமே அத்தகைய முயற்சிகளை எடுத்து வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெற்றவர்களின் கதைகளை நாம் வாசிக்கும் போது அவர்களது கதை நம்மை நிச்சயமாக உத்வேகப்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் சவாலான சூழலில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வெற்றிக்கதையை இங்கே வழங்கி வருகிறோம். அந்தவகையில் இந்தப்பதிவில் நாம் பார்க்கப்போவது இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிரஞ்சல் பாட்டீலின் வெற்றிக் கதை. 

பிரஞ்சல் மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகரில் பிறந்தார். பிறக்கும் போதே பார்வைக்குறைபாட்டுடன் பிறந்த இவருக்கு 6 வயதிற்குள் முழு பார்வையும் பறிபோனது. அவர் மும்பையில் உள்ள கமலா மேத்தா தாதர் என்ற பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்தார். அவர் Political Science டிகிரி படிப்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் படித்தார். பிறகு அவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் international relations பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் M.Phil மற்றும் PhD என படித்து முடித்தார். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் இவர் 773 ஆம் இடத்தை பிடித்து IRS அதிகாரியானார். 2016 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பார்வைக் குறைபாடு காரணமாக பிரஞ்சால் ரயில்வே கணக்கு சேவை பதவிக்கு [Railway Accounts Service] தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் மிகவும் மனம் உடைந்தார். அதை எதிர்த்துப் போராடிய பிறகு, அவருக்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் வேலை கிடைத்தது. அங்கே அவருக்கு வழங்கப்பட்ட வேலையானது IRS ஐ விட குறைவாக இருந்தது. இதனால் அவர் அதை நிராகரித்தார்.

இதனால் சற்றும் மனம் தளராத அவர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் கலந்துகொண்டு 124 ஆம் இடம் பிடித்தார். இதன் மூலமாக கண்பார்வையற்ற ஒருவர் IAS அதிகாரியானார் என்கிற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். 

கண்பார்வையற்ற பிரஞ்சல் பாட்டீல் எப்படி UPSC தேர்வுக்கு தயாரானார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கலாம். அவர் தன்னுடைய செவி வழியே தான் அனைத்தையுமே கற்றார். இதற்காக சிறப்பு மென்பொருள் ஒன்றினை பயன்படுத்திய அவர் சத்தமாக பாடங்களை படிக்கச் செய்து அதனை கேட்டு படித்துள்ளார். இவர் எந்தவித கோச்சிங் சென்டருக்கும் செல்லவில்லை என்பது இன்னுமொரு சிறப்பு.

முயன்றால் முடியும்

நம்மில் பலர் நல்ல உடல் நலத்துடனும் பொருளாதார பலத்துடனும் இருக்கிறோம். ஆனால், நாம் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவது இல்லை. நாம் வெற்றியை நோக்கி பயணப்பட ஒரு காரணத்தை தேடிக்கொண்டே இருக்கிறோம். இல்லையேல் வாழ்க்கையை அதன் போக்கில் கடந்துவிட்டு போகிறோம். பிரஞ்சல் பாட்டீல் அவர்களின் வாழ்க்கையை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். கண்பார்வை குறைபாடு என்பது மிகப்பெரிய தடைக்கல். ஆனால் அதனை அவர் தகர்த்து எறிந்துவிட்டுத்தானே வெற்றிக்கனியை சுவைத்துள்ளார். அவரைப்போலவே நீங்களும் கடினமாக முயற்சி செய்தால் நீங்களும் நிச்சயமாக வெற்றிபெற முடியும். 

மீண்டுமொரு வெற்றிக்கதையில் இணைவோம்! 

Share with your friends !
Exit mobile version