“கொரோனா வைரஸ் பரவலை பொதுமக்கள் இன்னமும் தனி மனிதர்களுக்கான பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். இன்னமும் அவர்கள் இதை ஒரு சமூகப்பிரச்னையாக பார்க்கவில்லை”
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனைத்தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனால் பிறருக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதே தற்போது மனித இனத்திடம் இருக்கின்ற ஒரே வழியாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் இந்தியாவும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. ஆனால் 10 நாட்களாகியும் இன்னமும் 100% ஆக்கப்பூர்வமான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம். உதாரணத்திற்கு, காவல்துறையினர் விதவிதமான தண்டனைகள் கொடுத்தாலும் கூட தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்று தண்டனையை நாள் தோறும் பெறுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நகரம், கிராமம் என்ற பாகுபாடு இன்றி ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க தவறுகிறார்கள். இதற்கு நாம் எத்தனையோ காரணங்களைக்கூறினாலும் முழு முதற்காரணம் என்னவென்றால் “கொரோனா வைரஸ் பரவலை பொதுமக்கள் இன்னமும் தனி மனிதர்களுக்கான பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். இன்னமும் அவர்கள் இதை ஒரு சமூகப்பிரச்னையாக பார்க்கவில்லை” என்பதுதான். இதற்கு முக்கியக்காரணம் அரசு நிர்வாகம் பொதுமக்களிடம் சுகாதாரப்பிரச்னைகள் குறித்து நெருக்கமான அணுகுமுறையை கடைபிடிக்காததே காரணம் என கூறப்படுகிறது.
தாக்கப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்
தெலுங்கானாவின் நிஸாமாபாத் பகுதியை சேர்ந்த ஒருவர் மார்ச் 31 அன்று இறந்துபோகிறார். அவருடைய உறவினர்களில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 02 ஆம் தேதி அவர்கள் சார்ந்த பகுதிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றபோது அந்தப்பகுதிக்குள் அவர்களை உள்ளேயே விடாமல் தடுத்திருக்கிறார்கள் அப்பகுதி மக்கள். அவர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வந்திருப்பதாக எண்ணிக்கொண்டு இத்தகைய தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அந்த சுகாதாரக்குழுவில் சென்ற பெண் கூறும் போது “அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கூட எந்த தகவலையும் அளிக்க முன்வரவில்லை. எங்கள் குழுவில் பெண்கள் மட்டுமே இருந்தபடியால் அவர்கள் எங்களை பெரிதாக தாக்கவில்லை. ஆண்களாக இருந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என்றார்”
சுகாதாரத்துறையினர் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு கொரோனா வைரஸ் தடுப்பு நடவெடிக்கைகளில் செயல்பட்டு வருகிறார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பொதுமக்கள் ஏன் இன்னமும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் என்னவென்றால் “சுகாதாரத்துறை பொதுமக்களிடத்தில் ஒரு நம்பிக்கையான உறவை இதுநாள் வரை உருவாக்கி வைத்துக்கொள்ளவில்லை” . நன்றாக யோசித்துப்பாருங்கள், உங்கள் ஊருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து பேசியிருக்கிறார்களா? நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என கூறி இருக்கிறார்களா?. நிச்சயமாக இருக்காது. ஏதோ கணக்கெடுப்பு என்றால் வருவார்கள் அவ்வளவே. இதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்கிறார்கள் இதுசார்ந்து செயல்படக்கூடியவர்கள்.
இந்தியா முழுமைக்கும் தற்போது ஆஷா பெண்கள் பொதுமக்களோடு நெருங்கி பணிபுரிய அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த நெருக்கும் இன்னமும் அழுத்தமான உறவாக மாற வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் அபரிவிதமாக நம்பும் சூழல் உண்டாக வேண்டும். ஒவ்வொரு பொதுமக்கள் குறித்தும் தெளிவாக தெரிந்த ஒரு சுகாதாரத்துறை அதிகாரியாவது இருக்க வேண்டும். அப்படி ஒரு நம்பிக்கையான உறவு இருக்கின்ற பட்சத்தில் பொதுமக்களை இன்னமும் எளிமையாக ஒத்துழைக்க செய்துவிட முடியும்.
பொதுமக்களே உணருங்கள் இது சமூகப்பிரச்சனை
அரசு நிர்வாகம் தனது முழுத்திறனையும் பயன்படுத்தி செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் கொரோனா வைரஸ் ஆபத்து குறித்தும் ஊரடங்கை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் செய்திகள் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவை அனைத்தையும் வேறு ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுபோல பொதுமக்கள் கடந்து செல்கிறார்கள், அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள். இது மிக மிக தவறு. இப்படிப்பட்ட அலட்சியத்தை கொண்டமையால் தான் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் கூட தற்போது மிகப்பெரிய உயிர் இழப்புகளை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. அதே அலட்சியம் நம்மிடையே தொடருமாயின் நாமும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களோடு நெருக்கமாக பழகியவர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இவர்களது உயிர்களை உங்களது அலட்சியத்தால் இழந்துவிடுவீர்கள் என்ற எச்சரிக்கையை உங்களுக்கு விடுக்க விரும்புகிறேன்.
ஆகவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவலை தனி மனிதர்களின் பிரச்சனையாக பார்க்காமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனையாக பார்க்க துவங்குங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!