Site icon பாமரன் கருத்து

கொரோனாவை முதலில் எதிர்கொள்ளும் பெண்கள் படை | ஆஷா | சமூக சுகாதார ஊழியர்கள்

ஆஷா | சமூக சுகாதார ஊழியர்கள்

ஆஷா | சமூக சுகாதார ஊழியர்கள்

கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்திருக்கக்கூடிய சூழலில் அதனை ஒழித்துக்கட்டுவதில் மிகப்பெரிய பங்களிப்பை நாடு முழுவதும் இருக்கக்கூடிய தன்னார்வ சமூக சுகாதார ஊழியர்கள் [பெண்கள்] அளித்துவருகின்றனர்.
ஆஷா | சமூக சுகாதார ஊழியர்கள்

கொரோனா வைரஸ் பாதித்துள்ளவர்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்லது ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியவர்கள் என அனைவரையும் தேடிச்சென்று இந்த ஆபத்தான காலகட்டத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற வழிமுறையை பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறது ஆஷா எனும் தன்னார்வ சமூக சுகாதார ஊழியர்களாக இருக்கக்கூடிய பெண்கள் படை. மருத்துவர்கள், செவிலியர்கள் போன்று இவர்களது பணியும் அளப்பரியது. நேரடியாக இவர்கள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை தேடி செல்வதனால் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது அரசின் தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.

போற்றப்பட வேண்டியவர்கள் | ஆஷா ஊழியர்கள்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடத்துகிற திட்டங்களில் ஒன்று தான் பெண்களால் ஆன தன்னார்வ சமூக சுகாதார ஊழியர்கள் அமைப்பு [Accredited Social Health Activists]. கிராமங்களில் இருந்து இந்த அமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் நேரடியாக மத்திய அரசின் சுகாதாரத்துறையையும் கிராம மக்களையும் இணைக்கின்ற தூண்களாக இருப்பார்கள். 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டமானது 2012 ஆம் ஆண்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அமைப்பில் தற்போது 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்களிப்பு செய்து வருகிறார்கள்.

 கிராம மக்களை நேரடியாக முதலில் இவர்களே எதிர்கொள்வதனால் “First Line Fighters” என அழைக்கப்படுகிறார்கள்

தற்போது இவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையவர்களாக கருதப்படுகிறவர்கள் ஆகியோரை கண்டறிந்து தனிமை படுத்துவதில் மிகப்பெரிய பங்கினை சுகாதாரத்துறைக்கு வழங்கிவருகிறார்கள். வெளிநாட்டில் இருந்து ஒருவர் தனது கிராமத்திற்கு வந்தால் அவரைப்பற்றிய விவரங்களை சேகரிக்கும் இந்த தன்னார்வலர்கள் உடனடியாக அவர்களது வீடுகளுக்கே சென்று நீங்கள் குறிப்பிட்ட காலம் வரைக்கும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதனை தெளிவாக எடுத்துக்கூறுவார்கள். கைகளை கழுவ வேண்டும் என்பதில் துவங்கி சில வாரங்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்பது வரைக்கும் அவர்களது ஆலோசனை இடம்பெறும். வட மாநிலங்களில் இவர்களது சேவை பெரிதளவில் மாற்றத்தை கொண்டுவர உதவி இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு இவர்களது பங்களிப்பை வெகுவாக பாராட்டினார் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி. தற்போதும் இவர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் சில இடங்களில் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் தங்களது சொந்தப்பணத்திலேயே தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை செய்துகொள்வதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

போற்றத்தக்க பணிகளை செய்திடும் பெண்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. இந்த தருணத்தில் பொதுமக்களுக்காக தங்களது உயிரைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நேரடியாக இறங்கி செயல்பட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், ஆஷா தன்னார்வலர்கள் எனும் பலருக்கும் நாம் நன்றி சொல்லவேண்டியது அவசியமாகிறது. இவர்களால் தான் இன்றளவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. அனைவருக்கும் நன்றி!


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version