நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். விவாதமே ஜனநாயகத்தின் முக்கிய சக்தியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கியிருப்பது ஆரோக்கியமானது கிடையாது.
ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கம் நாடாளுமன்றம். மிக முக்கியமான விசயங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதற்கும் அதற்கான பதிலை அரசாங்கம் கொடுப்பதற்கும் பொறுப்புள்ள இடமாக இருக்கக்கூடியது நாடாளுமன்றம். இந்த சூழ்நிலையில், கொரோனா பரவலை காரணம் காட்டி நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஆக்கபூர்வமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். ஆனால் அதே ஆக்கபூர்வம் செயலில் விடுபடுகிறதோ என்ற சந்தேகத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடர் ரத்து எழுப்புகிறது.
கொரோனாவால் முடங்கிய நாடு இப்போது தான் மெல்ல எழுந்து வருகிறது. பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்பட்டாக வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் மீண்டும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்த காலகட்டத்தில் கொரோனாவை பயன்படுத்தி இருக்கிறதோ அரசு என்ற சந்தேகம் எழுவதை எப்படி தவிர்க்க முடியும்.
சிறு குழந்தைகள் படிக்கிற பள்ளிகளில் பாடங்களை தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன, இன்றளவும் நடக்கின்றன. தொழில்நுட்பத்தில் வீறு நடை போடும் இந்தியாவில் வெறும் 534 உறுப்பினர்களைக் கொண்டு ஆன்லைன் மூலமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஏன் நடத்தக்கூடாது? இது உலகிற்கு மிகப்பெரிய முன்னுதாரணமாக அமையுமே. நாடாளுமன்றத்தை நேரடியாக நடத்தினால் முடக்குவார்கள், அப்படி முடக்கும் போது நாட்டு மக்களின் வரிப்பணம் வீணாய்போகும். ஆன்லைன் மூலமாக நடத்தினால் mute இல் போட்டுவிட்டு போய்விடலாம்.
நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பொறுப்பில் பிரதமர் மோடி நல்ல விதமாகவே செயல்படுகிறார். அவரது பேச்சு உத்வேகம் அளிக்கிறது. அவர் ஆன்லைன் மூலமாக நாடாளுமன்றத்தை நடத்த முயற்சி செய்திருந்தால் இன்னும் புகழ் அடைந்திருப்பார்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!