ஒரு புளியமரத்தின் கதை – ஒவ்வொரு ஊரிலும் பெரிய புளியமரம் இருக்கும். நாம் காணாத பல விசயங்களை அது கண்டிருக்கும். அப்படியொரு ஜீவராசியான புளியமரம் சூழ்ச்சியால் வெட்டப்படும் கதையினைத் தாங்கி நிற்கிறது இந்த நாவல். இதனை வாசித்த பிறகு உங்கள் ஊரில் உள்ள புளியமரம் உங்கள் நண்பன் ஆகும்.
Download/Buy : ஒரு புளியமரத்தின் கதை
எழுத்தாளர் சுந்தரராமசாமி நாகர்கோவிலை சேர்ந்தவர். தமிழ் நவீன இலக்கியக்கத்தில் தனது படைப்பாற்றலால் தனி இடம் பிடித்தவர். ‘ஒரு புளியமரத்தின் கதை’,’ ஜே.ஜே. சில குறிப்புகள்’ ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ போன்ற புகழ் பெற்ற நாவல்களையும் அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். எண்பதுகளின் இறுதியில் “காலச்சுவடு” இதழை உருவாக்கி நடத்திவந்தார். மலையாளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழைக கற்றறிந்தவர். ‘பசுவய்யா’ என்கிற புனைப்பெயரில் கவிதைகளை எழுதிவெளியிட்டு வந்துள்ளார். கனடா பல்கழைக்கழகம் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருதினை” வழங்கி கௌரவித்துள்ளது.இதுதவிர குமரன் ஆசான் நினைவு விருது, கதா சூடாமணி விருது ஆகிய விருதுகளையும் வாங்கியுள்ளார். தனது கடைசிகாலட்டத்தில் அமெரிக்காவில் இருந்துவந்த, சுந்தரராமசாமி 2005 காலமானார்.
நீங்கள் வாசிக்க இருக்கும் விமர்சனம் சுமதி நடராஜன் அவர்கள் சமூக வலைதளத்தில் எழுதிய விமர்சனம்
ஒரு புளியமரத்தின் கதை”, நவீன இலக்கிய வாசகர்கள் மத்தியில் மாளா புகழ் பெற்ற நாவல். ஒரு புதினம் பல்லாண்டுகளாக விரும்பி வாசிக்கப்படுபவையாக இலக்கியசூழலில் இருப்பதே சிறப்பான ஒன்றுதான். “தானுண்டு தன் வேலையுண்டு என நின்றுகொண்டிருக்கும் ஒரு புளியமரத்தின் வீழ்ச்சியை சொல்வது தான் இந்த நாவலின் மையம்.” கிளை பரப்பி, பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுத்து, நிழலுக்கு ஒதுங்கும் பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பண்டமாக மாறி மீண்டும் தனது விதையினால், சந்ததியினரை தோற்றுவிக்கும் சிறந்த வேலையை செம்மையாக செய்துவந்த ஒரு அப்பாவி புளியமரத்தின் வாழ்வினையும், வீழ்ச்சியையும் பேசிச்செல்கிறது இந்த நாவல். தொன்றுதொட்டு ஒன்றுமறியா அப்பாவி ஜீவராசிகளின் உயிர்கள் காவுவாங்கப்படுவது புராண இதிசாகங்கள் தொடங்கி, உலக யுத்தகாலகட்டங்கள் வரை, ஏன் இன்றும் நடத்தப்படுகிறது. அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கான நீதியானது, அடிவானம் மாதிரி எங்கோ தொடமுடியாத தூரத்திலேயே இருக்கிறது. அப்படி, நீதி மறுக்கப்பட்ட ஜீவராசியான புளியமரத்தின் கதையினைத் தான் தூலமானதாக ஆக்குகிறது இந்நாவல்.
நாகர்கோயிலில் அமைந்துள்ள புளியமரத்து ஜங்ஷன் தான் நாவலின் கதைக்களம். கதை முழுதும் ஆசிரியர் வாயிலாகவே சொல்லப்படுகிறது. ஆதலால் ஆங்காங்கே நாகர்கோயில் வட்டார வழக்கை பயன்படுத்தியுள்ளார். அந்தக் காலத்தில் தாமோதர ஆசான் என்பவர் ஆசிரியர் ஊரில் உள்ள மாபெரும் கதை சொல்லி.அவருடைய கதையை கேட்க அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் அவரை நிழலை போல பின் தொடர்வார்கள். ஆசிரியருக்கும் அவர் கூறும் கதையை கேட்பதில் அலாதி இன்பம். இப்படி ஆசான் வாயிலாகத்தான் ஆசிரியர் தன் இளம் வயதில் புளியமரத்தின் வரலாற்றை தெரிந்து கொள்கிறார்.
முன்னாளில் புளிய மரத்தை சுற்றி ஒரு குளம் இருந்தது அதனால் அதற்கு புளிக்குளம் என்று பெயர்.ஒருநாள் திருவாங்கூர் ராஜா புளிகுளம் வழியாகத்தான் கன்னியாகுமரி செல்ல நேர்ந்தது. அப்பொழுது அந்தக் குளத்தில் இருந்து வந்த துர்நாற்றம் ராஜாவை பெரிதும் முகம் சுளிக்க வைத்தது. ஆகவே ராஜா, நான் திரும்ப வரும் பொழுது இந்தக் குளம் முழுவதும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தார். ராஜாவின் ஆணைக்கிணங்க புளிய மரத்தை சுற்றி உள்ள குளம் மூடப்பட்டு அதைச் சுற்றி சாலை அமைத்தார்கள் அதுவே பின்னாளில் புளியமரத்து ஜங்ஷன் ஆக மாறியது. இப்படி நாவலின் முதல் பாதி, புளியமரம் உருவான கதை பற்றி பேசப்படுகிறது.
பின்னர் வரும் வருடங்களில் புளியமரத்து ஜங்ஷன் சுற்றி நிறைய கடைகள் வந்தன .அது ஒரு பெரிய கடைத்தெருவாக உருமாறியது. புளியமரம் நிற்கிற இடம் ஒரு முச்சந்தி. இந்த இடத்திற்கு பகலிரவு கிடையாது. வெளியூர் செல்ல வேண்டிய பிரயாணிகள் மற்றும் வெளியூரிலிருந்து வந்த குமரியில் கடல் ஆடிவிட்டு செல்பவர்களுக்கு இந்த புளியமரம் ஜங்ஷன் முக்கியத்துவமான இடம். வருடாவருடம் புளியமரத்தை ஏலம் எடுப்பதற்கு நிறைபோட்டி நிகழும் அதிலிருந்து வரும் லாபம் முழுவதும் அரசையே சேரும். இப்படி அந்த நகரத்தில் புளிய மரம் ஒரு பெரும் பங்கு வகித்தது.
புளியமரம் ஜங்ஷன் பக்கத்தில் ஒரு பெரிய காற்றாடி மரத்தோப்பு இருந்தது. அந்த தோப்பை அழித்து அங்கு ஒரு நவீன பூங்கா உருவாக்க அரசு முடிவு செய்தது. மரங்கள் விழுந்து சாய்வதை திக்பிரமை பிடித்தவர் போல் பார்த்துக் கொண்டிருந்த கிழவர் பக்கத்திலிருந்த இளைஞனிடம் ‘ தம்பி எதுக்கு மரத்தை வெட்டி சாய்க்கிறார்கள்?’ என்று கேட்டார்’
‘செடி வைக்கப் போறாங்க’ என்று பதில் சொன்னான் இளைஞன்
‘எதுக்கு செடி வைக்கப் போறாங்க?’ என்று கேட்டார் கிழவர்.
‘காத்துக்கு’ என்றான் இளைஞன்.
‘மரத்தை காட்டிலும் செடி கூடுதல் காற்று தரும்?’என்று கேட்டார்.
‘அழகுக்கு ‘ என்று பதிலை திருத்திக் கொண்டான் இளைஞன்.
‘செடி தான் அழகாக இருக்குமோ’ என்றார்.
‘மரமாக வளராத செடி தான் வைப்பாங்க. இல்லை வெட்டு வெட்டி விடுவாங்க’ என்றான்.
‘அட பைத்தியக்கார பசங்களா!!! ‘என்று கூறிவிட்டு கிழவர் அந்த இடத்தை விட்டு செல்வார்.
இந்த புத்தகத்தைப் படித்த ஒவ்வொருவருக்கும் இந்த உரையாடல் மறக்க முடியாததாக அமையும்.
இயற்கையை அழித்து உலகம் அழிவை நோக்கி செல்வதற்கு உதாரணமாக இருந்தது கிழவரின் பதில்.
தாமு மற்றும் காதர் இவர்கள் இருவரும் ஜங்ஷன் கடைத்தெருவில் தனித்தனியாக கடைகள் வைத்து வியாபாரம் செய்பவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி, பொறாமை ,மற்றும் அரசியல் ரீதிகளால் நடைபெற்ற பிரச்சனைகளில் புளியமரம் எப்படி வீழ்த்தப்பட்டது என்பது நாவலின் மீதி கதை. 50 வருடங்கள் கடந்து கம்பீரமாய் வாழ்ந்து அழிந்த மரத்தின் கதைதான் ஒரு புளியமரத்தின் கதை!!
Download/Buy : ஒரு புளியமரத்தின் கதை
மேலும் நூல்கள் பற்றி படிக்க….
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்