ஒரு அறிவார்ந்த சமூகத்தில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிடும் அவல சூழல் நிலவுவது வெட்கப்படத்தக்கது. அதிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருப்பதென்பது வருத்தம் அளிக்கிறது.
சென்னையில் இருக்கின்ற தனியார் வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்திடும் பணியில் ஈடுபட்டபோது இளைஞர் ஒருவர் விஷவாயு தாக்கி மரணம் அடைந்தார். மனித கழிவுகளை மனிதனே அகற்றிடும் முறைக்கு தடை இருக்கும் சூழலில் மீண்டும் மீண்டும் இதே போன்றதொரு உயிர் இழப்புகள் தொடர்ச்சியாக நடைபெறுவது என்பது வருத்தம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நாம் முன்னேறிய அறிவார்ந்த சமூகத்தில் தான் இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இறப்பில் தமிழகமே முதலிடம்
கேரள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முல்லாபாலி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் அளித்த பதிலில், கழிவு நீர் சுத்திகரிப்பு பணிகளில் பாதுகாப்பின்றி ஈடுபட்டு அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 144 பேருடன் முதலிடம் வகிக்கிறது. இது 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தகவலின் அடிப்படையிலான எண்ணிக்கை. இன்னும் பதிவு செய்யப்படாத எண்ணிக்கைகளை கவனித்தால் கூடும்
ரோபோக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்திட ரோபோக்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்திடவேண்டும் என்ற கோரிக்கை பெருவாரியாக எழுந்துகொண்டே இருக்கிறது. ஆனால் இன்னும் அதில் பெரிய முன்னேற்றம் இந்தியா முழுமைக்கும் எங்கும் ஏற்படவில்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்திட ரோபோ பயன்படுத்தப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் முனிசிபாலிட்டியில் தான் அப்படி ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியன் ஆயில் கார்பரேசனால் இலவசமாக வழங்கப்பட்ட இந்த ரோபோவை வெற்றிகரமாக பயன்படுத்திவருகிறது மாவட்ட நிர்வாகம்.
தமிழகம் தன்னிலை உணர வேண்டும்
கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் என்றவுடன் ஆட்சியாளர்கள் அதனை எப்படி நிராகரிப்பது, மறுப்பு தெரிவிப்பது என யோசிக்கிறார்களே தவிர அதிலிருந்து எப்படி மீள்வது என்பதில் அக்கறை செலுத்துவது கிடையாது. அனைவருமே அப்படிதான் இருக்கிறோம். எப்படி கல்வியில், மருத்துவத்தில், தொழில்துறையில் முதலிடம் என்றால் ஏற்றுக்கொள்கிறோமோ அதனைப்போலவே இதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் பலவற்றிற்கு பல நூறு கோடிகளை செலவழிக்கிறோம். அனைத்தையும் மக்களின் நலனுக்காகவே செய்கிறோம். இனியாவது தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு மனித கழிவுகளை மனிதனே அள்ளுகிற அவலத்திற்கும் உயிர் இழப்பிற்கும் முடிவு கட்ட வேண்டும்.
கழிவுநீர் தொட்டிகளில் மரணம் தவிர்க்கப்பட வேண்டும்
இயந்திரங்கள் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதற்கு அதிக பணம் கட்டணமாக செலுத்த வேண்டி இருப்பதால் தான் மனிதர்களை இந்தப்பணிகளுக்கு பயன்படுத்துவதாக நம்மால் அறிய முடிகிறது. தற்போதைய சூழலில் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கின்ற குறிப்பிட்ட மக்கள் தான் இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். ஆகவே இவர்களை பயன்படுத்துபவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதோடு விட்டுவிட்டால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே இவர்களுக்கு உடனடியாக மாற்றுத்தொழிலையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!