இன்று தொலைக்காட்சியிலும் சமூகவலைதளங்களிலும் போபாலில் எடுக்கபட்ட வீடியோ பகிரப்பட்டு வருகின்றது . அதில் கழுத்து உயரத்திற்கு நிரம்பியிருக்கும் சாக்கடைக்குள் நின்று கொண்டிருக்கும் ஒருவர் மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டு சாக்கடைக்குள் மூழ்கி அடைத்துக்கொண்டிருக்கும் பொருள்களை வெளியே எடுத்துப்போடுகிறார் , இதனை அவர் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்க அருகில் இருக்கக்கூடிய சக ஊழியரோ வீடியோ எடுப்பதனை பார்த்து அப்பாவியாக சிறு புன்னகையை உதிர்க்கிறார் .
இந்த வீடீயோவை கண்டவர்களில் சிலருக்கு இதனுடைய கொடுமை புரிந்திருக்கலாம் பலருக்கு சாதாரண வீடியோவாக தோன்றியிருக்கலாம் . அப்படி தோன்றியிருந்தால் இதனை படியுங்கள் ,
மனிதனே மலம் அள்ளலாமா?
வழியில் எதிர்பாராதவிதமாக மாட்டு சாணியையோ மனித கழிவுகளையோ மிதித்துவிட்டால் எப்படிப்பட்ட அருவருப்பை நாம் அனுபவிக்கிறோம் , அந்த நிமிடம் நமக்கு ஏற்படும் சங்கடத்திற்கு கோபத்திற்கு எல்லை இருக்கிறதா ? நிச்சயமாக இல்லை . ஆனால் மனித கழிவுகளுக்குள் நின்றுகொண்டு வேலை செய்ய ஒரு இனத்தையே இன்றுவரை பயன்படுத்திவருகிறோமே , அவர்களுக்கு அந்த அருவருப்போ , கோபமோ இருக்காதா ?
ராக்கெட் வாங்க தெரிந்தவர்களுக்கு சாக்கடை அல்ல ஆயுதம் வாங்க தெரியாதா?
வல்லரசு பயணத்தை நோக்கி இந்தியா விரைவாக பயணித்துக்கொண்டிருக்கிறது . தொழில் துறை , வேளாண்துறை , விண்வெளி ஆராய்ச்சி என அனைத்திலும் சிறப்பான வளர்ச்சியினை அடைந்துள்ளது . ஆனால் அன்றும் மனிதர்களின் மலத்தினை மனிதர்கள் அள்ளினார்கள் , இன்றும் மனிதர்களே மனிதர்களின் மலத்தினை அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள் .
இதற்கு யார் காரணம் ? நிச்சயமாக இதற்கு ஆட்சியாளர்களும் சமூகமுமே முக்கியமான காரணம் . உச்சநீதிமன்றம் உட்பட இந்தியாவின் பல நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் பலமுறை சாக்கடைக்கு உள்ளேயே விசவாயு தாக்கி எண்ணற்றவர்கள் உயிரிழந்தும் இன்றுவரை தொடர்ந்துகொண்டு இருக்கின்றது இந்த கொடுமை .
சாக்கடை அள்ளுவதற்கு கீழ்சாதி மனிதன் ஒருவன் இருக்கும்போது அதற்கு எதற்கு அறிவியல் ஆயுதம் , விஞ்ஞான கண்டுபிடிப்பு என்கிற அலட்சியத்தை தவிர இன்னும் மனிதனே மனிதனின் மலத்தை அள்ள வைத்துக்கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணம் .
கோடி கோடியாய் கொட்டி சாலைகளையும் ரயில்களையும் ராக்கெட்டுகளையும் விடுகின்ற அரசினால் சாக்கடையை சுத்தம் செய்ய கருவிகளை உருவாக்கிட முடியாதா ? வெளிநாடுகளில் இருந்து விமானங்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தினால் சாக்கடை அல்ல இயந்திரங்களை கொள்முதல் செய்ய முடியாதா ?
அத்தனையும் முடியும். ஆனால் அதிகாரவர்க்கத்தின் அலட்சியமும் அக்கரையின்மையும் தான் இன்னும் இந்த கொடுமைகள் நடந்துவருவதற்கு முக்கிய காரணம் . இனியாவது இந்த அரசாங்கமும் சமூகமும் சக மனிதன் மலம் அள்ளுவதை தடுத்து நிறுத்திட வேண்டும் .
இதனை செய்யாமல் இந்தியா எவ்வளவு முன்னேறினாலும் அதன் கிரீடத்தில் நீக்க முடியா கறைகளும் இருந்தே தீரும் .
பாமரன் கருத்து
Share with your friends !