வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழலுக்கு ஒவ்வொருவரும் தள்ளப்பட்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்திராத இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள ஐக்கிய நாடுகள் சபை சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது.
கிட்டத்தட்ட முழுமைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தங்களது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு விதத்திலான ஊரடங்கை உலக நாடுகள் கடைபிடித்து வருகின்றன. இதனால் தனி மனிதர்கள் சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி பின்பற்றும் போது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். சிலர் அதற்காக வீடுகளிலேயே உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
மேலும் பெற்றோர்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய சவாலாக இருப்பது “குழந்தை வளர்ப்பு”. பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால் தொடர்ச்சியாக அவர்கள் வீடுகளில் இருக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபை கொரோனா காலத்தில் குழந்தை வளர்ப்பு குறித்து 6 ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. கொரோனா காலத்தில் பெற்றோர்கள் நடந்துகொள்வது எப்படி? UNICEF ஆலோசனை
கரோனா ஊரடங்கு காலத்தின் போது குழந்தைகள் வீடுகளில் இருப்பதை பெற்றோர்கள் வெறுப்புணர்வோடு அணுகக்கூடாது. மாறாக, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு இணைப்பை உருவாக்கும் ஒரு தருணமாக இதை அணுக வேண்டும்.
UNICEF பரிந்துரைப்பது என்னவென்றால் ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் பின்பற்றி வந்த சில வரிசையான செயல்கள் தற்போது தடை பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, காலையில் எழுவது, படிப்பது, பள்ளிக்கு கிளம்புவது, மாலையில் வந்து விளையாடுவது, சாப்பிடுவது, உறங்குவது என்றிருந்தவர்களுக்கு இப்போது எதுவுமே இல்லாமல் போனதால் அலுப்பாக இருக்கும். ஆனாலும் சில தளர்வுகளுடன் கூடிய வரிசையான வேலைகளை பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் இந்த தருணத்தில் சொல்லிக்கொடுத்து பின்பற்ற வைக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது UNICEF.
கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் உலகில் பல்வேறு நாடுகளில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் உங்களது குழந்தைகளிடம் பேசுவது சரியான செயல்தான். ஆனால் குழந்தைகளிடம் பேசும்போது நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். எந்த தருணத்திலும் இந்த பூமி வாழுவதற்கு ஆபத்தானது என்று அவர்கள் உணரும்படி செய்துவிடுதல் கூடாது. உண்மையை கூறுங்கள், போதுமான அளவு கூறுங்கள், சிறந்த வார்த்தைகளை பயன்படுத்தி பக்குவமாக கூறுங்கள்.
இந்தியாவை பொறுத்தவரைக்கும் இந்த கோடைகாலத்தில் தான் சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்று தங்களது பிற திறன்களை வளர்த்துகொள்ள முயற்சி செய்வார்கள். ஆனால் தற்போது அது முழுமைக்குமாக தடைபட்டிருக்கிறது. இந்த தருணத்தில் கல்வியை பெறுவதற்கு UNESCO சில ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. அதை இங்கே படிக்கலாம்.
கிராமங்களில் இருக்கும் சிறியவர்கள், பெரியவர்கள் இந்த சூழலிலும் கூட எப்போதும்போலவே சில வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். நகர்ப்புறங்களில் வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக நேரம் உறங்குவதை வழக்கமாக பெரும்பாலானவர்கள் பின்பற்றியிருப்பார்கள். தற்போது ஊரடங்கு காலத்தில் அனைத்து நாட்களுமே விடுமுறை நாட்கள் போன்றது தான். ஆகவே உடற்பயிற்சி என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. உடற்பயிற்சி கூடங்கள், நடைபயிற்சி செய்திடும் இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ள சூழலில் அவரவர் தங்களது வீடுகளில் இருக்கும் இடத்தை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்திட வேண்டும். தங்களது குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்திக்கொள்ளுதல் அவசியம்.
உலக சுகாதார நிறுவனம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியையும் அல்லது 75 நிமிடங்கள் அதி தீவிர உடற்பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. இதற்காக சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிற உலக சுகாதார நிறுவனம் சரியான நபர்களின் ஆன்லைன் வீடியோக்களையும் பார்த்து உடற்பயிற்சியை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம் என கூறியிருக்கிறது.
இளைஞர்களின் உடல்நலன் குறித்து சில பரிந்துரைகளை UNICEF கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமாக, இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களின் மூலமாக உரையாடலில் ஈடுபட வேண்டும் என கூறியிருக்கிறது. மருத்துவர் லிசா டெமர், டிக்டாக் வலைதளத்தில் சமூக நலன் சார்ந்து #safehand தங்களது புதுவித ஐடியாக்களை பயன்படுத்தி வீடியோ எடுக்கலாம் என பரிந்துரை செய்திருக்கிறார்.
முழு ஊரடங்கு காலத்தில் “உங்களது மன நிலையை முடக்கிடுதல் கூடாது” என்பதே அனைவரின் விருப்பமும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!