யார் இந்த ஹனன் ? என்ன நடந்தது ?
கல்லூரி படிக்கும் ஹனன் என்கிற மாணவி தன் படிப்பிற்கு ஆகின்ற செலவிற்காகவும் தன்னுடய ஏழ்மையான குடும்பத்தினை கவனிக்கவும் கல்லூரிக்கு போகின்ற நேரம் போக மாலை நேரங்களில் மீன் விற்கும் வேலையை தினந்தொறும் செய்துவருகிறார் . இதற்காக தினந்தோறும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழும் ஹனன் , அன்றைய விற்பனைக்கு தேவையான மீன்களை வாங்குவதற்கு சைக்கிளில் மொத்த விற்பனை கடைக்கு செல்கிறார் . வாங்கிய மீன்களோடு சைக்கிளையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தம்மன்னம் நோக்கி புறப்படுகிறார் .
அங்கு மீன்களை வைத்துவிட்டு புறப்படும் ஹனன் மீண்டும் வீடுதிரும்பி தயாராகி 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய கல்லூரிக்கு சென்று படிக்கிறார் . கல்லூரி முடிந்த பிறகு , வாங்கிய மீன்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புகிறார் .
கடந்த வாரம் மாத்ருபூமி என்கிற மலையாள நாளிதழில் ஹனன் என்கிற மாணவியின் கடினமான அன்றாட வாழ்க்கை வெளியானது .
ஹனன் குறித்த செய்திகள் நாளிதழில் வெளியானவுடன் ஹனனுக்கு ஆதரவு பெருகியது . திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஆதரவளித்து அவருக்கு உதவிட முன்வந்தார்கள் .
இதோடு நின்றிருந்தால் பரவாயில்லை , ஹனன் பொய் கூறி நடிப்பதாகவும் திரைப்பட இயக்குனர்களின் ஆலோசனையின்பேரில் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சமூக வலைதளங்களில் அவரைப்பற்றி அவதூறு பரப்பப்பட்டது .
தனக்கும் திரைப்பட இயக்குனர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , நான் நடிக்கவில்லை . என்னுடைய படிப்பிற்காகவும் குடும்பத்திற்கு என்னால் ஆன உதவியை செய்வதற்காகவும் தான் மீன் விற்பனை செய்வதாக தெரிவித்தார்
ஹனனுக்கு ஆதரவு
கேரளா முதலமைச்சர் ஹனனுக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார் . மேலும் ஹனன் குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .
மேலும் பினராயி விஜயன் கூறும்போது ” சமூக வலைதளம் என்பது இரண்டுபக்கமும் கூர்மையான பகுதிகளை கொண்ட ஆயுதம் போன்றது . ஆகையால் பயன்படுத்துபவர்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் .
எனது பார்வை
ஹனன் உண்மையாலுமே ஏழையென்றும் அவளது குடும்பத்தையும் கல்லூரி படிப்பு செலவையும் பார்த்துக்கொள்ளவே மாலையில் மீன் விற்பனை செய்கிறாள் என்பதனை அவரது கல்லூரி தோழிகளும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர் .
ஆனால் சமூக வலைதளத்தில் கட்டற்ற சுதந்திரத்தை பெற்று இருக்கும் சிலரோ வாய்க்கு வந்த பொய்களையெல்லாம் கட்டவிழ்த்து அந்த மாணவியை நிலை குலைய செய்து அவரையே செயல்படாதவண்ணம் செய்துவருகின்றனர் .
ஹனனை மதிக்க வேண்டும் , அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை . அவதூறுகளை பரப்பிடாமல் இருந்தாலே போதுமானது தானே .
ஹனன் மீது வன்முறையை திணிப்பவர்கள் , ஹனன் அல்ல யார் வந்தாலும் இதையேதான் செய்வார்கள் . அவர்களுக்கு இதனைத்தவிர வேறு வேலையே இல்லை .
ஹனன் வேண்டுவதைப்போல “எனக்கு உதவிகள் தேவையில்லை , என்னை எப்போதும்போல மீன் விற்க விட்டாலே போதும் ” என சொல்லவைப்பதற்காகவா சமூக வலைதளங்கள் வந்தன . இல்லவே இல்லை . அதிகார வர்க்கத்தின் குரலுக்கு இணையாக சாமானிய மனிதனின் குரலும் ஒழித்திட வேண்டும் என்பதற்காகத்தானே வந்தன , சமூக வலைதளங்கள் .
ஹனன் விவகாரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு அனைவரும் செயல்படுதல் வேண்டும் .
ஹனன் போன்ற பெண்கள் எதற்கும் சளைத்துவிடாமல் செயல்பட வேண்டும் .