இந்த பூமியில் சிந்திக்கக்கூடிய ஒரே உயிரினம் மனிதர்கள் தான். ஆதலால் தானோ என்னவோ சில இயந்திரங்களையும் சில தொழில்நுட்பங்களையும் உருவாக்கிய பிறகு இந்த பூமியில் தானே உயர்ந்தவன் என மனிதன் எண்ணிக்கொள்ள ஆரம்பித்துவிட்டான். ஆனால் உண்மை அதுவல்ல.
இந்த பூமி மனிதர்களால் தொடர்ந்து நாசப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிற உயிர்கள் இங்கு வாழுவதற்கு நாம் ஏதோ ஒருவகையில் தொந்தரவை ஏற்படுத்திக்கொண்டே தான் இருக்கிறோம். மனிதர்கள் தவறு செய்கிறீர்கள் என யாராவது சொன்னால் “வலிமையுள்ளவர்கள் வாழ எது வேண்டுமானாலும் செய்யலாம் அதில் தவறு எப்படி சொல்ல முடியும்” என மேதாவித்தனமாக பதில் கூறுகிறவர்கள் இங்கு பலர் உண்டு. ஆனால் கண்ணுக்கு தெரியாத வைரஸ் இன்று ஒட்டுமொத்த மனித இனத்தையே ஆட்டுவித்து வருகிறது. மனிதர்கள் பூமியை அழித்துவிடுவார்கள், உயிர்கள் வாழ வழியற்ற ஒரு இடமாக ஆக்கிவிடுவார்கள் என்று அச்சப்பட்டு வந்தவர்களுக்கு “மனிதன் என்றும் இயற்கையை விட வலிமையானவன் இல்லை” என்று உறுதிபட தெரிவித்து இருக்கிறது இந்த கரோனா வைரஸ் பரவல் நிகழ்வு.
மிகவும் பொறுப்பற்ற தன்மையோடு மனிதர்கள் நடந்துகொள்ளாமல் இருந்தால் கிட்டத்தட்ட இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் கொன்றுவிட்டு தான் மறையும் இந்த கரோனா வைரஸ். அதனைத்தான் நாளுக்கு நாள் உயரும் எண்கள் நமக்கு உணர்த்துகின்றன. கரோனா வைரஸ் மிகப்பெரிய பொருளாதார பேரழிவை ஏற்படுத்திவிட்டது என நாம் கூறி வருகிறோம். உண்மைதான், ஆனால் இன்னொருபுறம் என்ன நடக்கிறது என கவனித்து இருக்கிறீர்களா? கரோனா வைரஸ் பரவலுக்கு முன்னதாக உங்களால் வீட்டிற்கு வெளியே நடமாடாமல் இருக்க முடியுமா என எவரிடமாவது கேட்டுப்பார்த்தால் அதெப்படி முடியும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்கள்.
உலக நாடுகள் இணைந்து கரியமில வாயு வெளியீட்டை குறைக்க நாம் போராடுவோம் என பொது விவாதங்களில் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு முன்னிருப்பதைவிட அதிகமாகவே கரியமில வாயுக்களை வெளியிட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது நிலைமை என்ன? ஒட்டுமொத்த உலகமும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறது. சாலைகள் வாகனங்கள் ஏதும் இல்லாமல் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கின்றன. மரங்கள் அசுத்த காற்று இல்லாமல் நிம்மதியாக மூச்சு விடுகின்றன. புகை இல்லாமல் இப்போது வானம் தெளிவாக தெரிகிறது.
கரோனா வைரஸ் மனித இனத்திற்கு எதிரானது தான். அதனை நிச்சயமாக நாம் ஒழிக்கவும் வேண்டும் தான். ஆனால் கரோனா வைரஸ் நமக்கு சில படிப்பினைகளையும் வாழ்க்கைக்கு பொருளாதாரம் மட்டுமே போதுமானது அல்ல, உங்களால் இப்படியும் இருக்க முடியும் என்ற பல விசயங்களையும் செய்முறை மார்க்கமாகவே சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இனியாவது நாம் இயற்கையை உதாசீனப்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய எந்திரங்களையும் தொழில்நுட்ப விசயங்களை உருவாக்கினாலும் கூட “இயற்கை எப்போதுமே அனைத்தையும் விட உயர்வானது” என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
ஒருவேளை நாம் இயற்கையோடு இணைந்து வாழ பழகிக்கொண்டால் கரோனா வைரஸ் க்கு எதிராக இயற்கையே கூட செயல்பட்டு நம்மை காக்கும். மனிதர்களை வலிமை உள்ளவர்களாக அது உருவாக்கும் என நாம் நம்புகிறேன்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!