இவை இரண்டுமே விளையாடுவோரை தற்கொலைக்கு தூண்டக்கூடிய விளையாட்டுக்கள் .
மோமோ விளையாட்டு என்றால் என்ன ?
தற்போது பிரபலமடைந்து கொண்டிருக்கும் ஆன்லைன் கேம் , இதன் நோக்கம் தற்கொலைக்கு தூண்டுவது தான்.
மோமோ விளையாட்டினால் இந்தியாவில் இதுவரை பாதிப்புகள் இல்லையென்றாலும் நமது பிள்ளைகளுக்கு அது குறித்து தெரிவித்து பாதுக்காப்பாக இருக்க செய்வது நல்லது . ஆரம்பகாலங்களில் facebook group களின் மூலமாக ஆரம்பித்த மோமோ விளையாட்டு தற்போது whatsapp வாயிலாகவும் வர ஆரம்பித்துள்ளது .
நாம் ஒருமுறை மோமோ வை தொடர்பு கொண்டுவிட்டால் அந்த எண்ணில் இருந்து தொடர்ச்சியாக நமக்கு மெசேஜ்கள் வர ஆரம்பிக்கும் . நம்முடன் நட்புடன் பேச ஆரம்பிக்கும் மோமோ பிறகு எப்படி புளுவேள் விளையாட்டில் தொடர்ச்சியாக நமக்கு சிறு சிறு task (போட்டி ) வழங்கப்படுமோ அதனை போன்றே இதனை செய் அதனை செய் என போட்டிகளை கொடுக்க ஆரம்பிக்கும். போகப்போக நம்மை அதனுடைய கட்டுப்பாட்டில் கொண்டுபோகும் அளவிற்கு ஒவ்வொரு விளையாட்டும் மனநிலையை பாதிக்க கூடியதாக இருக்கும்.
மோமோ விளையாட்டு எப்படி செயல்படுகிறது ?
உங்களது WhatsApp எண்ணிற்கு புது எண்ணிலிருந்து மெசேஜ் வரும் . தன்னை மோமோ என அறிமுகப்படுத்திக்கொள்ளும் அந்த எண் தன்னை அப்படியே நமது மொபைலில் பதிந்துகொள்ளுமாறு சொல்லும் . மேலும் நம்மோடு அன்பாக பேசி நம்மை பற்றிய சாதாரண தகவல்கள் முதல் அந்தரங்க தகவல்கள் வரை அனைத்தையுமே பெற முயலும் இந்த மோமோ .
813 , 52 , 57 என்று தொடங்கும் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்
ஒரு அன்பான நண்பரை போல பேசிடும் இந்த மோமோ ஆரம்பத்தில் சாதாரண விசயங்களை செய்யச்சொல்லி அன்பு கட்டளையிடும் . சிறுவர்கள் எளிமையானதுதானே என ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பிப்பார்கள் .
பிறகு தான் மோமோ அசாதரணமான வேலைகளை செய்யச்சொல்லும் . நாம் சிலவற்றை செய்யாமல் மறுக்கும்போது நமது வீட்டில் இருப்பவர்களுக்கு தொந்தரவு கொடுப்பேன் எனவும் பயமுறுத்துவேன் எனவும் மிரட்ட ஆரம்பிக்கிறது .
விளையாடாவிட்டால் மோமோ நம்மை மிரட்டுவது எப்படி ?
மோமோ ஒரு ஆன்லைன் விளையாட்டு தானே எப்படி நாம் இதனைச்செய்ய வேண்டும் அதனை செய்யவேண்டும் என வற்புறுத்துகிறது ? செய்யாமல் போனால் என்னாகும் என கேட்கலாம் .
மிகச்சரியான கேள்வி , இங்குதான் மோமோவின் செயல்பாட்டினை நாம் புரிந்துகொள்ளவேண்டும் . மோமோ இரண்டுவழிகளில் நம்மிடமிருந்து தகவல்களை திருடுகின்றது.
ஒன்று நேரடியாக நம்மிடம் சில விசயங்களை செய்யச்சொல்லி பெறும் . உதாரணத்திற்கு அரைகுறை ஆடையோடு போட்டோ அனுப்பச்சொல்வது போன்றது .
இரண்டாவதாக , மோமோ நமக்கு அனுப்பிடும் போட்டோவினை டவுன்லோடு செய்திடும்போது அதோடு சேர்த்து அனுப்பப்படும் malware நமது மொபைலில் தரவிறக்கப்பட்டு நம் அனுமதியில்லாமல் இன்ஸ்டால் செய்யப்படும் .
மோமோ விற்கு பயப்படவேண்டுமா ?
மோமோ விளையாட்டினை சோதிக்க எண்ணி விளையாடியவர்கள், மோமோ நமது மொபைலில் இருக்க கூடிய தகவல்களை திருவதாக உறுதிப்படுத்தியுள்ளனர் .
மோமோ பயமுறுத்துவதைப்போல குடும்ப உறுப்பினர்களை ஏதாவது செய்துவிடுவேன் என்று மிரட்டி அதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டதாக செய்தியில்லை .
பெற்றோர்களும் சிறுவர்களும் எப்படி மோமோவிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது ?
தற்போது சிறுவர்களுக்கு மொபைல் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம் , விளைவு விளையாட்டு என்கிற பெயரில் வருகின்ற அனைத்தையுமே விளையாட தொடங்குகிறார்கள் .
ஆகையால் உங்களது பிள்ளை எவ்வாறு மொபைலை பயன்படுத்துகிறார் , என்னென்ன விளையாட்டுகளை விளையாடுகிறார் என்பதனை குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணியுங்கள் .
யாரென்று தெரியாதவர்களிடம் பேசாமல் இருப்பதே பாதுகாப்பானது
குழந்தைகளுக்கு ஆப்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள் .
உங்களது குழந்தையின் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் இருப்பின் உடனடியாக அதனை கவனித்து அவர்களிடம் பேசிடுங்கள் .
இளைஞர்கள் புதிய எண்களில் இருந்து வருகின்ற image களை தரவிறக்கம் செய்வதோ அல்லது chat செய்வதோ கூடாது .
இணையதளம் எவ்வளவு நல்லதோ அதனைபோலவே பாதுகாப்பற்ற ஆபத்தான விசயங்களையும் கொண்டிருக்கிறது . நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருந்தாலே போதுமானது .