மகாகவி பாரதியாருக்கும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி க்கும் என்ன பழக்கம்.? சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்ட சமகாலத்தவர்கள் என்று மட்டுமே இதுநாள் வரையிலும் எனக்கு தெரியும். ஆனால் பாரதியும் வ.உ.சி யும் மாமன் மச்சான் என்ற அளவிற்கு நெருக்கமானவர்கள் என்பது வ.உ.சிதம்பரம் எழுதிய ‘பாரதிக்கும் எனக்கும் பழக்கம்’ என்ற இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் தெரிந்தது. பாரதியாரின் தந்தை ஸ்ரீ சின்னசாமி ஐயரும், வ.உ.சிதம்பரத்தின் தந்தை வ. உலகநாத பிள்ளை இருவருமே நண்பர்கள். ஆதலால் இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளும் முன்னரே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர்.
1906 ல் இந்தியா பத்திரிக்கை ஆசிரியராக பாரதியார் இருந்த போதுதான் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்கின்றனர்.
முதல் சந்திப்பிலிருந்தே அன்றைய அரசியல் பற்றியும், சுதந்திர வேட்கை பற்றியும் திருவல்லிக்கேணி கடற்கரையில் நடந்துகொண்டே கலந்தாலோசிக்கன்றனர். பின்னாளில் 1907 சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தலைமையேற்க ஸ்ரீ ராஜ்பிகாரி கோஷ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து, பாரதியும் வ.உ.சியும் அன்றைய தமிழக பிரதிநிதிகள் டெல்லியில் முகாமிட்டு பாலகங்காதர திலகரை முன்னிருத்த வேண்டுமென தனி தீர்மானம் நிறைவேற்றுக்கின்றனர்.
இதன் காரணமாக சூரத் காங்கிரஸ் மாநாட்டில் கலகம் ஏற்பட்டு காவல் துறையினரால் காங்கிரஸ் மாநாடு கலைக்கப்பட்டது. பின்னர் சில காலம் கழித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி யை வ.உ.சி துவங்கி கப்பல் போக்குவரத்தை நடத்துகிறார். இதை பொறுக்காத வெள்ளையர்கள் வ.உ.சியையும் அவரது நண்பர்களையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பாரதி நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார்.
பின்னர் வ.உசி 1912ல் விடுதலை பெற்று பாரதி அப்போது புதுச்சேரியில் இருப்பதை அறிந்து அங்கு சென்று சந்தித்து அன்றைய சூழல் குறித்து விரிவாக பேசுகின்றனர். இவ்வாறு பாரதியும் தானும் ஈரூடல் ஓருயிராக இருந்ததை இந்த புத்தகத்தில் விவரித்து கூறியிருக்கிறார்.