கவிதை என்பது காதல் போன்ற மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த மட்டுமேயானது அல்ல சாமானியனுக்குள் இருக்கும் அறியாமையை அகற்றி நிமிரச்செய்திடும் பேராயுதம் – பாரதியின் கவிதை அதை செய்தது.
11 டிசம்பர் 1882, இல் எட்டயபுரத்தில் பிறந்த மாமனிதர் தான் நம் மகாகவி பாரதியார். கேடுகளை அழித்து நன்மையை செய்ய திமிரோடு போராடுபவர்களின் முன்னோடி சின்னசாமி சுப்ரமணிய அய்யர் – இலக்குமி அம்மையாரின் புதல்வரான பாரதியார்.
எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.
பாரதியார் தன்னுடைய புலமையை வெறும் பகட்டுக்காகவும் பொருள்களை ஈட்டி சொகுசு வாழ்க்கை வாழ்வதற்க்காகவும் பயன்படுத்திடாமல் பெண் அடிமை தனத்திற்கு எதிராக, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பயன்படுத்தினார். சமூகநலனுக்காக எழுத்தினை பயன்படுத்திய முதல் பத்திரிக்கையாளர் பாரதியார் என்றால் மிகை ஆகாது.
இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்
தமிழ்மொழிபோல் இனிதொன்று இல்லை
இன்று தொலைக்காட்சிகளில் இரண்டு திரைப்படங்களில் நடித்தவர்கள் எல்லாம் நடுவராக அமர்ந்து பலருடைய திறமையை எடை போட்டுக்கொண்டு இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களால் வழங்கப்படுகிற சான்றிதழ் என்பது வெற்றுக்காகிதத்திற்கு ஒப்பானது. ஒரு விசயத்தை நல்லதென்றும் தீயதென்றும் பெருமை அதிகமென்றும் குறைந்ததென்றும் எவர் வேண்டுமானாலும் கூறிவிடலாம் ஆனால் அனைத்திலும் புலமை பெற்றவர் கூறிடும்போது தான் அதன் உண்மைத்தன்மை உலகால் ஏற்கப்படும்.
அதுபோலவே தான் தமிழின் பெருமையை இன்று நம்மைப்போன்ற எத்தனையோ பேர் கூறினாலும் அதனால் பெருமை ஒன்றும் இல்லை. காரணம் நமக்கு தமிழ் மொழியே முழுவதுமாக தெரியாதே. ஆனால் நம் பாரதியார் சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் தனி புலமை பெற்றவராக திகழ்ந்தார். அதன் பின்னரே இவ்வாறு உரைத்தார்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்”
பல மொழிகளில் திறம் பெற்ற பாரதியாரே கூறிவிட்டார் தமிழ் மொழி போல இனிய மொழி ஒன்றினை எங்கும் காணோம் என்று. இனி வேறு யாருடைய சான்றிதழ் நமக்கு வேண்டும்.
எனக்கு பிடித்த பாரதியின் பாடல்
தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் — என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் — இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதிய வுயிராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து — மதி
தன்னை மிகத்தெளிவு செய்து — என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்.
நீங்கள் எத்தனையோ கவிதைகளை வாசித்து இருக்கலாம் ஆனால் இந்தக்கவிதையை வாசித்த பின்பு உங்களுக்குள் நிச்சயமாக ஒரு எழுச்சி என்பது உண்டாகியே தீரும். எப்படி தேசிய கீதம் கேட்கும் போது ஒருவித எழுச்சி நமது அனைவரின் மனதிலும் ஏற்படுமோ அத்தகைய எழுச்சி அது.
ஏதோ பிறந்து விட்டோம் நாம் உயிர்வாழ உணவு தேவை என உணவுக்காக தேடி அலைந்து திரிந்து , பொழுது போகாமல் வெறும் கதைகளை பேசி காலம் கழித்து , நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என நிகழ்வுகளால் மனம் நொந்து, நாமே நன்றாக இல்லை பிறர் மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என பிறருக்கு தீங்கான செயல்கள் செய்து, வழக்கம் போல நரை விழுந்து இறக்கும் பேதை மனிதர்களை போல இறந்துவிட கூடாது என வலியுறுத்துகிறார் பாரதியார். அதேபோல நான் சில வரங்கள் கேட்கிறேன், என்னுடைய தீய செயல்களினால் விளைந்தவை என்னை வந்து தாக்காமல், எனக்கு புதிய உயிரினை அளித்து, தெளிவான சிந்தனையை கொடுத்து சந்தோசமாக இருக்க செய்வாய் என வேண்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கவிதையை படிப்போர் ஒவ்வொருவோர் மனதிலும் புதிய எழுச்சியை உண்டாக்கி “நாம் எப்படி பயனுள்ள ஓர் உயிராக வாழவேண்டும்” என உணர்த்துவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
சமூகத்தின் அவலத்தை கண்டு பாரதி கோவப்பட்டதை போல இன்றைய இளைஞர்கள் கோவப்படவில்லை, சகித்துக்கொண்டுள்ளனர் என்பதே உண்மை. பாரதி நம் மனதில் என்றும் இருக்க வேண்டிய “தீ”.
அநீதியை கண்டு கோவப்படு!