Site icon பாமரன் கருத்து

அண்ணாவின் நாவல் : என் வாழ்வு | P2

அண்ணாவின் நாவல் : என் வாழ்வு

பக்கம் : 1   2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18 


என் வாழ்வு


வாடிப்போன மல்லிகையைக் காணுபவர்கள், அது முன்னாள் வெண்ணிறத்துடன் விளங்கி நறுமணம் தந்து, மனோஹரியின் கூந்தலுக்கு ஆபரணமாக விளங்கிற்றே என்றெண்ணி அதனைக் கையிலெடுத்து வைத்துக் கொள்கின்றனரா? இல்லை! அந்த மல்லிகை வாடி வதங்கியது! பூக்காரன் வேறு மல்லிகையைத் தொடுத்துத் தருகிறான். அதுதான் புகழப்படுகிறது!


ஆனால், விளையாடும் சிறு பிள்ளைகளும் ‘வேறு புஷ்பம் வாங்கி வைத்துக் கொள்ள வகையில்லாதவர்களும்’ அந்த வாடிப்போன மல்லிகையை எடுத்து வைத்துக் கொள்வதுண்டல்லவா!


விமலா, வாடிப்போன மல்லிகை! அவளுடைய இளமை மாறி அதிக நாட்களாகவில்லை, ஆனால் மேனியின் மெருகும், வசீகரமும் வனப்பும் மங்கிவிட்டது. தங்கமேனி என்று பிறர் கூறக் கேட்டவள், தன் உடலைத்தானே கண்டு வெட்கமடையலானாள். உடல் இளைத்தது மட்டுமல்ல. அதன் பளபளப்புப் போய்விட்டது. விமலாவின், சுருண்டு திரண்ட கூந்தல், ஒரு காலத்தில், வாசனைத் தைலத்தில் மிதந்ததுண்டு. அவளுடைய முகத்தில் பாரிஸ் பவுடரும், தளுக்குப் பொட்டும் இருந்த காலமுண்டு. லோலாக்கு நாட்டியமாட, முத்துப் பற்கள் புன்னகை பாட அவளுடைய அதரமெனும் திரையை விட்டு வெளியே வருவதும், மறைவமாக இருந்த காலமுண்டு.


அந்த அதரந்தான் அடிபட்டு, வீங்கிப் பார்க்கப் பயங்கரமாக இருந்தது. அந்த வீங்கிய உதட்டுடன்தான் விமலா டாக்டர் சுந்தரேசனிடம் சிகிச்சைக்கு வந்தாள். ஜெமீன்தார் வீட்டுக் காரியஸ்தன் ஒருவனுக்குக் காய்ச்சல். அவனுக்கு ‘இன்ஜக்ஷன்’ செய்யும் வேலையிலே டாக்டர் ஈடுபட்டிருந்தார். விமலாவின் வீங்கிய உதட்டுக்கு, சிகிச்சை செய்ய நேரமில்லை. கம்பவுண்டர் கண்ணுசாமியைக் கூப்பிட்டு, “கண்ணா இந்த அம்மாவுக்கு என்னவென விசாரி” என்று உத்தரவிட்டார் டாக்டர்.


வீக்கத்துக்கும் மற்றும் வெடிப்பு, புண், யாவற்றுக்கும் ‘டின்சர்’ தடவுவது கண்ணுசாமியின் வழக்கம். அந்த முறைப்படியே வீங்கிய உதட்டுக்கும் கண்ணுசாமி ‘டின்சர்’ தடவப் போனான். டாக்டர் தன் வேலையோடு வேலையாக இதையும் கவனித்து விட்டார். “மடையா! உதடு வீக்கமென்றால் கூட டின்சர்தான் போடுவதா!” என்று கேட்டார். கண்ணுசாமி, விமலாவிடம் “உட்காரம்மா ஒரு பக்கமாக டாக்டர் வருவார்” என்று கூறிவிட்டு மருந்து கலக்கச் சென்றான்.


வீங்கிய உதட்டுடன் விமலா உட்கார்ந்து கொண்டிருக்கையில் அவள் மனத்தில் தூங்கிக் கொண்டிருந்த எண்ணங்கள் எழுந்து விட்டன. எண்ணாதனவெல்லாம் எண்ணலானாள்.


இந்த உதடு, நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்விதம் வீங்கயிருந்தால், எவ்வளவு “ராஜோபசாரம்” பெற்றிருக்கும். எத்தனைவிதமான மருந்துகள் வலிய வலிய வந்திருக்கும். எவ்வளவு ‘பெரிய பெரிய’ மனிதர்கள் தமக்குத்தான் வீக்கம் வந்தது எனக் கருதித் துடித்திருப்பார்கள். அது ஒரு காலத்தில்! விமலா, விளையாட்டுக் கருவியாக இருந்தபோது! விமலாவின் விழி, தன்மீது ஒரு முறை பாய்ந்தால் போதும் எனப் பலர் எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது என்ன பணம் கேட்டாலும் சரி, விமலாவைச் சரிப்படுத்து, அவள் நேசம் கிடைத்தால் போதும் என ஊரிலுள்ள உல்லாசச் சீமான்கள் கூறிய காலத்தில் என்ன உபசாரம் நடந்திருக்கு! இப்போது இளமைக் கெட்டு, அதனை விட விரைவினில் அழகு குன்றி உல்லாச உலகில் ஒதுக்கிடம் பெற்று, உருமாறிப் போன விமலாவுக்கு உதடு வீங்கிற்று என்றால் கம்பவுண்டர் கண்ணுசாமி டின்சர் தடவப் பார்க்கிறான்! அவன் பித்தன்! அந்த அதரம் எத்தனை பேரின் உணர்ச்சியை உலக்கிக் குலுக்கிவிட்டதென்பது அவனுக்கு என்ன தெரியும். சற்று குவிந்தும், சிவந்தும், அந்த உதடு காட்சி தந்து, சங்கீதப் பிரியர்களுக்கு அளித்த விருந்தை அவன் எப்படி அறிவான். வெற்றிலை பாக்கை, ஜாதிக்காய், ஜாபத்ரி, ஏலம் லவுங்கத்துடன் வாயில் விமலா குழைத்துக் கொண்டிருக்க அந்த வெற்றிலைப் பாக்குச்சாறு அந்த உதட்டில் படிந்து பவள நிறத்தைப் பெற்று பார்ப்பவரின் உள்ளத்தில் ‘மோகாந்தகாரத்தைக்’ கிளப்பிவிட்டதை கண்ணுசாமிக்கு என்ன தெரியும்!


அந்த வீங்கிய உதடு, விமலா என்ற அபலையுடையது என்பதை அவன் அறிவானேயொழிய, அந்த விமலா வெனும் தாசியின் சோகமிக்க சேதியை அவன் அறியான்.


விமலா எண்ணம், பறந்து சென்றது. தனது ‘வகை தரும் பருவத்தில்’ தான் இருந்த நிலை, இன்றுள்ள விசார வாழ்வு; அந்த இன்பம், இந்தத் துன்பம், அந்தக் குளிர்ச்சி, இந்த எரிச்சல், அந்த செல்வம், இந்த ஏழ்மை, வீதியில் மாலை 6 மணிக்கு, விளக்கேற்ற வருவாள் வருவாள் என, தரிசனத்துக்கு மைனர்கள் காத்துக் கொண்டிருக்க, அது நன்கு தெரிந்து கையில் விளக்குடன், கருத்தில் களிப்புடன், காலில் சிலம்பு ஒலிக்க, ஜடை சற்றே ஆட, முகத்தில் சோபிதத்துடன், வெளிவந்து, இரண்டொரு விநாடி, எரிந்த விளக்கை ஏறத் தள்ளிக்கொண்டே, தன் கண்களினின்றும் கூர்மையான அம்புகளைக் கிளப்பி, இளைஞர்களின் இருதயத்தில் பாயவைத்த விமலா, இன்று வீங்கிய உதட்டின் எரிச்சலை அடக்கிக் கொண்டு விதியே, விபரீதமே என எண்ணி விம்மிக் கொண்டிருக்கும் விமலா, இரண்டு நிலைக்கும் எத்துணை வித்தியாசம், வாழ்க்கையில் இப்போது விமலாவுக்கு வறட்சி, அன்று வாழ்க்கையில் அவள் கண்டதெல்லாம் இன்பம்.


எண்ணத்தில் ஆழ்ந்திருந்தவளை, டாக்டர் சுந்தரேசன் கண்டார். அவர் மனதில் திடீரென அவள் மீது ஒரு விதமான பச்சாதாபம் உண்டாயிற்று. விரைவில் தன் வேலையை முடித்துக் கொண்டு விமலாவிடம் வந்தார். விமலா, சரேலென எழுந்து நின்று கும்பிட்டாள். அவளது வணக்கத்தைப் புன்சிரிப் புடன் ஏற்றுக் கொண்டார் டாக்டர்.


என்னம்மா உடம்புக்கு? என்று கேட்டார். அவள் பதில் கூறுமுன்பு நிலைமையைத் தானே தெரிந்து கொண்டு பஞ்சில் எதையோ நினைத்து, உதட்டைத் துடைத்தார். தானே துடைத்துக் கொள்வதாக விமலா கூறினாள் கேட்கவில்லை டாக்டர். டாக்டர்களுக்குச் சில பிரத்யேக உரிமைகள் உண்டல்லவா!


கையிலே, சிறு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார் டாக்டர் சுந்தரேசன்.

“பெயர்?”

“விமலா!”

“வயது?”

“முப்பது” – ஆனால் என்ன, நாற்பது என்று எழுதிக் கொண்டால்கூட நம்புவார்கள்.

“தகப்பனார் பெயர்?”

“சர்வேஸ்வரன்!”

“இருப்பிடம்?”

“இப்போது டாக்டர் வீடு. இங்கிருந்து நேரரே குப்பய்யர் தெருவு, இந்த மாதம் வாடகை தராவிட்டால், வேறு வீதிக்குப் போவேன்.”

“தொழில்?”

“தாசி!”

“வேடிக்கையாகப் பேசிக் கொண்டே இருந்துவிட் டேனம்மா” என்று டாக்டர் சுந்தரேசன் கூறினார். ஏனெனில் அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை தந்துவந்த விமலா கடைசி கேள்விக்குப் பதில் கூறும்போது அவளையும் அறியாமல் கண்களில் நீர் தளும்பிற்று.


“நான் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டேன்” என்று டாக்டர் கூறினார்.


“இல்லை, டாக்டர் சார், இதிலென்ன தவறு. நான் தாசி என்பதை ஏன் மறைக்க வேண்டும். “இப்போது என்னை தாசி லோலர்கள் உலகுகூட மறந்து விட்டது. நான் தரித்திர உலகில் இப்போது குடி புகுந்துள்ளேன்.” என்று விமலா கூறி டாக்டரின் உள்ளத்தை உருக்கி விட்டாள்.

“விமலா – நீ நல்ல அறிவாளி” என்றார் டாக்டர்.


“நல்ல அழகியாகக்கூட இருந்தேன். பலரை அறிவை இழக்கும்படிக் கூடச் செய்தேன்” என்று விமலா பதிலளித்தாள்.


“உன் வாழ்க்கை வெழு ரசமுள்ளதாக இருக்குமென எண்ணுகிறேன். உனக்குச் சம்மதமானால், என் வீட்டுக்கு வா; நான் ஒண்டிக்கார மனிதன்; என் கிழத்தாயும், வேலைக்காரரும் மட்டுமே இருக்கிறார்கள். உன் கதையைச் சொல்லு, தவறாக எண்ணாதே” என்று டாக்டர் கூறினார். விமலா புன்னகை புரிந்தாள். கண்ணுசாமிக்குக் கோபம். “இவளோ ஒரு வேசி, உதடு வீங்கி வருகிறாள்; அவளிடம் இந்த டாக்டர் எதற்காக இவ்வளவு அக்கறை காட்டவேண்டும்” என்று எண்ணி, இந்த நாடகத்தை நிறுத்த வேண்டுமென விரும்பி. கனைத்தான். தான் இருப்பதை மறந்து விட்டு, இருவரும் பேசுகிறார்களோ என்று – இந்தக் கனைப்புதான், விமலாவுக்குப் புன்னகை வரச் செய்தது.


“டாக்டர் என்னை மன்னிக்க வேண்டும். தங்களிடம் கூற வேண்டிய பெரிய கதை ஒன்றும் இல்லை. நான் ஒரு தாசி. அலைந்து கெட்டேன். இவ்வளவுதான்” என்றாள் விமலா.


“ஆமாம் விமலா! நான் கேட்டது தவறு. உன் வாழ்க்கை யைக் கூறும்படி கேட்டது பிசகு. நாம் முன்பின் பழக்கமில்லாத வர்கள்” என்று கூறினார்.


“கோபமான டாக்டர்? நான் என் கதையைக் கூறிவிடு கிறேன். நாளைக்கு இங்கேயே கூறுகிறேன். உங்கள் வீட்டிற்கு, இதற்காக வர வேண்டுமா?” என்றாள் விமலா!


“விமலா நீ வந்தாகக்தான் வேண்டும்” என்று டாக்டர் வற்புறுத்தினார்.

—————

“நான் வந்தால், உங்கள் தாயார்…?” என்று இழுத்தாள் விமலா.


“தவறாக எண்ணமாட்டார்கள்” என்று உறுதி கூறினார் டாக்டர்.


சற்று கலங்கிய முகத்துடன் விமலா கூறினாள், “டாக்டரே, எனக்கே சொல்ல வெட்கமாக இருக்கிறது. நான் அங்கு வர முடியாது. வந்தால் எனக்கு நாயகனாக இருக்கும் பாவி என்னை நையப் புடைத்து விடுவான். நான் அவனுடைய சொத்து. அவன் என்னை இம்சித்தாலும் அவனை விட்டு விலகு முன்னம், நான் அடங்கித் தீர வேண்டும். அதற்குத்தான் பயப்படுகிறேன்” என்றாள் விமலா.


“அவன் யார்?” என்று கேட்டார் டாக்டர்.


“ரௌடி ரங்கன், என்று பிரக்யாதி பெற்றவன். அவனுடைய வைப்பு நான். டாக்டரே என்னைப் பற்றி நீர் சரியாகத் தெரிந்து கொள்ள இந்த விஷயம் போதாது. நான் இப்போது வேறு வழியில்லாததால், வாழ்க்கையில் பல விபரீதங்கள் ஏற்பட்டதால், ரௌடி ரங்கனின் வைப்பாட்டி யானேன். ஒரு காலம் இருந்தது. ரங்கன் போன்றவர்கள் என்னை ஏறெடுத்துப் பார்க்க முடியாத காலம். எனது ஏவலராக இருந்த காலம்” என்று விமலா கூறிக் கொண்டே அழுதாள்.


டாக்டர் சுந்தரேசனுக்கு மனம் உருகி விட்டது. “நான் எண்ணியபடியே இருக்கிறது. உன் வாழ்க்கையில் பல சோகச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமென எண்ணினேன். அப்படியே இருக்கிறது சேதிகளும். ரௌடி ரங்கனை எனக்கு நன்றாகத் தெரியும். போன மாதங்கூட, குடித்து விட்டு, சண்டை போட்டதில் அவன் மண்டையில் பலத்த காயம் பட்டது. நான்தான் மருந்து போட்டேன். ஆனால் அவனிடம், ‘இந்த அருமையான பொருள்’ இருக்கிறது என நான் துளிகூட எண்ண வில்லை” என்றார் டாக்டர்.


“நீங்கள் மட்டுமா டாக்டர், என் பழைய உலகில் இருந்த யாரையும் கேட்டுப் பார்க்கலாம், நான் இவ்விதமான முரட்டுக் குடியனிடமா இருக்கத் தக்கவள் என்பதைப் பற்றி. ஆனால் டாக்டர், அவன்தான் எனக்குக் கால்வயிற்றுக் கஞ்சி வார்க்கிறான். குடிவெறியில் உதைப்பான் அடிப்பான். ஆனால் அவனன்றி வேறு திக்குமில்லை எனக்கு. டாக்டர் நான் உம்மிடம் உள்ளதைக் கூறி விடுகிறேன். மறைக்க மனம் வரவில்லை. இந்த உதடு வீங்கியதற்குக் காரணமும் அவனே” என்றாள் விமலா. “நினைத்தேன், நான். ரங்கன் உன்னை அடித்துத் துன்புறுத்தினானா?” என்று டாக்டர் கேட்டார்.


விமலா சிரித்தாள். சோகத்திலும் அவளுக்கு டாக்டரின் கேள்வி சிரிப்பைத்தான் தந்தது.


“அடித்துத் துன்புறுத்தவில்லை” என்றாள் விமலா.


இந்த உரையாடல் முடியுமுன், ஒரு இளமங்கையும் மூதாட்டியும் டாக்டரின் உதவியை நாடி வந்தனர். மூதாட்டி இளமங்கையைக் காட்டி, “டாக்டர்! என் மகளுடைய கன்னத்தை, குழந்தை கடித்து விட்டது. பல் பட்டால் விஷமாமே – ஏதாவது மருந்து தடவுங்கள்” என்று கூறினாள். கூச்சத்துடன் இருந்த இளமங்கையின் கன்னத்திலே, குழந்தை கடித்தால், வடுவும் இரத்தக் கசிவும் இருந்தது.


“போய் வருகிறேன், டாக்டர்” விமலா கூறினாள். அவள் குரலிலே ஓர் வகை குறும்பு தொனித்தது.

கம்பவுண்டருக்கு. எங்கே வேறு யாராவது வைத்தியத்துக்கு வந்து விடுகிறார்களோ, வேறு யாரேனும் இந்தச் சீனைக் கண்டால் என்ன எண்ணுவார்களோ என்ற பயம். டாக்டரின் பெயர் கெடக் கூடாது என்பதிலே கம்பவுண்டருக்கு நிரம்ப கவலை. டாக்டர் கலியாணமாகாத இளம் பிள்ளை; கண்மண் தெரியாமல் ஆட ஆரம்பித்து விட்டால், பிறகு பிழைப்பின் வாயில் மண்தான் என்பது கண்ணுசாமிக்கு, “உன் தம்பியைப் போல டாக்டரைப் பார்த்துக் கொள்; அவன் ஒன்றும் தெரியாதவன். வெள்ளை மனுஷன். அவனுடையஅப்பாவும் அப்படித்தான். சின்ன வயதிலேயே அவனுடைய அப்பா கொஞ்சம் கெட்டு அலைஞ்சவர். பிள்ளையாண்டான் நல்ல வேளையாக அப்படி எல்லாம் இல்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். ஆனால் கலியாணமாகவில்லையே இன்னும். கண்ணும் கருத்தும் அலைகிற பருவம். காலமோ முன்னைப் போலஇல்லை. கண்ட கண்ட சிறுக்கிகளோடு எத்தனையோ பேர் காலந்தள்ளி வருவதைக் கண்ணாலே பார்க்கிறோம். நமது பையன் அப்படிப்பட்டவனல்ல. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். இருந்தாலும் நீயும் கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்று கூறுவதுண்டு. ஆகவே கண்ணுசாமி, கம்பவுண்டர் வேலையுடன் கார்டியன் வேலையும் தனக்கு உண்டு என்று எண்ணிக் கொண்டிருந்தான். தாசியுடன் டாக்டர் பேசப் பேச, கம்ப வுண்டருக்குக் கோபம் வந்ததில் ஆச்சரிய மில்லையல்லவா! இவள் யாரடா சனியன்! சிவபூசையில் கரடி புகுந்தது போல வந்து சேர்ந்தாள். ஏதேதோ பேசுகிறாள். வெட்கமே காணோம்.


‘நம்ம டாக்டர் மருந்து வகைகளை அறிவாரே தவிர மனித சுபாவம் என்ன தெரியும் அவருக்கு. அதிலும் பெண்கள் விஷயம் என்ன தெரியும். பெண்களிலும் இத்தாசிகள் சங்கதி என்ன தெரியும்’ என்று எண்ணினான். விமலா வெளியே போனபிறகு, தானே டாக்டருக்கு புத்திமதி கூற வேண்டும் எனத் தீர்மானித்தான். அதே சமயத்தில் விமலா, டாக்டரிடம் விடைபெற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். டாக்டர் “எப்போது வீட்டுக்கு வருகிறாய் சொல்லு. உன் கதையை நான் எப்போது கேட்பது” என்றார். “பழைய பல்லவியை விடமாட்டீர்களா?” என்று விமலா கேட்டாள். “எப்படி விடுவேன்” என்றார் டாக்டர்.


“டாக்டர் சார், நான் உங்கள் வீட்டுக்கு வருவதை விட…” என்று விமலா இழுத்தாள். “ஏன் நானே உன் வீட்டுக்கு வருகிறேன். விலாசம் என்ன?” என்று சுந்தரேசன் கேட்டார். ‘ஏதேது காரியம் முற்றிவிட்டது. ‘சிறுக்கி சிரித்துக் குலுக்கிப் பேசி, டாக்டரை மயக்கியே விட்டாளே என்ன செய்வது?’ என்று கண்ணுசாமி யோசித்தான்.


“சொல்லு விமலா. நான் எப்போது வந்தால் நீ ஓய்வாக இருப்பாய்” என்று டாக்டர் கேட்டார்.


“ஓய்வா! எப்போதுந்தான் ஓய்வு! ஆனால் நீங்கள் வருவது அவ்வளவு நன்றாக இருக்குமா! ஊரார் ஏதாவது தவறாக…” என்று விமலா கூறினாள். “ஊராருக்கு நமது விஷயத்தைப் பற்றி என்ன கவலை? நான் ஊராரைக் கேட்கிறேன். நீ ஏன் இதைச் செய்தாய், அதைச் செய்தாய் என்று. நான் வருவதால் எனக்கு ஏதாவது தடையாயிருக்குமா? அதைக் கூறு. சாக்கு வேண்டாம்” என்று டாக்டர் கண்டிப்பாகப் பேசினார். “சரி, நாளை மாலை 6 மணிக்கு வாருங்கள். மருந்தும் கையோடு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள்” என்றாள் விமலா. “சார் மணிபர்சை இங்கே போட்டு விட்டீர்களே, இதோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிக் கொண்டே, டாக்டர் கீழே தவறவிட்ட மணிபர்சை, கண்ணுசாமி டாக்டரிடம் தந்தான். தரும்போதே விமலாவை முறைத்தான். விமலாவுக்குக் கண்ணுசாமியின் குறும்பு தெரிந்து விட்டது. பணத்தைப் பிடுங்கிக் கொள்வாள் என்றும் காசாசைப் பிடித்தவள் தாசியென்றும், கண்ணுசாமி டாக்டரிடம் கூறாமற் கூறவே, மருந்து எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள் என்ற தான் கூறிய உடனே மணிபர்ஸ் என்ற பேச்சைப் பேசினான் என்பதைத் தெரிந்த கொண்டாள். கண்ணுசாமியின் குறும்பைப் போல எத்தனையோ குறும்புகளைக் கண்டவள் விமலா. அவளிருந்து வந்த உலகம், ஒரு தனிச் சர்வகலாசாலை. கண்ணுசாமி அதன் அரிச்சுவடி மட்டுமே அறிவான்.


விமலா மெள்ளச் சிரித்துக் கொண்டே, “டாக்டர் சார், எதெதை எங்கெங்கே வைத்து வைக்க வேண்டும் என்பதே உமக்குத் தெரியவில்லையே” என்று கூறினான். கண்ணுசாமிக்கு கோபம் மூண்டு விட்டது. “யாரைச் சாக்கிட்டு இதைச் சொன்னாய்” என்று விமலாவை நோக்கிக் கேட்டு, விமலா சிரிப்பை அடக்கிக் கொண்டு பயந்த பாவனையுடன் “கம்பவுண்டர் என்ன சொல்கிறார்; எனக்குத் தெரியவில்லையே; மணிபர்சை ஜேபியில் வைக்காது டாக்டர் வேறு எங்கேயோ போட்டு விட்டாரே என்று, எதெதை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைக்க வேண்டுமென்று சொன்னேன். இவருக்கு ஏன் டாக்டர் கோபம் வருகிறது” என்று டாக்டரைக் கேட்டாள். கண்ணுசாமி சரேலென, உள் அறைக்குச் சென்று விட்டான். விமலா சிரித்துக் கொண்டே “நான் போய் விடுகிறேன் டாக்டர். என் விலாசம் உங்கள் கம்பவுண்டருக்குத் தெரியும். நான் அவர் தங்கை வீட்டில்தான் குடியிருக்கிறேன்” என்றாள். உள்ளே சென்ற கண்ணுசாமி ஓடிவந்தான் வெளியே. “சீ! நாயே! போ வெளியே! என் தங்கை வீடாம். அவள் யாரடி என் தங்கை!” என்று கூவினான். “ஏன் உங்க மரகதம் வீட்டில் தானே நான் இருக்கிறேன்; உன் தங்கைதானே மரகதம்! அவள் சொல்லித்தான் நான் இங்கு வந்தேன்” என்றாள் விமலா. “டாக்டர் சார், நான் வேலையை விட்டுப் போய் விடட்டுமா, இந்த விதண்டாவாதக் காரியை வெளியே துரத்துகிறீர்களா? இரண்டிலொன்று சொல்லுங்கள் சீக்கிரம். இவள் வேண்டுமென்றே என்னைக் கேவலப் படுத்துகிறாள்” என்று கண்ணுசாமி கண்கலக்கத்தோடு கூறினான். டாக்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. மரகதம் யார்? அவள் வீட்டில் தாசி விமலா எப்படிக் குடியிருக்க முடியும்? கண்ணுசாமி நல்ல குலமாயிற்றே? என்று யோசித்தார். விமலாவின் கூரிய பார்வை, டாக்டர் சுந்தரேசனின் மனத்திற்குள் உள்ளதைக் கண்டுபிடித்துவிட்டது. டாக்டரே என் கதையைக் கேட்க வேண்டும்மென்று ஆவல் கொண்டீர்களே, அதைவிட ருசிகரமான கதை, உங்கள் கம்பவுண்டர் தங்கை மரகதத்துடையது. இங்கே கூறினால் கண்ணுசாமிக்குக் கோபம் கொதித்துக் கொண்டு வரும். அது சகஜம். மரகதம் கண்ணுசாமியின் தங்கை. ஆனால் வெளியே வந்து விட்டவள்” என்றாள். “வெளியே வந்துவிட்டவளா!” என்றார் டாக்டர்.


“ஆமாம்! வெளியே வந்துவிட்டவளென்றால், என்னைப் போலத் தாசியாகப் பிறந்தவளல்ல, விதியின் வசத்தால் விபசாரி ஆனவள். நாளைக்கு அவள் கதையைக் கூறுகிறேன். வாருங்கள்” என்று கூறிவிட்டு, வெளியே போய்விட்டாள்.


தாசி விமலாவின் சாதுர்யம் டாக்டருக்குச் சந்தோஷத்தை மட்டுமே தந்தது. ஆனால் கம்பவுண்டர் கண்ணுசாமியின் தங்கை விஷயமாக, விமலா கூறினதைக் கேட்டு, அவருக்குத் தூக்கி வாரிப் போட்டு விட்டது. கண்ணுசாமி எவ்வளவு நல்ல மனுஷன். அவனுக்கு இப்படி ஒரு தங்கை இருக்க வேண்டுமா? என்று எண்ணினார். கண்ணுசாமியின் கோபமும் கலக்கமும், சுந்தரேசனுக்குக் கவலையை உண்டாக்கி விட்டது. அவனுடைய மனம் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, விமலாவின் வரலாறும் வேண்டாம், மரகதத்தின் கதையும் வேண்டாம். அவர்கள் தொடர்பே வேண்டாம் என்றுகூட எண்ணினார். ஆனாலும் நல்ல புத்திசாதுரியமுள்ள விமலாவுக்கு ஒரு ரௌடி எப்படி நாயகனானான், நற்குடியிற் பிறந்த மரகதம் எப்படிப் பொதுமகள் ஆனாள் என்ற கதையைக் கேட்டே தீர வேண்டு மென்ற ஆவல், சுந்தரேசனை விட்டு அகலவில்லை. மேலும் விமலாவிடம் ஏதோ ஒருவித பாசம் அவனுக்கு ஏற்பட்டது.


மறுநாள் மாலை குறிப்பிட்டபடி டாக்டர் சுந்தரேசன் விமலாவைக் காணச் சென்றான். கையில் கவனமாக மருந்தும் கொண்டு போனான். மருந்து பாட்டில், அவன்மீது ஊராரின் தூற்றல் பாணம் பாயவொட்டாது தடுக்கும் கவசமாக இருந்தது. டாக்டர் மருந்து கொடுக்கச் செல்கிறார் என்ற சாக்குக்கு அது பெரிதும் உதவுகிறதல்லவா! சுந்தரேசனுக்குக், கதையைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எவ்வளவு இருந்ததோ அந்த அளவுக்கு மேலேயே பயமும் இருந்தது. ரௌடி ரங்கன் அங்கு இருந்து ஏதாவது வெறியிலே உளறினால் என்ன செய்வது என்ற கவலை. ஜுரத்துக்கு மருந்தும், புண்ணுக்குப் பூச்சும் போடத் தெரியுமே யொழியக், குடியனின் கோணல் சேட்டையைத் தவிர்த்துக் கொள்ள டாக்டருக்கு என்ன தெரியும் பாபம்! நல்ல வேளையாக ரங்கன் அங்கு இல்லை. உள்ளே நுழையும் போதே மலர்ந்த முகத்துடன் விமலா டாக்டரை வரவேற்றாள். பல வருஷங்களாகப் பழகியவள் போலப் பேசி உபசரித்தாள். வைத்தியசாலையில் இருந்தபோது அவள் காட்டிய சாமர்த்தியத்தைவிட வீட்டில் அவள் சமர்த்து டாக்டருக்கு அபாரமாகத் தோன்றிற்று.


சற்று ஸ்தூலசரீரமுடையவளும், சிவந்த மேனியினளும் நல்ல ஆபரணங்கள் அணிந்தவளுமான மாது தன்னை நமஸ்கரித்து “நாங்கள் செய்த பூஜாபலன்தான், இப்படிப்பட்ட பெரிய மனிதர்களை எல்லாம் இங்கே வரச் செய்தது” என்று உபசாரம் கூறியதைக் கண்ட சுந்தரேசன், விமலா குறிப்பிட்ட மரகதம், இவளாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி, தன் எண்ணம் சரியா என்று கேட்பது போல் விமலாவைப் பார்த்தான். “இதுதான் மரகதக்கா. நேற்று சொன்னேனே” என்று சிரித்துக் கொண்டே விமலா கூறினாள். அவள் மனக்கண்முன், கண்ணுசாமி கோபத்துடன் கூச்சலிட்ட காட்சி தோன்றிற்று. “அக்கா, அவருக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமோ? நாயே, பேயே, போடி வெளியே என்று வாயில் வந்தபடி கூறினார். ஒன்றும் பதிலே பேசவில்லை” என்று விமலா மரகதத் திடம் கூறினாள். மரகதம் “கோபத்துக் கென்ன குறைச்சலம்மா. கோபம் வரத்தான் வரும். ஏனென்றால் என்னை ஏழடுக்கு உப்பரிகைமீது ஏற்றி வைத்தான், நான் கெட்டு விட்டேன்; அதுதான் அவன் நினைப்பு, பேசுவான் இப்போது பெரிய ஆசாமி போல. வாய்க்குப் பூட்டா சாவியா விமலா. அதிலும் நம்மைப் பற்றி யார் கேட்கப் போகிறார்கள் என்ற திமிர்” என்று மரகதம் கூறினாள். டாக்டர், அண்ணனைத் தங்கை தூற்றுவதோடு நிற்காமல் கண்களைப் பிசைந்து கொள்வதைக் கண்டு, “ஏனம்மா போனதை எண்ணிப் புலம்பலாமா. அதெல்லாம் ஆண்டவன் செயல்” என்றார். விமலா, ஆண்டவன் உங்களை டாக்டராகவும், என்னை இப்படியும், அக்காவை இப்படியும் கண்ணுசாமியை அப்படியுமாக எத்தனை கோலத்தில் வைத்திருக்கிறார் பாருங்களேன். அவர் உலகப்படி எப்படி போனால் என்ன என்று எண்ணுகிறாரே தவிர, இவ்வளவு அலங்கோலமாக இருக்கிறதே நமது படைப்பு என்று கவலை பிறக்கிறதா. எப்படி பிறக்கும்? சிவனாக இருந்தால் பக்கத்தில் ஒன்று, தலையில் ஒன்று. விஷ்ணு மார்பின் மீதே சாய்த்துக் கொண்டிருக்கிறாராம். பிரம்மா என்னமோ நாக்கிலே வைத்துக் கொண்டிருக்கிறாராம். இப்படி நமது “சாமிகள்” நாயகிகளுடன் ஜோராகக் காலந்தள்ளிக் கொண்டிருக்கையிலே, நம்மைப் பற்றி ஏன் கவலை வரப்போகிறது. உங்களைப் போன்றவர்களைக், கடவுள் உல்லாசமாக இருக்கிறபோது படைத்திருப்பார். என்னைப் போன்றவர்களை அவர் உடலோ, உள்ளமோ இரண்டுமே எரிச்சலாக இருக்கும்போதோ பிறப்பித்திருப்பார்” என்றாள். டாக்டர் சிரித்துவிட்டு, “ஏதேது விமலா, உனக்கு கடவுள் பக்தி கூடக் கிடையாது போல் தெரிகிறதே” என்றார். “நீங்கள் என்ன சார் கடவுளுக்கு வக்கீலா!” என்று பளிச்செனப் பதிலளித்தாள் விமலா. “சரி, போதும் வாயை மூடு விமலா! ஏதேதோ வேதாந்தமும், விதண்டாவாதமும் பேசிக் கொண்டே வந்தவரைக் காக்க வைக்கிறாய். மேலே அழைத்துக் கொண்டு போய் உட்கார வை. விசிறி கொடு. நீயேதான் கொஞ்சநேரம் விசிறிக் கொண்டு இரேன். நான் காப்பி எடுத்துக் கொண்டு வருகிறேன்!” என்று கூறினாள் மரகதம். டாக்டரை அழைத்துக் கொண்டு விமலா, மாடிக்குச் சென்றாள். டாக்டர், அதுவரை தாசி வீட்டுக்கு மருந்து கொடுக்கக்கூடச் சென்றதில்லை. அதுதான் முதல் தடவை. தாசிகள், வருகிறவர்களை மயக்க, படுக்கை அறையை அலங்கரித்திருப்பார்கள். உள்ளே நுழைந்த உடனே பரிமளம் மூக்கைத் துளைக்கும், பஞ்சணை கண்ணைக் கவரும். ரவிவர்மா படங்களும், பாரீஸ் லேடி போட்டோக்களும் சுவரில் இருக்கும் என்று கதைகளில் படித்ததுண்டு, கண்டதாகத் தோழர்கள் சொல்லக் கேட்ட துண்டு. தாசிகள் இவ்வித சொகுசாக அறையைச் சிங்காரித்து வைத்துக் கொண்டிருப்பதால் தான் இளம் வாலிபர்கள் சொக்கி விடுகிறார்கள் என்று அவனுடைய நண்பர்கள் கூறியதைக் கேட்டு இருக்கிறான். அவ்விதமான அலங்கார அறைக்குள் தான் செல்லப்போவதாக எண்ணிய சுந்தரேசனுக்கு விமலாவின் படுக்கை அறை, பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. வேசி வீசும் வலை என்று அவனிடம் வர்ணிக்கப்பட்ட அறை வறுமையின் வாடை வீசும் கொட்டிலாக இருந்தது. பத்து வருஷங்களுகு“கு முன்பு புதிதாக இருந்த கட்டில். அதன் மீது கோரைப்பாய், சுவரிலே பல துளைகள், ஓரிடத்தில் லட்சுமி படம். மற்றோரிடத்தில் சரஸ்வதி மற்றும் ஓர் இடத்தில் காலண்டர். சோப்பு பெட்டியின் மூடி ஒரு புறமும், அடித்தட்டு வேறுமாக அறையின் மத்தியில் சிதறிக் கிடந்தது. கிழிந்த புடவைகள் ஆணியில் தொங்கின. இரவிக்கைகள் கீழே கிடந்தன. சுவரோரமாக இரண்டொரு பீடித் துண்டுகளும் தீக்குச்சித் துண்டுகளும் கிடந்தன. கட்டிலின் மீது கிடந்த பாயை அகற்றினாள் விமலா. மெத்தை ஒன்று தெரிந்தது. இரண்டொரு தலையணையும் கிடந்தன. “உட்காருங்கள்,‘சூட்’ அழுக்காகி விட்டால், வெளுக்க வண்ணான் இருக்கிறான். சோபாவிலும் நாற்காலியிலும் உட்கார வேண்டுமா? இந்த மாதிரி சொகுசான கட்டில் எங்கிருந்து உங்களுக்குக் கிடைக்கப் போகிறது” என்று தன் வறுமையை விமலா தானே கூறிக் கொண்டாள். அது டாக்டருக்கு வருத்தமாக இருந்தது. அவள் வருத்தப்படவில்லை. “இந்த அறை, கீழே சமயலறை இதற்கு வாடகை 10 ரூபாய். மரகதம் வாய் வாழைப் பழந்தான். கை கருணைக்கிழங்கு, இந்த வீட்டில் நானொரு குடி, மற்றும் மூன்று குடித்தனம்; மொத்தத்தில் 50 ரூபாய் வாடகை வருகிறது. வேறொரு வீடும் இருக்கிறது. அதிலே 60 ரூபாய் வருகிறது. இவ்வளவும் ஐந்து வருஷத்திலே சம்பாதித்தாள், “மகா ஜாலக்காரி” என்று விமலா, மரகதத்தின் தகவலைக் கூறத் தொடங்கினாள். அதற்குள் காலடிச் சத்தம் கேட்டது. டாக்டர் திடுக்கிட்டு எழுந்தார். பழக்கமற்றவரல்லவா? அதனால் யார் வருகிறார்களோ என்ற பயம். விமலா, கையால் “உட்காருங்கள்” என்று ஜாடை காட்டினாள். பிறகு உற்றுக் கேட்டுவிட்டு, “யாருமில்லை அக்காவாகத்தான் இருக்கும்.” என்றாள். “அது எப்படி உனக்குத் தெரிந்து விட்டது” என்று டாக்டர் கேட்டார். “உங்களுக்கு எப்படி ஏதோ குழலை மார்பிலே வைத்ததும் இன்ன நோய் என்று தெரிந்து விடுகிறது. அது உங்கள் வித்தை. இது என்னுடையது” என்று விமலா கூறினாள்.


விமலாவின் ஜோதிடம் பலிக்கவில்லை. வந்தவள் மரகதமல்ல, வேலைக்காரி. கையில் பலகாரத் தட்டும் காப்பிச் செம்பும் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். “அகிலாண்டமா, எங்கேடி மரகதக்கா?” என்று கேட்டாள் விமலா. அகிலாண்டம் பதிலைத் தன் கண்ணாலேயே தெரிவித்து விட்டாள். “ஏது! இவ்வளவு பொழுதோடே வந்துவிட்டாரா. சரி இன்று மரகதத்தின் கதையை நீங்கள் கேட்க முடியாது. மரகதத்தின் செட்டியார் வந்து விட்டாராம். அவர் போகும் முன்பு மரகதம் அப்படி இப்படி அசைய மாட்டாள். நாளைக்குப் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இந்தக் காப்பி பலகாரத்தைச் சாப்பிடுஙகள்” என்று விமலா கூறினாள். டாக்டர் சாப்பிட ஆரம்பித்தார். “மிளகாயை எடுத்துவிடுங்கள். அதோ கருவேப் பிலை, இஞ்சியை எடுக்காமலே தின்னகிறீரே, என்ன அவசரம்?” என்று விமலா உபசரித்தாள். டாக்டருக்குக்கூட ஆச்சரியமாயிருந்தது விமலாவின் உபசரணை, பழகவேயில்லை. நேற்றுச் சந்தித்து, இன்று இவ்வளவு லலிதமாகப் பேசுகிறாளே. ஒருவேளை தாசிகளின் ஜாலம் என்கிறார்களே, அதுதானோ இது என்று கூட எண்ணினார். காப்பி சாப்பிட்டானதும் வெற்றிலைத் தட்டு வந்தது. டாக்டர் “போடும் வழக்கமில்லை” என்று கூறினார். “நான்கூட கண்டவர்களைக் கூப்பிட்டு வெற்றிலை போடச் சொல்லும் வழக்கமில்லை” என்று கிண்டல் செய்தாள் விமலா. கிண்டல் கணையா, காமன் கணையா என்று தெரியாது சுந்தரேசன் திகைத்தான். அவனது திகைப்பே விமலாவுக்கு திவ்யமான விருந்தாக இருந்தது. “சரி, மரகதம் கதைதான் இன்று கூறுவதற்கில்லை. அதோ எங்க அகிலாண்டத்தின் சேதி தெரியுமோ உமக்கு. அது, என் சேதி, மரகதத்தின் சேதி எல்லா வற்றையும்விட வேடிக்கையானது” என்று விமலா கூறினாள். அகிலாண்டம், “எப்போதும் உங்களுக்கு விளையாட்டுத் தானம்மா!” என்றாள். “ஏண்டி அதுகூட வேண்டாமென்கிறாயா!” என்று கூறி அவள் தாடையை இடித்து விட்டு, “டாக்டர் சார். இந்த அகிலாண்டத்தின் புருஷன் இப்போது எங்கேயோ பல்லாரி சிறையிலே இருக்கிறானாம். இவள் கதையை கேளுங்க” என்று ஆரம்பிக்கப் போகும் சமயம், காலடி சப்தம் கேட்டது; ஒரு ஆசாமி நுழைந்தான். அகிலாண்டம் மெல்லக் கீழே போய்விட்டாள். “பார்த்தீர்களா ஆசாமியை, எதிரிலுள்ள வெற்றிலை பாக்குக் கடைக்காரன். அகிலாண்டத்துக்கு ஆசைநாயகன் அவன்தான்” என்றாள் விமலா. “புருஷன் இருப்பதாகக் கூறினாயே” என்று சுந்தரேசன் கேட்டான். “இருக்கிறான் ஜெயிலில்; இங்கே இவன் இருக்கிறான்” என்று விமலா குறும்பாகக் கூறிவிட்டு, இதுதான் டாக்டர் எங்கள் உலகம்.”

 

“எங்கள் உலகமே அலாதியானது. அதைப் பற்றிய கவலை மற்ற உலகத்துக்குக் கிடையாது. கோழி மனிதனுக்குப் பண்டம் பலகாரமாகிறது. ஆனால் அது பிழைத்து வளருவது குப்பை மேட்டைக் கிளறி, புழு பூச்சி தின்றுதான்.” என்றாள் விமலா.

 

“விமலா, இப்போது கோழிப்பண்ணை வைத்து, கோழி களை வளர்ப்பது ஒரு படிப்பாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது, உனக்குத் தெரியாது” என்று டாக்டர் நவயுக உலகச் சேதியைக் கூறினார்.

 

“ஆமாம்! கோழி வளர்ப்பார்கள், குரங்கை வளர்ப்பார்கள், இன்னமும் ஏதேதோ செய்வார்கள். ஆனால் உலகத்தில் பிறந்தவர்களை எப்படி வளர்ப்பது என்ற கவலை கிடையாது. மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கிறான் என்று கூறிவிடுவார்கள்” என்றாள் விமலா.

பக்கம் : 1   2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18 


நாவல்கள்


குறுநாவல்கள்


கவிதைகள்


கட்டுரைகள்

Share with your friends !
Exit mobile version