மிக நீண்ட சட்ட மற்றும் சமூகப் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆகி இருக்கிறார்கள். பெரியார் காலத்தில் துவங்கிய இந்த கோரிக்கையானது ஸ்டாலின் காலத்தில் தான் நிறைவேறி இருக்கிறது. கொண்டாடும் அளவுக்கு இது மிகப்பெரிய சாதனையா என சிலர் கேட்கலாம். நிச்சயமாக இது கொண்டாடப்பட வேண்டிய சாதனை தான் என்பதை புரிந்துகொள்ள மேலும் படியுங்கள்
இந்தியாவை பின்னோக்கி இழுத்துக்கொண்டு இருக்கும் சாபக்கேடுகளில் அதி தீவிரமான ஒன்று ‘சாதி’. இதனை எவரும் மறுத்துவிட முடியாது. அனைத்து சாதிகளிலும் சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையோரும் சாதிய பெருமை பேசும் எண்ணம் உடையோரும் இருக்கவே செய்கிறார்கள். ‘குறிப்பிட்ட வேலையை பார்க்கும் குழுக்கள் ஒரு சாதியாக அடையாளம் பிரிக்கப்பட்டார்கள்’ என்பது வரலாறு, இது அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஒரு வேலையை கவுரவமாகவும் இன்னொரு வேலையை கவுரம் குறைந்ததாகவும் பார்க்க ஆரம்பித்த பிறகு தான் சாதிய பிரச்சனையே ஆரம்பித்தது. அதிலும் பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட வேலை செய்கிறவரின் பிள்ளையும் அதே வேலையை செய்ய வேண்டும் என்று வரும் போது தான் பிரச்சனை ஆரம்பித்தது.
அனைவரும் அனைத்து வேலைகளையும் செய்யலாம் அதனால் சமூகத்தில் சாதியை கொஞ்சம் ஒழிக்க முடியும் என்பது பெரியார் துவங்கி இன்று வரைக்கும் உள்ளவர்களால் நம்பப்படுகிற விசயம். உதாரணத்திற்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த நபர்கள் மட்டும் தான் முடிவெட்டும் தொழிலை பார்த்துவந்தார்கள். விளைவு, முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொண்டது சமூகம். ஆனால், இன்று நீங்கள் ஒரு முடிவெட்டும் கடைக்கு சென்று பார்த்தால் அங்கே வேலை செய்திடும் நபர் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. இன்று முடிவெட்டும் வேலை ஒரு பொதுவான வேலையாக அணுகப்படுகிறது.
இந்த மாற்றம் ஒவ்வொரு வேலையிலும் நடக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், பணம், படிப்பு, திறமை இருந்தால் யாரும் எந்த வேலையையும் செய்திட முடியும். ஆனால், நாம் உடைக்க முடியாதது கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட பிரிவினர் தான் செல்ல முடியும் என்ற விதியைத்தான். காலம் காலமாக இவ்விதி கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அதனை உடைத்தெறிந்து அனைத்து சாதியினரும் முறையான பயிற்சி பெற்றால் அர்ச்சகரும் ஆக முடியும் என்பது மிகவும் முக்கியமாக செய்திட வேண்டிய காரியமாக இருந்து வந்தது.
பெரியார் பற்ற வைத்த தீ
1970 ஆம் ஆண்டு பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். அதன்படி, கோவில் கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அனுமதிக்க வேண்டும் எனவும் இல்லையேல் குடியரசு தினத்தன்று தமிழகம் முழுக்க போராட்டம் நடக்கும் என அறிவித்தார். கோவில் கருவறைக்குள் நுழைய திருநீறு பூசிக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமானால் அதனை பெரியார் இயக்க தொண்டர்கள் செய்துகொள்ளுங்கள் என தனது தொண்டர்களிடம் கூறினார். தமிழகம் மீண்டும் ஒரு பதற்றத்தை சந்திக்க தயாரானது. அந்த பதற்றத்தை தணிக்க அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் ‘பெரியார் அவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் எனவும் விரைவில் இதற்கான சட்டம் இயற்றப்படும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்’.
தமிழகத்தில் முக்கியமான சட்டத்திருத்தம் நிறைவேறியது. அதன்படி, தமிழகத்தில் இருக்கும் இந்துக்கோவில்களின் நியமனத்தில் வாரிசு அடைப்படையில் நியமனம் என்பது நீக்கப்பட்டது.
இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும்’ என தீர்ப்பளித்தது. மனுதாரரின் அச்சத்திற்கு இப்போதைக்கு அவசியம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட வார்த்தைகள் ஆகம விதிப்படியே நியமனம் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
அனைவரும் அர்ச்சகர் ஆவது என்பதற்கு எம்ஜிஆர் அவர்களின் அரசும் முயற்சிகளை மேற்கொண்டது. அவர் 1982ல் நீதியரசர் மகாராஜன் தலைமையில் கோயில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவும் அனைத்து சாதியினரும் உரிய பயிற்சிக்குப் பிறகு அர்ச்சகராக நியமிக்கப்படலாம் என்று கூறியது. ஆனால், அதற்கு முன்பாக அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 -2ல் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கூறியது.
கேரளா நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு
2002 ஆம் ஆண்டு ஆதித்யன் Vs கேரள அரசு என்கிற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், “ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை ‘எல்லோரும் சமம்’ என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்ட ரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும் என்று தீர்ப்பளித்தது.
இதன்பிறகு, தமிழகம் விழித்துக்கொண்டது. இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி, 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கு உரிய அரசாணையை வெளியிட்டது. நீதிபதி ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அடிப்படையில் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிகள் என அனைத்தும் வரையறுக்கப்பட்டன. இதன்பிறகு பயிற்சி பள்ளிகள் பல்வேறு கோவில் வளாகங்களில் அமைக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி, பணி நியமனத்திற்கு தடை உத்தரவைப் பெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்கள் 2008ஆம் ஆண்டு தீட்சையை முடித்துவிட்ட நிலையில், இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆனால், வழக்கின் முடிவின் அடிப்படையில்தான் பணி நியமனங்கள் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி பயிற்சி பெற்ற மாணவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதற்கு இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த சமயத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்ததாகக் கூறுகிறார் ரங்கநாதன்.
2011ல் புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இந்த விவகாரத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதற்குப் பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. “தமிழக கோயில்களில் ஆகமவிதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும் ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்” உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெரிவித்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லையென அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் கருதினர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை.
இதன் பிறகு சிறிய சிறிய நியமனங்கள் நடைபெற்றன. ஆனால் பெரிய அளவில் நியமனங்கள் நடைபெறவில்லை. அர்ச்சகர் வேலைக்காக காத்திருந்தவர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்கள். பல ஆண்டுகள் வேலைக்காக காத்திருந்தவர்கள், வேறு வேலைகளுக் கூட செல்ல ஆரம்பித்தார்கள்.
நிலைநாட்டப்பட்ட சமூகநீதி
திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் அனைவரும் அர்ச்சகர் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் 28 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதில் 24 பேர் அர்ச்சகர்களாகவும் 4 பேர் மடப்பள்ளியிலும் பணிகளைப் பெற்றனர். இருபத்தி நான்கு பேரில் 5 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இனி இந்த வேலையை இந்த சாதியினர் தான் செய்திட வேண்டும் என்ற கட்டுப்பாடு உடைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் சமூகநீதிப் பாதையில் வெற்றிநடை போடட்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!