Site icon பாமரன் கருத்து

அனு குமாரி IAS வெற்றிக்கதை | Anu Kumari IAS Success Story

இந்தியாவில் பல லட்சக்கணக்கான மாணவ மாணவியரின் கனவாக இருப்பது IAS அதிகாரி ஆக வேண்டும் என்பது தான். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் UPSC தேர்வில் கலந்து கொண்டாலும் சில நூறு பேர் தான் அதில் தேர்ச்சி பெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே படிப்பதற்கு உகந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் அல்ல. 

அவர்கள் சவாலான சூழ்நிலையை கடந்து கடுமையாக உழைத்து தான் தேர்ச்சி அடைகிறார்கள். அவர்களின் வெற்றிக்கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதே போன்றதொரு சூழலில் உள்ள உங்களாலும் வெற்றிபெற முடியும் என்பதற்காகவே இங்கே IAS Success Story ஐ பகிர்கிறோம்.

இந்தப்பதிவில் நாம் பார்க்க இருப்பது, நல்ல வேலையை உதறிவிட்டு குழந்தையை பிரிந்து தனது கனவான UPSC தேர்வில் தேர்ச்சி அடைந்து IAS அதிகாரி ஆவதற்கு முயற்சித்து வெற்றியடைந்த அனு குமாரி IAS அவர்களின் வெற்றிக்கதையை தான் பார்க்க இருக்கிறோம்.

ஐஏஎஸ் அதிகாரியான அனு குமாரி, ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்தவர். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளார். மேலும், நாக்பூரில் உள்ள ஐஎம்டியில் எம்பிஏ (நிதி மற்றும் சந்தைப்படுத்தல்) முடித்துள்ளார்.

படித்து முடித்த பின்பு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். அவர் பார்த்த வேலைக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும் கூட அவரால் அந்த வேலையை செய்திட முடியவில்லை. அதில் அவருக்கு ஒரு திருப்தி கிடைக்கவே இல்லை. அவருக்கு UPSC தேர்வில் பங்கேற்று ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது. 

இதற்கிடையே, அவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் அவர் தனது பணியில் இருந்து விலகினார். நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விடுவது மிகப்பெரிய முட்டாள்தனம் என பலர் சொல்லியும் கூட அனு குமாரி கேட்கவில்லை. எவர் சொல்லியும் கேட்காமல் தனது லட்சிய பயணத்தை நோக்கி பயணமானார். UPSC தேர்வுக்கு கடுமையாக பயிற்சி செய்திட ஆரம்பித்தார். 

இதற்கிடையில் அவருக்கு குழந்தையும் பிறந்தது. அவர் பல நேரங்களில் தனது குழந்தையை விட்டுவிட்டு தான் இந்த தேர்வுக்கு தயாரானார். முதல் முயற்சியில் இவருக்கு தோல்வி தான் மிஞ்சியது. இந்தியாவிலேயே மிகவும் கடினமான தேர்வாக கருதப்படும் UPSC தேர்வில் தோல்வி என்பது சகஜம் தான் என்பதை ஏற்றுக்கொண்டு மீண்டும் கடுமையாக பயிற்சி செய்திட ஆரம்பித்தார். அதற்கான பலன் இரண்டாவது முறையில் அவருக்கு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு நடந்த UPSC தேர்வில் அவர் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். 

உங்களுடைய கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நீங்கள் கடுமையாக முயற்சி செய்தால் அதனை அடைய முடியும் என்பதற்கு அனு குமாரி அவர்களின் வெற்றிக்கதை ஓர் உதாரணம்.

Exit mobile version