“Akil Kureshi: A Justice, denied” என்ற தலைப்பில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகி இருக்கக்கூடிய கட்டுரை நீதித்துறையின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, அரசின் ஆதிக்கம் உள்ளிட்டவைகள் குறித்து நாம் வைத்திருக்கக்கூடிய பிம்பங்களை உடைத்தெறிகிறது.
கட்டுரையின் சாராம்சம்
இந்தியாவின் உயரிய நீதிமன்றம் “உச்சநீதிமன்றம்”. உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுவது என்பது சட்டம் பயின்ற ஒவ்வொருவரின் வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். ஆனால் அங்கே நீதிபதி பணி கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளை நியமிக்கும் வேலையை ‘கொலிஜியம்’ தான் மேற்கொள்கிறது. கொலிஜியம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அடுத்த மூத்த நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு. கொலிஜியம் குறித்து சட்ட சவால்கள் எழுந்தபோது அதனை எதிர்கொண்ட உச்சநீதிமன்றம் ‘கொலிஜியம்’ தான் புதிய நீதிபதிகளை நியமிக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் அரசின் பங்கு இருக்குமாயின் அது நேர்மையானதாகவும் மக்களின் நம்பிக்கைக்கு உரியதாகவும் இருக்காது என்பதற்காகத்தான் உச்சநீதிமன்றம் தானே இவ்வேலையை செய்கிறது என பல வல்லுனர்களும் நம்பினார்கள். நானும் அப்படியே நம்பினேன், நம்புகிறேன்.
ஆனால், ஒவ்வொருமுறை ‘கொலிஜியம்’ புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்திடும் போதும் சில கேள்விகளும் எழவே செய்கின்றன. அதில் முக்கியமான கேள்விகள் அனைத்தும் ‘கொலிஜியம்’ அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்ததாகவே இருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்தும் “ஏன் இவரை நியமிக்கவில்லை?”என்பதை ஒட்டியே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. ‘கொலிஜியம்’ அமைப்போ ஒருவரை ஏன் பரிந்துரை செய்திடவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதனால் விமர்சனத்தை அது எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
அகில் குரேஷி : நீதிபதிக்கு மறுக்கப்பட்ட நீதி
தற்போது பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகள் பட்டியலில் “அகில் குரேஷி” என்ற மூத்த தலைமை நீதிபதி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான வழக்குகளில் இவர் சாதகமான தீர்ப்புகளை வழங்கவில்லை என்பதற்காக அவர் மறுக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.
சில ஆண்டுகளாக தடைபட்டு வந்த புதிய நீதிபதிகள் நியமனம் தற்போது தான் நடைபெற்று உள்ளது. இவ்வளவு நாட்கள் தடைப்பட்டதற்கு காரணம், தற்போது திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அகில் குரேஷி அவர்களின் பெயர் பரிந்துரையில் இல்லை என்பதனால் தான் என்கிறார்கள். இதுபற்றி கேள்வி எழுப்பிவந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் ஆகஸ்ட் 12 அன்று ஓய்வு பெற்றார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு பிறகு புதிய நீதிபதிகளுக்கான பரிந்துரை நடந்துள்ளது.
குஜராத்தில் பிறந்தவர் தான் அகில் குரேஷி. இவர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது கொடுத்த இரண்டு தீர்ப்புகள் அப்போதைய நரேந்திர மோடி அவர்களுடைய அரசுக்கு எதிராக அமைந்துவிட்டன. 2010 இல், அவர் விசாரணை நீதிமன்ற உத்தரவை நிராகரித்துவிட்டு ,சோராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சரும் இப்போது மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை இரண்டு நாள் சிபிஐ காவலில் வைக்க அனுமதி வழங்கினார். (2014 இல், ஷா இந்த வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.)
நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது, குஜராத் கவர்னர் கம்லா பெனிவால் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் ஏ மேத்தாவை மாநிலத்தின் லோக்ஆயுக்தாவாக நியமித்தார். இதனை மோடி அரசு எதிர்த்தது. இந்த நியமனத்தை எதிர்த்து 2011 இல் தொடரப்பட்ட வழக்கில் ஆளுநர் நியமனம் செல்லும் என தீர்ப்பு அளித்தது நீதிபதி குரேஷி தலைமையிலான ஒரு பெஞ்ச்.
நீதிபதி அகில் குரேஷி பலமுறை பதவி உயர்வுக்கான சிக்கலை அனுபவித்து இருக்கிறார். நவம்பர் 2018 இல், குஜராத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பணி காலியானது. அப்போது அங்கே இருந்த மூத்த நீதிபதி அகில் குரேஷி தான். ஆகவே அவர் தான் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் நீதிபதி ஏ எஸ் தேவ் [Justice A S Dave] தற்காலிக தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். அதோடு, நீதிபதி அகில் குரேஷி பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கே இவரது ரேங்க் 5 என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை எதிர்த்து குஜராத் வழக்கறிஞர்கள் மாபெரும் போராட்டத்தை அறிவித்தார்கள். வழக்குகளும் தொடர்ந்தார்கள். இதனால் நீதிபதி குரேஷியின் பம்பாய் இடமாற்றம் நிறுத்தப்பட்டாலும், மே 2019 இல், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவரை நியமிக்குமாறு கொலிஜியம் பரிந்துரையை அரசாங்கம் திருப்பி அனுப்பியது. இறுதியாக, செப்டம்பரில், கொலிஜியம் அவரை திரிபுரா தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைத்தது. இதனால் மாபெரும் எண்ணிக்கையிலான நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்திற்கு தலைமை வகிப்பது பறிபோனது.
உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி குரேஷி பணியாற்றியபோது அவர் மிகுந்த நேர்மையுடனும் சிரத்தையுடனும் வேலை செய்ததாக குறிப்பிடுகிறார்கள். தனக்கு தொடர்புள்ளதாக சொல்லப்படும் சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட பொதுநல வழக்குகளில் தானே முன்வந்து அவர் விலகியது இன்றளவும் பேசுபொருளாக இருக்கிறது. திரிபுரா தலைமை நீதிபதியாக பல்வேறு வழக்குகளை தானே முன்வந்து பதிவு செய்து நீதியை நிலைநாட்டியதும் பாராட்டப்படுகிறது.
இவரைப்பற்றி இன்னொரு உயர்நீதிமன்ற நீதிபதி குறிப்பிடும் போது அவர் ஒரு “கடின உழைப்பாளி”, “சுதந்திரமானவர்” மற்றும் “பகுத்தறிவில் சிறந்தவர்” என்று கூறினார். அதிக வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதிலும் அக்கறை காட்டிடுவார் என்றும் இவர் பணியாற்றும் போது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் ஒரு நீதிமன்ற அலுவல் அதிகாரி குறிப்பிடுகிறார்.
ஒருவர் தனது பணியை செய்ததற்காக அவருக்கான வாய்ப்புகளை தடுப்பது என்பது ஜனநாயகம் ஆகாது. இப்படியொரு விசயம் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் கொலிஜியம் என்ற அமைப்பே உள்ளது என நம்பப்படும் சூழலில் அங்கேயும் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுவது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஒருவேளை அவர் அந்தப் பணிக்கு நிராகரிக்கப்பட்டதற்கு வேறு காரணங்கள் இருப்பின் வெளிப்படையாக அதனை அறிவிக்க வேண்டியது கொலிஜியம் அமைப்பின் தார்மீக கடமை ஆகிறது.
நீதி வெல்லட்டும்.
இந்தக்கட்டுரையின் பெரும்பகுதி இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!