Site icon பாமரன் கருத்து

பாரதியார் கவிதைகள் கல்வி குறித்தானவை

bharathiyar kavithaigal பாரதியார் கவிதைகள்

பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். தேசம் குறித்தான பாரதியாரின் கவிதை, நேர்மை குறித்தான பாரதியார் கவிதை, பெண்கள் குறித்த பாரதியார் கவிதை படிப்போர் உள்ளதை கிளர்ந்து எழச்செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அதேபோல, கல்வி குறித்தும் பாரதியார் அற்புதமான கவிதைகள் பலவற்றை தந்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பாரதியார் கவிதைகள் மக்கள் அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தும் விதத்திலேயே இருக்கும்.

கல்வியின் முக்கியத்துவத்தை செல்வத்தோடு ஒப்பீடு செய்து பின்வரும் கவிதையில் எழுதியுள்ளார் பாரதியார். ஒருவருக்கு கல்வியைப்போல செல்வம் வேறு எதுவும் இல்லை என்றும் பிறருக்கு கொடுக்க கொடுக்க செல்வமானது கரையும். ஆனால், கல்வியானது பிறருக்கு கொடுக்க கொடுக்க மேலும் வளரும் சிறப்பு வாய்ந்தது என பாரதியார் கூறுகிறார்.

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!
செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்

பின்வரும் கவிதை வரிகளில் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிட கல்வியையும் கண்களையும் ஒப்பிட்டு இருப்பார் பாரதியார். அவரது கவிதைப்படி, கல்வி கற்றவரே கண்கள் கொண்டவர். கல்வி கற்காதவருக்கு கண்கள் இருந்தாலும் அவர் பார்வை இல்லாதவர் போன்றவர் தான். ஆகவே, அனைவருக்கும் முதல் கடமை என்பது கல்வி கற்பது தான். அதை செய்தாலே கடமைகளை செய்து முடித்தது போன்று தான் என்கிறார் பாரதியார்.

கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!
கற்பதுவேஉன் முதற் கடமை..!

இளமையில் கல்வி பயில வேண்டும் என்கிற ஒளவையார் கூற்றினை அனைவரும் கேட்டு நடக்க வேண்டும் எனும் பாரதியார், வயதானால் கல்வி கற்பதில் சற்று சிக்கல் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இளமையிலேயே கல்வியை அனைவரும் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்

இந்த உலகில் வாழும் மனிதர்களுக்கு முதலில் உணவு இட வேண்டும். அதேபோல, பூமி உயர அனைவருக்கும் கல்வி அறிவையும் தர வேண்டும் என வலியுறுத்துகிறார் பாரதியார்.

வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்

நாடு வளர என்ன செய்திட வேண்டும் என அறிவுரை கூறும் போது கல்விக்கான முக்கியத்துவம் பற்றி மிக அழகாக கூறி உள்ளார் பாரதியார். ஆயுதம் செய்திட வேண்டும், நமது அறிவை பதிந்து அடுத்த தலைமுறைக்கு கடத்த காகிதம் செய்திட வேண்டும், ஆலைகள் வைத்து தன்னிறைவு அடைய வேண்டும், அதேபோல கல்வி சாலைகள் அமைத்து கல்வியறிவில் மேம்பட வேண்டும் என கூறுகிறார்.

ஆயுதம்செய்வோம் நல்லகாகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச்சாலைகள் வைப்போம்;
ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பலவண்மைகள் செய்வோம்

வீதிக்கு ஒன்று அல்லது இரண்டு பள்ளிகள் இருக்க வேண்டும் என்கிறார் பாரதியார். அதேபோல ஒரு நகரில் பல பள்ளிகள் இருக்க வேண்டும். கல்வி அறிவு பெற பள்ளிகள் இல்லாத ஊர்களை தீக்கரையாக்கினாலும் தகும் என பொங்கி எழுகிறார் பாரதியார்.

வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்
நகர்களெங்கும் பலபலபள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்.

புண்ணிய செயல்களை பட்டியலிடும்போது ஒரு ஏழைக்கு கல்வி அறிவு போதிப்பதை ஒப்பிட்டு பாடியுள்ளார் பாரதியார். அதன்படி, அன்ன சத்திரம் ஆயிரம் வைப்பதை விடவும், ஆலயங்கள் அமைப்பதை விடவும் ஒரு ஏழைக்கு கல்வி அறிவு கொடுப்பது தான் சிறந்த புண்ணியம் என்கிறார் பாரதியார்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

பின்வரும் கவிதை வரிகளிலும் கல்வியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார் பாரதியார். பாரதியார் கவிதைகள் கல்வி க்கு முக்கியத்துவம் கொடுப்பவை. அதனை அனைவரும் படித்து அதன்படியே நடந்தால் முன்னேற்றம் நிச்சயம்.

திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே

வாழி கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே

சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்தமதி ,கல்வி- அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை
என்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி

படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்

Share with your friends !
Exit mobile version