தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை எந்தவித சங்கடமும் இன்றி பிள்ளைகளுக்காக செலவிடும் பெற்றோர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள் ஜூன் 01
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் நாள் உலக பெற்றோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2012 ஆம் ஆண்டு ஜூன் 01 ஐ பெற்றோர் தினமாக கொண்டாட முடிவு செய்தது. உலகின் அனைத்து பகுதியிலும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்காக தன்னலமற்று செயல்படுகிறார்கள் என்றும் குழந்தைகளுக்காக தங்களது வாழ்வையே சமரசம் செய்துகொள்கிறார்கள் என்றும் பெருமை படுத்துகிறது ஐக்கிய நாடுகள் சபை.
நான் வசிக்கின்ற சென்னையில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரைக்கும் சாலையில் தங்களது பிள்ளைகளை அழைத்துக்கொண்டுபோகின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. முந்தைய காலங்களை விட பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் அதீத அக்கறை காட்டுகிறார்கள் என்பதனை கண்கூடாக பார்க்க முடிகிறது. மாலை வேளைகளில் இசை வகுப்பு, விளையாட்டு வகுப்பு, நீச்சல் பயிற்சி வகுப்பு என அடுத்த வேலையை துவங்கி விடுவார்கள். அந்த பெற்றோரின் முழு முயற்சியும் எதற்காகவெனில் போட்டி நிறைந்த இவ்வுலகில் நமது பிள்ளை எதையாவது சாதித்துவிட வேண்டும் , அவன் நிம்மதியாக வாழுவதற்கு தேவையான ஒரு வேலையை பெற்றுவிடவேண்டும் என்பதற்காகத்தான்.
ஒரு ஆய்வு கூறுகிறது, நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளையின் படிப்பிற்க்காக மட்டும் 50% முதல் 60% சதவிகிதம் வரைக்கும் செலவு செய்கிறார்கள் என்று. இன்னும் சில குடும்பங்களில் கடன் வாங்கிக்கூட பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கவும் நினைக்கிறார்கள்.
நன்றியோடு இருப்போம்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை என்பது உண்டு. ஆனால் பெற்றோர்கள் மட்டுமே தான் தங்களுக்கென்று வாழ்க்கையொன்று நினைப்பதாக உணருவதே இல்லை. தங்களது வாழ்க்கை என்பது தனது பிள்ளை தான் என பெற்றோர்கள் முடிவெடுத்து விட்டார்கள். உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி தனது வாழ்வினை தியாகம் செய்து பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்திடும் நன்றிக்கடன் என்ன தெரியுமா? உங்களது பெற்றோரை பெருமை அடையச்செய்வது தான். அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கும் போது உங்களுக்காக அதனை தியாகம் செய்தவர்கள் என்பதனை நினைவில் கொண்டாலே நீங்கள் அவர்களுக்கு நன்றியோடு தான் இருப்பீர்கள்.
ஒவ்வொரு பெற்றோருக்கும் “உலக பெற்றோர் தின” வாழ்த்துக்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!