பெண்களுக்கு எதிராக நடந்த பொள்ளாச்சி சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக பெண்களுக்கு எதிராக நடந்த இக்கொடுமையை “பாலியல் பயங்கரவாதம்” என்றே குறிப்பிடலாம். இந்த கொடும் நிகழ்வினை பற்றி பேசுவபர்களில் சிலர் “பெண்களும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்” என்ற கருத்தினை முன்வைத்தார்கள். இதற்க்கு பெண்களின் மத்தியில் இருந்து விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
- ஆண்களை முறையாக வளர்க்காமல் பெண்களை பாதுகாப்பாக இருக்க சொல்வதில் உள்ள நியாயம் என்ன?
- ஒழுக்கம் ஆணுக்கு போதிக்கப்படாமல் பெண்ணுக்கு மட்டுமே போதிப்பது எதனால்?
- பெண்களின் கோபம் நியாயம் தானா? அவர்களின் மீதான அக்கறையில் சொல்லப்படுவதைக்கூட தவறாக புரிந்துகொள்கிறார்களா? அல்லது பெண்களின் கோபத்தில் நியாயம் இருக்கிறதா?
என்னுடைய கருத்தினை படித்த பிறகு உங்களுடைய கருத்தையும் பதிவிடுங்கள்.
பெண்களே !….
“பெண்களும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்” இருப்பது அவசியம் என்று கூறுபவர்கள் ஆண்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள், அந்த அக்கறையினாலேயே பேசுகிறார்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
பொள்ளாச்சி சம்பவம் வித்தியாசமான சம்பவம், ஏதோ ஒரு பெண்ணின் மீது கொண்ட கவர்ச்சியின் காரணமாக அரங்கேறிய பாலியல் வன்கொடுமை அல்ல இந்த பிரச்சனை. ஒரு குழுவாக செயல்பட்டு பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி பின்னர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் வேலையை கடந்த ஏழு ஆண்டுகளாக செய்து வந்திருக்கிறார்கள்.
இப்படி திட்டமிட்டு நடத்தப்படுகின்ற சதியில் பெண்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற அக்கறையில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறுகிறோம். சாலையில் வாகனம் ஓட்டி செல்லும் போது ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்லுங்கள் என்பது வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாடம் எடுப்பதற்காக சொல்லப்படுவது அல்ல, விபத்து ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பாக நீங்கள் செல்லவேண்டும் என்ற அக்கறையினாலேயே கூறப்படுகிறது.
சமூக வலைதளம் இன்று கட்டற்ற சுதந்திரத்தை நமக்கு அளிக்கிறது. வீட்டிற்குள் அமர்ந்துகொண்டு எங்கோ இருக்கும் பெயர் அறியாதவர்களிடம் கூட நட்பினை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. சில லைக்குகள், சில சேர்களில் நமக்கு பிடித்தவர்கள் ஆகிப்போகிறார்கள். உடனே அவர்களுடன் பேசி பழகி நண்பர்கள் ஆகிவிடுகிறோம். ஆனால் எதிர்புறத்தில் பேசுபவர்கள் உங்களை ஏமாற்றவே திட்டமிட்டு இதனையெல்லாம் செய்கிறார்கள் என்பது பாதிக்கப்பட்ட பின்னர் தான் உங்களுக்கு தெரிய வரும்.
பொள்ளாச்சியில் மட்டுமே நடந்தேறிய நிகழ்வு அல்ல இது. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற திட்டமிட்ட படு பயங்கரமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதில் ஈடுபடும் கயவர்களை தண்டிப்பது மிகவும் தேவையான ஒன்று தான். அதே சமயம் பெண்களும் பாதுகாப்பாக இருந்தால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடந்து செல்ல நம்மால் இயல முடியும் என்பதே நம் வேண்டுகோள்.
ஒழுக்கம், பொறுப்பு, கண்ணியம் அனைத்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானது. அதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. ஆனால் அனைவருமே இதனை பெற்று இருப்பார்கள் என உறுதி கூற இயலாது. ஆகவே நாமும் பாதுகாப்பாக இருப்பது நல்லது தானே.
பெண்களே உங்கள் மீதான அக்கறையில் கூறப்படும் வார்த்தைகள் உங்கள் மீதான அக்கறையில் கூறப்படுபவை, உங்கள் மீது எதையும் திணிக்க முயல்பவை அல்ல.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
பாமரன் கருத்து