அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கவிருக்கிறார். மோடி, அமித்ஷா போன்றவர்களின் வியூகங்களை எப்படி உடைத்தார் கெஜ்ரிவால் என்ற கேள்வியும் ஆச்சர்யமும் பலரிடம் தொற்றிக்கொண்டுள்ளது.
சினிமா புகழ்ச்சி இல்லை, பெரும் பண பலம் இல்லை, வெறும் சாதாரண அரசு ஊழியர். இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவர் அரசியலுக்கு வரலாம், வந்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு மாநிலத்திற்கே முதலமைச்சராக அரியணை ஏற முடியுமா? மக்கள் அவ்வளவு எளிதாக அந்த வாய்ப்பை கொடுத்துவிடுவார்களா? சரி அப்படியே கொடுத்துவிட்டாலும் மீண்டும் மீண்டும் அந்த வாய்ப்பை தக்கவைக்க முடியுமா? வலுவான எதிர்கட்சிகளை மீறி வெற்றியை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமா, அவர்கள் பல வியூகங்களை அமைத்து வெற்றிகண்டவர்களாயிற்றே.
நான் சந்தேகத்தோடு எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் “முடியும்” என்று நிரூபித்துக்காட்டியிருக்கிறார் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்கப்போகும் அரவிந்த் கெஜ்ரிவால். நாடு முழுமைக்கும் மிகப்பெரிய வெற்றியை பாராளுமன்றத்தேர்தலில் பெற்றிருந்த டெல்லியில் மோடி மற்றும் அமித்ஷா இருவரின் தேர்தல் வியூகங்களை அரசியல் தாக்குதல்களை வெற்றிகரமாக கையாண்டதனால் தான் கெஜ்ரிவால் இப்படியொரு மகத்தான வெற்றியை பெற முடிந்தது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எப்படி ஜெயித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்? வாருங்கள் பார்க்கலாம்.
மோடியின் பார்முலாவை பயன்படுத்திய கெஜ்ரிவால்
2014 ஆம் ஆண்டு மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டபோது அரசியல் களத்தை கவனித்திருந்தால் இந்த பார்முலாவை உங்களால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஊழல் குற்றசாட்டுகள் பலமாக பேசப்பட்டுவந்த நேரம் அது. மோடி அவர்கள் “குஜராத் போல இந்தியாவை முன்னேற்றி காட்டுவேன்” என்ற முழக்கத்தோடு ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்றவற்றை வாக்குறுதிகளாக கொடுத்து வாக்கு சேகரித்தார். பாஜகவின் கொள்கை இந்துத்துவா என்றாலும் கூட அவர்கள் இப்போது பேசுவதைப்போல அந்த கருத்துக்களை தேர்தல் களத்தில் அழுத்தமாக பேசவில்லை.
ஆகவே தான் பெரும்பான்மையான வாக்குகளை மோடி அவர்களால் பெற முடிந்தது. அவருக்கு இரண்டாவது வாய்ப்பு இந்திய மக்களால் கொடுக்கப்பட்டதும் இவற்றை அவர் நிறைவேற்றிக்காட்டுவார் என்ற நம்பிக்கையில் தான் என்றே நான் நினைக்கிறேன்.
நீங்கள் நன்றாக கவனித்துப்பார்த்தால் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மோடி அவர்களின் பார்முலாவைத்தான் பயன்படுத்தி இருப்பார். பாஜக இந்துத்துவா, பாகிஸ்தான் எதிர்ப்பு என பெரிய பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தபோது கெஜ்ரிவால் மிகவும் எளிமையாக ” உங்களது வீட்டிற்கு இலவச மின்சாரம் கிடைக்கிறதா?” ” உங்களது குழந்தை படிக்கின்ற அரசுப்பள்ளியில் தரம் இப்போது உயர்ந்திருக்கிறதா” “அரசின் திட்டங்கள் உங்களுக்கு எளிமையாக கிடைக்கிறதா?” என அவர் என்ன செய்தாரோ அதை கேள்வியாக மக்கள் மத்தியில் வைத்தார். அதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஏனென்றால் இந்த விசயங்களை மற்ற அரசாங்கங்களை விட மிகவும் சிறப்பாகவே டெல்லியில் செய்திருந்தார் கெஜ்ரிவால். இது அவருக்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுத்தந்தது.
மதவாத அரசியலை தள்ளி வைத்த கெஜ்ரிவால்
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பான பிரச்சனைகளில் மிகவும் லாவகமாக செயல்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால் எனலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். காரணம், இந்த சட்டத்தையும் இந்த சட்டத்திற்கு எதிராக நடக்கின்ற போராட்டங்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கவில்லை. இந்த சட்டத்தை நாடு முழுவதும் இருக்கின்ற கட்சிகள் எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கும்போது இவர் பேச வேண்டிய இடங்களில் மட்டும் இந்த சட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை வைத்தார்.
மாறாக, அரசியல் பிரச்சாரங்களில் பாஜகவிற்கு எதிராக அவர் குடியுரிமை சட்டம் தொடர்பான விவாதங்களை முன்வைக்கவில்லை. அவருக்கு முஸ்லீம் வாக்காளர்கள் தனக்குத்தான் வாக்களிப்பார்கள் என தெரிந்திருந்தது. மறுபக்கம் இன்னொரு பிரிவினரின் வாக்குகளும் அவருக்கு தேவைப்பட்டது. ஆகவே தான் பாஜக இந்து முஸ்லீம், பாகிஸ்தான் எதிர்ப்பு, போராட்டங்கள், துப்பாக்கிசூடு போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டாலும் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வீசிய அந்த பந்துகளை தொடவே இல்லை. அவருக்கு தெரியும் தான் தொடாவிட்டாலும் மக்கள் அதை புரிந்துகொள்வார்கள் என்று.
ஆகவே தான் அவர் தான் இதுவரை டெல்லியில் செய்துகாட்டிய விசயங்களை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பது என்ற முடிவுக்கு வந்தார். உண்மையிலேயே அவரது சிறப்பான செயல்பாட்டினால் மக்கள் பல நன்மைகளை பெற்றிருந்தனர். ஆகவே தான் பாஜகவால் அரவிந்த் கெஜ்ரிவால் அடித்த பந்துகளை தடுக்க முடியவில்லை.
காணாமல் போன காங்கிரஸ்
பொதுவாக முஸ்லீம் மதத்தவர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அவர்களின் வாக்கு ஆம் ஆத்மி க்கு கிடைக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு போயிருந்தால் பாஜக இன்னும் சில இடங்களில் முன்னிலை பெற்றிருக்கலாம். ஆனால் பாஜகவின் பிரதான எதிரி காங்கிரஸ், நாடு முழுமைக்கும் இருந்து அந்த கட்சியை அகற்றுவது தான் முதல் வேலை என பலமுறை பாஜகவினர் சொல்லக்கேட்டிருப்போம். அப்படி காங்கிரஸ் கட்சி காணாமல் போனதால் தான் ஆம் ஆத்மி கட்சியால் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் வாக்குகளை முழுமையாக பெற முடிந்தது என்பதே உண்மை. இந்தத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைவிட ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பது தான் உகந்தது என அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். இதுவும் மிகப்பெரிய வெற்றியை அரவிந்த் கெஜ்ரிவால் பெறுவதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது எனலாம்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்
நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த மோடி அமித்ஷா இருவரின் வியூகமும் சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், மக்களின் தெளிவு. மக்கள் முட்டாள்கள் அவர்கள் பணம் கொடுக்கிறவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள், ஆனால் உண்மையில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். எந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆகவே தான் ஓரே பார்முலாவை பயன்படுத்தினாலும் ஒரு தேர்தலில் கிடைத்த வெற்றியை இன்னொரு தேர்தலில் பெற முடியவில்லை.
உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!