Site icon பாமரன் கருத்து

ராமர் பிள்ளை 5 ரூபாய் மூலிகை பெட்ரோல் உண்மையானதா ? | வருமா வராதா ? | Why Ramar pillai 5 Rupees petrol not come for sale | Truth

2018 August 15 சுதந்திரத்தினத்திற்கு முன்பு ராமர் பிள்ளை அவர்களின் மூலிகை பெட்ரோல் மக்களின் பயன்பாட்டிற்கு வருமென தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராமர் பிள்ளை கூறினார் . பெட்ரோல் 4 ரூபாய் மற்றும் டீசல் 5 ரூபாய் க்கு விற்கப்படும் என அறிவித்தபடியால் சமூக வலைதளங்களில் இவருக்கு வரவேற்பு அதிகரித்தது . அதிலும் ராமர் பிள்ளை தமிழர் என்பதனால் பகிர்தல் அதிகமாகவே இருந்தது. ஆனால்  சுதந்திர தினத்தை கடந்தும் இன்னும் ராமர் பிள்ளை அவர்களின் மூலிகை பெட்ரோல் மக்களின் பயன்பாட்டிற்கு விற்கப்படவில்லை .

 

இதுகுறித்து தேடியதில் அனுமதியின்றி போலியான பெட்ரோலிய பொருளினை விற்பனை செய்வது தவறென போலீசார் நோட்டிஸ் வழங்கியுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூட செய்திகள் கிடைக்கின்றன .

 

யார் இந்த ராமர் பிள்ளை?

 

ராமர் பிள்ளை பெட்ரோல் உண்மையானதா ? வருமா வராதா ?

 

பெட்ரோலிய கம்பெனிகள் அழுத்தம் கொடுப்பதனால் தான் அவரால்  கொண்டுவர முடியவில்லையா ?

 

உண்மையில் என்னதான் நடந்தது ?

 

எதற்காக அறிவித்தபடி மூலிகை பெட்ரோல் மற்றும் மூலிகை டீசல் விற்பனைக்கு வரவில்லை ?

 

என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதிலைக்காண்போம் .

 

யார் இந்த ராமர் பிள்ளை?

 

விதியிருந்தால்  ஓவர் நைட்டில் ஒருவர் புகழின் உச்சிக்கே சென்றுவிடுவார் என்பார்களே ! அதுதான் ராமர் பிள்ளையின் விசயத்திலும் நடந்தது .  பள்ளிப்படிப்பை பாதியில் விட்டிருந்த ராமர்பிள்ளை அவர்கள் 1996 ஆண்டு ஹைடிரோகார்பன்கள் சேர்க்கப்படாமல் வெறும் மூலிகைகளையும் தண்ணீரையும் வைத்து ” மூலிகை பெட்ரோலுக்கான பார்முலாவை கண்டறிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிடுகிறார் “

 

மூலிகை பெட்ரோலிய சோதனை செய்யும் ராமர் பிள்ளை

 

பெட்ரோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டபடியால் அதிக விலைக்கு விற்கப்பட்டது.  ராமர் பிள்ளையின் இந்த கண்டுபிடிப்பு இந்திய வரலாற்றையே , இன்னும் சொல்லப்போனால் உலக வரலாற்றையே மாற்றிடும் என நம்பியபபடியால் அவரது பெயர் உலகம் முழுவதும் பரவியது .

 

முதல்வர் கருணாநிதி முன்பு சோதனை நடத்திய ராமர் பிள்ளை

 

ராமர் பிள்ளை அவர்கள் அவருடைய சோதனைக்கூடங்களிலும்  IIT போன்ற கல்லூரிகளிலும் பல அறிவியலாளர்கள் முன்னிலையிலும் சோதனைகளை நிகழ்த்தி தன்னுடைய சோதனையின் இறுதியில் பெட்ரோல் பொன்ற எரியூட்டக்கூடிய பொருளை உருவாக்கி காட்டினார் .

 

கருணாநிதி மற்றும் ராமர் பிள்ளை

 

அவை அனைத்தை காட்டிலும் அதிக பிரபலத்தை , முக்கியதுவத்தை கூட்டியது செப்டம்பர் 16 , 1996 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் திரு கருணாநிதி முன்னிலையில் சோதனை நடத்திய பின்புதான் .

 

அன்று முதல்வர் கருணாநிதி , மின்சாரத்துறை அமைச்சர் வீராச்சாமி , தயாநிதி மாறன் மற்றும் பல அதிகாரிகளின் முன்நிலையில் சோதனையை துவக்கினார் ராமர் பிள்ளை . வழக்கம்போல தண்ணீரில் தன்னுடைய மூலிகையை  போட்டு , சாதாரண உப்பு மற்றும் எலுமிச்சை சாறினை கலந்தார் . கொதிக்கப்பவைக்கப்பட்டு  15 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டிய திரவம் (ராமர் பிள்ளை கூறும் மூலிகை பெட்ரோல் ) சோதனைக்கு தயாரானது .

 

கருணாநிதி அவர்கள் சிறிய பேப்பர் துண்டு ஒன்றினை அந்த திரவத்தில் நனைக்க , மின்சாரத்துறை அமைச்சர் பற்றவைக்க சுடர்விட்டு எரிந்தது பேப்பர் .

 

சோதனையில் திருப்தி அடைந்த கருணாநிதி சில பரிந்துரைகளை  அறிவித்தார் .

 

 

 

 

 

தோல்வியடைந்த ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் சோதனை

 

கருணாநிதி அவர்களின் ஆதரவிற்கு பிறகு ராமர் பிள்ளைக்கு மதிப்பு கூடியது . அரசியல்வாதிகள் , பெரிய பெரிய நிறுவனங்கள் அவருடன் இணைந்து செயலாற்ற முன்வந்தன .

 

ஆனால் அதற்கும்  பேராபத்து வந்தது. 1999 – 2000 ஆம் ஆண்டிற்குள்ளாக முன்னனி கல்லூரியான IIT யிலும் இந்தின் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் யிலும் அவரது சோதனைகள் தோல்வியில் முடிந்தன .

 

இந்த காலகட்டத்தில் ராமர் பிள்ளை அவர்கள் கூறியது ” படித்த அறிவாளிகள் எனது கண்டுபிடிப்பை முடக்க பார்க்கிறார்கள் .பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவனை சாதிக்க விட மறுக்கிறார்கள் என தெரிவித்தார் .

 

மேலும் கேள்வி கேட்போருக்கு நான் 1996 முதல் 2001 க்குள்ளாக 15 லட்சம் லிட்டர் மூலிகை பெட்ரோல் விற்று இருக்கின்றேன் . இதுவரை ஒருவர் கூட பழுது  சொன்னதில்லை என அவரது கண்டுபிடிப்பிற்கு ஆதரவாக பேசினார் .

 

CPS (Center For Policy Studies) அமைப்பின் அறிக்கை

 

CPS (Center For Policy Studies) என்கிற அமைப்பு ராமர் பிள்ளை குறித்த கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது . அதனை முழுவதுமாக இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கவும் . அதன் சுருக்கம் தமிழில் உங்களுக்காக ….

 

DST (Department of Science and Technology) அமைப்பில் உள்ள அறிவியல் அறிஞர்கள்  செப்டெம்பர் 03 , 1996 ஆம் ஆண்டு ராமர் பிள்ளையின் சோதனையை கண்டபிறகு உண்மையாலுமே மூலிகை பெட்ரோல் உருவாவதை நம்பினர் .அவரை பாராட்டி புகழ்ந்தனர். அதே GST அமைப்பினர் தான் அக்டோபர் 01 1996 அன்று ராமர் பிள்ளை ஏமாற்றுகிறார் , போலியானவர் என கோபமடைந்து தகவல்களை வெளியிடுகிறார்கள் . இவரால் உலக அளவில் இந்திய அறிவியலின் மதிப்பு குறைந்ததாகவும் குற்றம் சாட்டினார்கள் .

 

 

இதற்கு முக்கிய காரணம் 1996 செப்டம்பர் 26 அன்று IIT சென்னையில் நடந்த சோதனை தோல்வியடைந்ததே காரணம் .

 

இது ஒருவகை காரணமாக இருந்தாலும் இன்னொரு மிக முக்கியமான காரணமொன்று இருக்கின்றது.

 

1995 களில் ராமர் பிள்ளை CPS அமைப்பிடம் தன்னுடைய கண்டுபிடிப்பை பார்த்து பிறகு அங்கீகாரம் வாங்குவதற்கு உதவிடுமாறு அணுகுகிறார் . 1996 இல் டில்லியில் DST அமைப்பினர் முன்பாக எப்படி செய்து காண்பித்தாரோ அப்படியே தான் இங்கும் செய்து காண்பித்தார் .

 

1996 களில் DST அறிஞர்கள் ஒப்புக்கொண்டதைப்போல , கருணாநிதி ஒப்புக்கொண்டதைப்போல கிடைத்த output எரிந்தவுடன் நம்பிவிடவில்லை CPS அமைப்பினர் . அவர்கள் input மற்றும் output அளவினை தோராயமாக கணக்கிட்டு பார்த்தனர் . input அளவினை விட output அளவு அதிகமாக இருக்க வந்தது முதல் சந்தேகம் .

 

இதனால் சுதாரித்துக்கொண்ட CPS அமைப்பினர் எங்களுடைய முடிவினை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்பாக உங்களது மூலப்பொருள்களையும் உற்பத்தி முறையையும் மீண்டும் ஆய்வகத்திற்குள் சோதித்து பார்க்க வேண்டும் என கேட்டது . அதற்கு ஆரம்பகட்டத்தில் ஒப்புக்கொள்ளாத ராமர்பிள்ளை பிறகு ஒருவழியாக ஒப்புக்கொண்டார் .

 

டாக்டர் பாலாஜி டாக்டர் ஸ்ரீனிவாஸ் போன்ற இயற்பியலாளர்கள் மற்றும் வேதியியல் துறை வல்லுனர்களின் முன்னிலையில் சோதனை நடைபெற்றது . இரண்டு கலன்களில் ஒரேவிதமான வழிமுறைகளின்படி தயாரிப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டன . மூன்று நாட்களுக்கு பிறகு முதல் கலனில் எண்ணெய் போன்ற திரவம் மிதந்தது , இரண்டாவது கலனில் எந்த மாற்றமும் இல்லை .

 

ராமர் பிள்ளை முதலாவது கலனை எடுத்துக்கொண்டார் . பிறகு ஐந்தாம்நாள் அந்த கலன் திறக்கப்பட்டது . அதில் பெட்ரோல் போன்ற தீ பற்றக்கூடிய பொருள் மேற்புறமாக திரண்டு இருந்தது . மொத்த கலனின் எடை ஆரம்பத்தை காட்டிலும் ௧. கிலோகிராம் அதிகரித்து இருந்தது . அதற்கும் ராமர் பிள்ளையிடம் விளக்கம் இல்லை , பெட்ரோலிய பொருள் எப்படி வந்தது என்பதற்கும் விளக்கமில்லை .

 

இதனைதான் 1996 ஆம் ஆண்டு CPS அமைப்பு DST அமைப்பிற்கு அறிவுருத்தியது . இதன்பிறகே அவர்கள் சுதாரித்துக்கொண்டு நடத்திய ஆய்வு தோல்வியடைய , ராமர் பிள்ளையை போலியான கண்டுபிடிப்பாளர் என கோபமாக அறிவித்தார்கள் .

 

ஆக அவர் தகுதியற்ற பெட்ரோலிய பொருள்களை வைத்து உருவாக்கிய கலவையையே மூலிகை பெட்ரோல் என்கிற பெயரில் விற்றுவந்தது தெரியவந்துள்ளது .

 

ராமர் பிள்ளை கைது

 

அவரது மூலிகை பெட்ரோல் விற்பனை ஒருபக்கம் அதிகரிக்க மறுபக்கம் அவர் மீதான புகார்களும் குவிய தொடங்கின .

 

மார்ச் 2000 , CBI தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து ராமர் பிள்ளையை கைது செய்தது . அதற்கான காரணம் “திருடப்பட்ட பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்தார் ” என்பதுதான் .

 

தன்னுடைய மூலிகை பெட்ரோலினை தயாரிக்க பெட்ரோலிய பொருள்களை கலக்கிறார் என்பதும் அந்த பொருள்களை அனுமதியில்லாமல் வாங்குகிறார் என்பதும் தான் குற்றச்சாட்டு . அப்போது நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் , பெட்ரோலிய வேதிப்பொருள்கள் , அதிக அளவிலான பணம் கைப்பற்றப்பட்டது.

 

2015 இல் பிரதமர் மோடி மற்றும் அப்போதய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் முன்நிலையில் சோதனைகள் நடத்திக்காட்டியதாக கூறிடும் ராமர் பிள்ளை அதற்கான ஆதாரங்கள் போட்டோக்கள் இருக்கிறதா என தந்தி டிவி நிரூபர் கேட்டபோது இல்லை , அது ராணுவம் சம்பந்தபட்ட ரகசியமானது என கூறுகின்றார் .

 

அக்டோபர் 13 , 2016 அன்று சென்னை நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டணை மற்றும் 30000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது .

 

பாமரன் கருத்து

 

ஆரம்பகாலங்களில் எப்படி சோதித்து பார்க்காமலே இவரது கண்டுபிடிப்பை அறிவியலாளர்களும் முதல் அமைச்சரும் ஏற்றார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி , கேவலம் . 

இந்த சுதந்திரத்தினத்தில் மீண்டும் மூலிகை பெட்ரோல்  விற்பனைக்கு வரும் வண்ணம் தனியார் நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறினார் ராமர்பிள்ளை . அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அந்த நிறுவனம் மறுத்ததையும் அதே நிகழ்வில் பதிவிட்டது தந்தி தொலைக்காட்சி .

 

மேற்கண்ட பதிவுகளை திரட்ட நான் ராமர் பிள்ளை அவர்களின் அனுபவங்களை படித்திடும் போது அவரது கண்டுபிடிப்பை அனைவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள் . உலகிற்கே புதிய சக்தி, படிப்பறிவில்லாத இந்தியர் ஒருவரால் கிடைக்கபயோகிறதென்றே நம்பினார்கள் . அவரது கண்டுபிடிப்பை திருடவும்  முயற்சிகள் நடந்திருக்கின்றன .

 

உண்மையாலுமே அவரது கண்டுபிடிப்பின் மூலமாக மூலிகை பெட்ரோலிய பொருளினை தயாரிக்க முடியும் என்று இருந்தால் இந்நேரம் அவர் மூலமாகவோ அல்லது வேரொருவர் மூலமாகவோ கூட வந்திருக்கும் .

 

முதல்வர் , பிரதமர் , IIT , விஞ்ஞானிகள் என பெரிய இடங்களுக்கு சென்றுவிட்ட பிறகு யாரோ அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள் என சொல்வது அபத்தம் . ஏமாற்றிடும் செயலின்றி வேறில்லை என்றே தோன்றுகிறது .

 

மேலும் நம் இந்தியாவின் பெரும்பான்மையான செலவினத்தில் ஒன்று பெட்ரோல் இறக்குமதி . மூலிகை பெட்ரோல் உண்மையாக இருந்திருந்தால் இந்தியாவை உயர்த்திட மோடி அதனை பயன்படுத்திக்கொள்ளவே நினைத்திருப்பார் . எண்ணை கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டா ராமர் பிள்ளையை முடக்குவார் ?

 

இன்னும் தடுக்கிறார்கள் என்றால் பொது வெளியில் மக்கள் மத்தியில் தன்னுடைய கண்டுபிடிப்பை நிகழ்த்திக்காட்டிய பிறகே ராமர் பிள்ளையை நம்பிடுங்கள் . அதுவரை 5 ரூபாய் பெட்ரோல் வருமென்று ஆவலாக காத்திருக்காதீர்கள் . தமிழன் என்பதனால் உணர்ச்சிவசப்பட்டு  போலியான செய்திகளை நம்பிடாதீர்கள் .

 

பாமரன் கருத்து
பாமரன் கருத்து
Exit mobile version