Site icon பாமரன் கருத்து

ராஜலட்சுமி படுகொலை : நாம் பேசவில்லையே ஏன்?

 


 

ஒரு ஏழைக்குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்த 13 வயதுடைய ராஜலட்சுமி செல்லப்பிள்ளையாக வளர்க்கப்படுகிறாள் . தீடிரென ஒருநாள் பக்கத்து வீட்டிலிருக்கும் இளைஞன் கையில் அரிவாளோடு வீட்டிற்குள் நுழைகிறான் . அம்மாவின் கண் முன்னாலேயே தலை வேறு துண்டம் வேறாக சிதைக்கப்படுகிறாள் சிறுமி . என்ன நடக்கிறது என அம்மா துடிதுடித்து  போகிறாள் .


இந்த காட்சி சினிமாவில் வந்த காட்சி அல்ல , நமக்கு சம்பந்தமில்லாத காலகட்டத்தில் நடந்த சம்பவமும் அல்ல . நாம் வாழுகின்ற இக்காலத்திலேயே நிகழ்ந்த கொடூரமான நிஜ சம்பவம் தான் ராஜலட்சமி என்ற சிறுமியின் படுகொலை .

 


 

கொலையாளி மனநலம் சரியில்லாதவர் என கொலையாளியின் பக்கம் இருப்பவர்கள் கூறுவதும் ,  கொலையுண்ட சிறுமி ராஜலட்சுமியின் உறவினர்களோ பாலியல் சீண்டலை வெளியில் சொன்னதால் கொலை செய்யப்பட்டுவிட்டார் எனவும் , தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ராஜலட்சுமி , உயர்சாதியினரான தினேஷ் குமார் வீட்டிற்கு வருவது பிடிக்காமல் அவர் செய்த கொலை எனவும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது .

 


 

நாம் ஏன் பேசவில்லை ?



இந்த படுகொலைக்கு  முக்கிய காரணமே சாதிய சிந்தனைதான் காரணமாக இருக்கும் என்கிறார்கள் விசாரித்தவர்கள் . நான் ராஜலட்சமி என்ன காரணத்திற்க்காக கொலை செய்யப்பட்டார் என்பதனை ஆராய்வதை விட்டுவிட்டு சமூக வலைத்தளங்களில் , செய்திகளில் ஏன் ராஜலட்சுமியின் படுகொலை மிகப்பெரிய விவாதப்பொருளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை ? என்பதனை ஆராய முயல்கிறேன்.

 

ராஜலட்சுமி பெற்றோர்

 

அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொன்மாலைபொழுது நிகழ்ச்சியில் பெண் செய்தியாளர் ஒருவர் அவருக்கு நிகழ்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் . முதல் நிகழ்வு , ஒரு பெண் கொடூரமாக ஆசிட்  ஊத்தப்பட்டு சிதைக்கப்படுகிறாள் . இந்த செய்தி குறிப்பிட்ட ஒரு பத்திரிக்கையில் செய்தியாக வெளிவருகிறது . ஒரு பக்கம் முழுவதும் அழகாக இருக்கும் அந்த பெண்ணிண் போட்டோ போடப்பட்டு மறுபக்கம் செய்தி எழுதப்பட்டு இருக்கின்றது .

இரண்டாவதாக அதே போன்றதொரு ஆசிட் வீச்சு நடக்கின்றது . பெண் கொடூரமாக சித்தரிக்கப்படுகிறார் . இப்போதும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிடுகிறது . சின்ன கட்டத்திற்குள் பெண் போட்டோ போடப்பட்டு செய்தியும் சுறுக்கப்பட்டிருந்தது .

ஒரே மாதிரியான கொடூர நிகழ்வு , பிறகு ஏன் ஒரே மாதிரியாக செய்தி வெளியிடப்படவில்லை . காரணம் கேட்ட பெண் செய்தியாளருக்கு கிடைத்த பதில் “அந்த பெண் அழகாக இருந்தால் , அதனை பெரிதாக போட்டால் பார்பார்கள் , இந்த பெண்ணை போட்டால் யார் பார்ப்பார்கள் “

 

அங்கு அழகு பிரதானமாக இருந்ததைப்போல இங்கு பொருளாதாரமும் சாதிய பின்னணியும் பிரபலம் இன்மையும் பிரதானமாக இருக்கிறது. இதேபோன்றதொரு நிலைப்பாட்டினை தான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்ற நானும் நீங்களும் நடுநிலை என சொல்லிக்கொள்கின்ற பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் எடுத்தன  .

சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தவுடன் , வைரமுத்து பதில் சொல்வதற்கு முன்பாகவே எத்தனை தொலைக்காட்சிகள் விவாதங்கள் நடத்தின , யார் யாரிடமோ கருத்துக்களை கேட்டன . எத்தனை அக்கறையோடு சமூக வலைதளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன  . ஆனால் அதில் ஒருபங்கு அக்கறை கூட ராஜலட்சுமி விவகாரத்திற்கு வழங்கப்படவில்லை .

 

ஒருவேளை ராஜலட்சுமி பிரபலமானவர்களின் பிள்ளையாக பிறந்திருந்தால் கவனிக்கப்பட்டு இருப்பாளோ என எண்ண தோன்றுகிறது . சமூக வலைதளம் என்பவை அதிகாரமில்லாதவர்களுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட அமைப்பு , அதையும் நாம் இன்று முறையாக பயன்படுத்தாமல் போகிறோமோ என எண்ணத்தோன்றுகிறது …இது மாறவேண்டும் , நம்முடைய குரல் ராஜலட்சுமிக்காகவும் ஒலிக்க வேண்டும் .

 




பாமரன் கருத்து

 

 

Share with your friends !
Exit mobile version